September 20, 2024
  • September 20, 2024
Breaking News
June 16, 2023

எறும்பு திரைப்பட விமர்சனம்

By 0 245 Views

எளிய மனிதர்களின் பிரச்சினையைத் தொட்டுச் செல்லும் எளிமையான கதை. அதை இயல்பான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.சுரேஷ் ஜி.

விவசாயக் கூலியாக வேலை செய்யும் சார்லிக்கு, சூசன் இரண்டாவது மனைவி. இறந்து விட்ட முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கும் அவருக்கு சூசன் மூலம் ஒரு கைக்குழந்தையும் இருக்க, சித்தி சூசனின் கறார் வளர்ப்பில் முதல் மனைவியின் குழந்தைகளான மோனிகா சிவாவும், சக்தி ரித்விக்கும் சிக்கித் தவிக்க, அதிலிருந்து அவர்கள் விடுபட முடிந்ததா என்பதே கதை.

மோனிகாவை சில வருடங்களுக்கு முன்புதான் சின்னக் குழந்தையாகப் பார்த்தது போல் இருக்கிறது. இதில் பதின் பருவத்தில் பார்க்கும்போது இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று தோன்றுகிறது.

அம்மா இல்லாத நிலையில் தம்பியை அதே அளவு பாசத்துடன் வளர்த்து வரும் அவர், அப்பாவின் கஷ்டம் தெரிந்து நடந்து கொள்வதிலும், சித்தியின் கண்டிப்பான செயல்பாடுகளில் இருந்து தம்பியை காப்பதுமாக அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்.

இறந்து போன அம்மாவை நினைத்து போனில் பேசும்போது ஆற்றாமையில் எழும் அழுகையில் தியேட்டரையே கலங்க வைக்கிறார் மோனிகா.

தம்பியாக நடித்திருக்கும் சக்தி ரித்விக்கும், சித்தியை நினைத்து நடுங்கி அழுகையில் நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்.

சார்லியின் வயதுக்கு குறைவான வயதுள்ள பாத்திரம் என்பதால் ஒரு விக் வைத்து அவரைக் கொஞ்சம் இளமையாகக் காட்ட முயற்சித்து இருக்கிறார்கள்.

அதனாலேயே அவரது இரண்டாவது மனைவியாக சூசன் இருப்பது பொருத்தமாக இருக்கிறது. சூசனுக்குத் தெரியாமல் குழந்தைகளின் தேவைகளைத் தீர்ப்பது, சூசனை எதிர்க்கவும் முடியாமல் தடுமாறுவது என்று இருதலைக் கொள்ளியாக இயல்பாக நடித்திருக்கிறார் சார்லி.

சூசனைக் கொடுமைக்கார சித்தியாக காட்ட முயன்று இயக்குனர் தோற்று இருக்கிறார். அப்படி ஒன்றும் அவரது பாத்திரம் கொடுமைகளைச் செய்யவில்லை. 

அதேபோல் சார்லிக்குக் கடன் பிரச்சினை பூதாகரமாக இருப்பதாகக் கதை சொல்கிறது. ஆனால், கடன் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர் பேசும் பேச்சுகளை விட, சார்லியும், அவரது  குடும்பமும், அவரைப் பேசும் பேச்சுகள் யாரிடமும் கடன் வாங்கிவிட கூடாது என்று அறிவுறுத்துவதை விட யாருக்கும் இரக்கப்பட்டு கடன் கொடுத்து விடக் கூடாதென்றுதான் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறது.

படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவது சற்றே சிறப்புத் திறனாளியைப் போன்று வரும் ஜார்ஜ் மரியான்தான். அவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டர் கலகலப்புக்கு உள்ளாகிறது. 

அருண் ராஜின் இசை படத்த்துக்குப் போதுமான பங்களிப்பை செய்திருக்கிறது. 

சூசன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் பாத்திரங்களை இன்னும் பயப்படும்படியாக படைத்திருந்தால் இந்தப்பட நோக்கம் முழுமையாக நிறைவேறி இருக்கும்.

எறும்பு – எளிய முயற்சி..!