சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த மதுரைக்கார ஹீரோவுக்கும், அவரது நண்பருக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரும்பணம் கிடைக்க, அவர்கள் படும்பாடு என்ன, மற்றவர்களைப் படுத்தும் பாடு என்பதும் கதை.
எந்த நோக்கத்துக்காக சென்னை வந்தார் என்றே சொல்லப்படாத ஹீரோவாக ஹீரோ மிதுன் மகேஸ்வரன். வழியில் பார்த்த ஒரு நபரையே நண்பராக்கிக் கொண்டு அவர் செய்யும் அலப்பறைகள் போதாதென்று ஒரு அழகான பெண்ணும் அவர் கண்ணில் சிக்கி காதலில் விழ… மனிதருக்கு மச்சம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பார்வைக்கு ஐடி துறையைச் சேர்ந்தவர் போலவே இருப்பதில் மிதுனுக்கு பாஸ் மார்க். அப்பாவி போன்ற முகம் அவரது வேடத்துக்கு ப்ளஸ் பாய்ண்ட். ஆனால், கேரக்டரைசேஷன்தான் அவர் பாவியா, அப்பாவியா என்பது புரியாத பெரும் குழப்பம்.
அவரது ஊர் நண்பராக வரும் அப்புக்குட்டியும் அவரைப் போலவே. யாரும் பயன்படுத்தாத கட்டிடத்தில் தங்கிக்கொண்டு ஒரு நாயை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார். (அந்த நாயின் ‘மைன்ட் வாய்ஸ்’ வேறு பயமுறுத்துவது ஆதிகாலக் கற்பனை…)
நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் காதலிக்கத் தோதாக இருக்கிறார். ஹீரோவை தனியே சந்தித்து வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டும் என்பதும், அதன் தொடர்பாக தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆளைப் பற்றிய விவரம் வேண்டுமென்று ஹீரோவிடமே கேட்பதும் ஏற்கனவே பார்த்த சம்பவங்கள் என்றாலும் இந்தக் காதலைக் கடத்த உதவியாக இருக்கிறது.
ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர், காமெடியன் சாம்ஸ் என்பதுதான் ஆகப்பெரிய காமெடி. இந்தத் திருமணம் நடக்கவே போவதில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்.
பணத்தாசை கொண்ட போலீஸ் அதிகாரியாக அருள்தாஸ் கச்சிதம். அந்தனைக் கோடி மதிப்புமிக்க டாலர்கள் கொண்ட பையை அப்படியா அனாவசியமாக காரில் கைவிட்டு எடுத்துப்போகும் அளவுக்கு அசால்ட்டாக இருப்பார்..?
அதேபோல் அப்புக்குட்டி தங்கியிருந்த பாழடைந்த இடம் ஒரு நவீன போலீஸ் ஸ்டேஷனாக மாறுவதற்கு எத்தனைக் காலம் பிடித்திருக்கும்..? பணத்தைப் புதைத்த அந்த இடத்துக்கு அத்தனைக் காலமும் இவர்கள் வந்து பார்க்கவே இல்லையா..? அப்புக்குட்டி கேட்டதற்காக நர்ஸ் மதுமிதா அப்படியா அவ்வளவு துக்க மாத்திரைகளை மருத்துவமனையிலிருந்து அள்ளித் தருவார்..?
இப்படியான லாஜிக்கில்லாத மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இல்லாத நேர்க்கோடான திரைக்கதை பலவீனமாக இருக்கிறது.
ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு உன்னதம். ஸ்ரீ விஜய்யின் இசையும் ஓகே…
எங்க காட்டுல மழை – நாட்டுல தூறல் மட்டும்தான்..!