May 12, 2024
  • May 12, 2024
Breaking News
March 10, 2022

எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம்

By 0 746 Views

சூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா ஒருவரை கொலை செய்து விட்டார் என்று அவரது அம்மா சரண்யாவுக்கு தகவல் வர, தன் கணவர் சத்யராஜிடம் அவர், “நம்ம புள்ள ஒரு கொலை பண்ணிட்டானாம்…” என்று சொல்ல அதற்கு சத்யராஜ், “ஒண்ணுதானா..?” என்று சுவாரஸ்யமில்லாமல் கேட்க, அடுத்தடுத்து பல கொலைகள் சூர்யா செய்திருப்பதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.

சூர்யா சகட்டு மேனிக்குக் கொலைகளைச் செய்வதும், அதை அவரது பெற்றோர் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வதும் என்ன குடும்பம் இது என்று பதற வைக்கிறது..

படத்தில் சூர்யாவே சொல்வது போல், ” நான் கோர்ட்ல கருப்பு கோட்டு போட்டா ஜட்ஜ் வேற ஒருத்தர்… ஆனால் நான் வேட்டியை மடிச்சு கட்டினா இங்க நான்தான் ஜட்ஜ்…” என்கிறார். இந்தப்படத்தின் லைனும் அதுதான். கருப்பு கோட்டு போட்டு சட்டத்தால் சாதிக்க முடியாததை புறத்தே வந்து புஜ பலத்தால் சூர்யா சாதிப்பதுதான் கதை.

ஆனால் அவர் செய்ததாக சொல்லும் கொலைகளுக்கு நியாயம் வேண்டுமே..? இருக்கத்தான் செய்கிறது, படத்தின் கடைசி ஒருமணி நேரத்தில். 

சூர்யாவை வேட்டி கட்டி கடைசியாக கார்த்தி கல்யாணத்தில் பார்த்தது. அத்துடன் இந்தப்படத்தில்தான் பாண்டிராஜ் இப்படி ஒரு பாரம்பரிய வேடத்தை அவருக்கு கொடுத்திருக்கிறார். 

ஊரில் இருக்கும் பெண்கள் எல்லாம் “அண்ணே அண்ணே…” என்று கூப்பிடக் கூடிய பாசக்கார அண்ணனாக வளைய வருகிறார் சூர்யா. பெண்களுக்கு ஒரு அநீதி என்றால் தட்டிக்கேட்கும் முதல் ஆளாக நிற்பதே அவரது பலமாக ஆகியிருக்கிறது. 

ஆனால் ‘ஆட்டம் பாட்டம்’ பார்க்கப்போன ஜாலியான மூடில் சூரியின் கார் கதவு லாக் ஆகி சாவி உள்ளே மாட்டிக்கொள்ள, இன்னொரு சாவி அவரது வீட்டில் இருக்க, அதை இருந்த இடத்திலிருந்தே காரைத் திறந்து வைக்கும் லாவகத்தில் நாயகி பிரியங்கா மோகனை  ‘லைவ்’வாக பார்த்து லவ்வில் ‘லாக்’ ஆகிறார்.

கொஞ்ச காலமாக சூர்யாவை ‘காபி ஷாப் லவ்’களிலேயே பார்த்துக்கொண்டிருக்க இப்படி காட்டுத்தனமாக கிராமத்து லந்து பண்ணி லவ்வுவதைப் பார்த்தும் நெடுநாள் ஆகிறது. அவரும் சகட்டு மேனிக்கு காதலில் சாகசம் புரிகிறார். இன்னொரு பக்கம் எதற்கும் அஞ்சாமல் அவர் சிங்க முகம் காட்டி கர்ஜிப்பதும் கலக்கல்.

வெள்ளந்தி வேடத்தில் வரும் ப்ரியா மோகனும் அந்தப் பாத்திரத்தில் அழகாகப் பொருந்தியிருக்கிறார். அந்த அப்பாவித்தனத்தை வைத்தே அப்பா இளவரசுவின் கண்களில் மண்ணைத் தூவி சூர்யாவைக் கைப்பிடிப்பது சூப்பர்.

சூர்யாவின் பெற்றோராக வரும் சத்யராஜும் சரண்யாவும் கலகலப்பு கூட் டியிருக்கிறார்கள். சூர்யா காதலிக்கும் பெண்ணை பார்த்து “இருந்தாலும் நம்ம அளவுக்கு நீ டேஸ்ட்டான ஆளில்லை..!” என்பது சத்யராஜுக்கான குசும்பு. 

வினய்யை கோலிவுட்டில் வில்லனாகவே நேர்ந்துவிட்டார்கள் போலிருக்கிறது. அவரும் வருகிற படங்களில் எல்லாம் அத்தனை அதகளம் பண்ணிவிட்டு ஒண்ணும் தெரியாத பாப்பா போல் சிரித்துக் கொண்டிருக்கிறார். தென் தமிழகத்தில் இப்படி ஒரு ஹைடெக் வில்லனை இப்போதுதான் தமிழ் சினிமா பார்க்கிறது.

நகைச்சுவை ஏரியாவில் கிட்டத்தட்ட பாதி படத்தில் அறிமுகமாகும் சூரி தன் காட்சிகளின் கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார். குக் வித் கோமாளி புகழும் சூரி காம்பினேஷனில் கவனிக்க வைக்கிறார். ஆனால் ‘ராமர் ‘தான் பாவம் ‘ சிவனே ‘ என்று சிரிக்க வைக்க முடியாமல் வந்து வந்து போகிறார்.

படம் முழுக்க கூட்டம் கூட்டமாக மக்கள் நிறைந்திருக்கிறார்கள். அது ஒரு கிராமத்து உணர்வை அப்படியே பிரதிபலிக்க உதவியிருக்கிறது. பிரியங்கா மோகனை சூர்யா திருமணம் செய்யும் அந்த திருவிழா காட்சி அபாரம். அந்த விதத்தில் பாண்டிராஜுக்கு ‘பலே’ சொல்ல முடியும்.

ஆனால் அமைதியை விரும்பும் இயக்குனரான அவர் கையில் அரிவாள் கொடுத்து கதை எழுத வைத்திருக்கிறது இந்தப் படம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த சட்டமும் சமூகமும் சரியான தண்டனை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கோபத்தில் திரைக்கதையை எழுதி இருக்கிறார் பாண்டிராஜ் – அந்தக் கோபத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் சூர்யாவும்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு ரத்தினமாகவே ஜொலிக்கிறது. இமானின் இசை பின்னணி இசையில் தூக்கலாகவும், பாடல்களில் கொஞ்சம் தொங்கலாகவும் ஒலிக்கிறது.

‘நீதிமன்றத்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்…’ என்று கடந்த படத்தில் நம்ப வைத்த சூர்யா இந்தப் படத்தில் அதைத் தாண்டியும் பைசல் பண்ண வேலை இருக்கிறது என்று சொல்லி இருப்பதுதான் இடிக்கிறது. அதுவும் நேர்மையான நீதிபதி என்று படத்தில் வர்ணிக்கப்படும் விஜி வந்த மாத்திரத்தில் கிடைத்த சாட்சியத்தைக் கொண்டு சூர்யாவையே பொசுக்கென்று உள்ளே தள்ளுவது நீதிமன்றத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையைக் குறைக்கிறது.

முதல் பாதியில் கலகலப்புடன் றெக்கை கட்டி பறக்கும் படம் இரண்டாவது பாதியில் சென்டிமென்ட் தூக்கலாக கனக்கிறது.

விமர்சகர்களால் புகழப்படும் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் விமர்சகர்களின் அளவுகோலில் சிக்காத படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு விடுவதும் உண்டு. இந்தப் படம் இந்த இரண்டாவது வகையில் சேரும்.

எதற்கும் துணிந்தவன் – இரும்பான இதயங்களை பிளக்கும் ஈட்டி..!

 

.