இஎம்ஐ என்கிற மாதத் தவணைத் திட்டங்கள்தான் அனேகமாக எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலும் பொருள்களைச் சேர்க்க உதவும் ஒரே வழியாக இருந்து வருகிறது.
‘ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற அளவில் வருமானத்துக்கு அதிகமான அளவில் மாதத் தவணைத் திட்டங்களில் சிக்கிக்கொண்டால் இன்றைய நிலவரப்படி அதை வசூலிக்க வங்கிகள் எப்படி எல்லாம் மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது.
படத்தை இயக்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜே கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
அம்மா செந்திகுமாரியுடன் வாழ்ந்து வரும் பட்டதாரியான அவர் வருடாந்திர மாம்பழ சீசனில் மட்டுமே வேலை இருக்கக்கூடிய பழச்சாறு தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கிறார். பெரிதாகக் கனவுகள் எதுவும் இல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வரும் அவர் சாய் தன்யாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார்.
அந்தக் காதல் ஒரு கட்டத்தில் கனிய, காதலியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றவென்று தவணை முறையில் மோட்டர் பைக் வாங்குகிறார். காதல் முதிர்ந்து கல்யாணம் வரை வந்து சேர, மனைவியை கெத்தாக அழைத்துக் கொண்டு போக, அடுத்ததாக தவணை முறையில் காரையும் வாங்கி விடுகிறார்.
இதெல்லாம் அம்மா செந்திக்குக் கொஞ்சம் கவலையைத் தந்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை சதாசிவம். மனைவியாகிவிட்ட சாய் தன்யாவை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதால் மாதத் தவணை பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் இருக்கிறார்.
ஆனால் மாம்பழ சீசன் முடிந்து அவர் வேலைக்கு ஆப்பு வர, இந்த மாதத் தவணைகளைக் கட்ட முடியாமல் அல்லலுற்றவர் என்ன ஆனார் என்பதுதான் மீதிக் கதை.
பழகாத முகம் என்பதால் மட்டுமே சதாசிவம் சின்னராஜ் புதுமுகமாகத் தெரிகிறார் மற்றபடி நடிப்பதில் எந்தப் பதட்டமும், தயக்கமும் இல்லாமல் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவர் பேசும் மாடுலேஷனை மட்டும் கொஞ்சம் திருத்திக் கொள்ள வேண்டும்.
பட்ஜெட் படங்களுக்கெல்லாம் ஒரே நாயகி என்ற அந்தஸ்தை சமீபகாலப் படங்களில் பெற்றிருக்கும் சாய் தன்யா இந்தப் படத்திலும் நாயகியாகி, இரண்டு பாடல்களுக்கு நடனமாடி காதல், ஊடல், கூடல் என்று படம் நெடுக வருகிறார்.
சாய் தன்யாவின் தந்தையாக இயக்குநர் பேரரசு நடித்திருப்பது படத்துக்கு பலத்தைச் சேர்க்கவில்லை. செந்தி குமாரி வழக்கமான அம்மாவாக வந்து போகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாதத் தவணை வசூலிக்க வரும் ஆதவன், லொள்ளு சபா மனோகர் இவர்கள் எலலாம் இருந்தும் தவணை முறையில் கூட நம்மைைச் சிரிக்க வைக்க முடியவில்லை.
திடீரென்று படத்துக்குள் வரும் ஓ.ஏ.கே.சுந்தர், ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் இரண்டு காட்சிகளில் வந்து காணாமல் போகிறார்.
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையும், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிசும் படத்துக்குப் பழுதில்லாமல் வேலை பார்த்திருக்கிறார்கள்.
வழக்கமான ஒரு கமர்ஷியல் படத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அதையெல்லாம் குறை இல்லாமல் கொண்டு வந்திருக்கும் இயக்குனர் சதாசிவம் சின்னராஜ் முயற்சியில் எந்தக் குறையும் இல்லை. ஆனால் அவற்றை சுவாரசியமாகத் தருவதில்தான் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்.
மாதத் தவணயில் மாட்டியவர்கள் எல்லோருமே அதில் சிக்கி சின்னாபின்னப்படுகிறார்கள் என்பது போல் ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லி இருப்பதை மாற்றி பேராசைக்காக இல்லாமல் தேவைக்கேற்ற அளவில் வரவுக்கேற்ற தவணை முறையைக் கைக் கொண்டால் திருப்தியுடன் வாழலாம் என்று சொல்லி இருக்கலாம்.
ஏனென்றால் இன்றைக்கு நடுத்தர குடும்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் வீட்டுக் கடன் உட்பட பல இஎம்ஐகளில் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெருகிவரும் வசதிகளை எல்லோரும் அனுபவிக்க வேண்டுமானால் அதற்கு இதுபோன்ற தவணைத் திட்டங்கள்தான் பெருமளவு உதவி புரிகின்றன.
மற்றபடி நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்கினால் அதற்கு அரசு தரும் காப்பீடுகள் எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மை தருகின்றன என்கிற உண்மையை உரத்துச் சொல்லி இருப்பதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.
அதற்காகவே மாநில அரசு படத்துக்கு வரி விலக்கு தந்து கௌரவிக்கலாம்.
இஎம்ஐ – இம்சிக்கும் தவணை..!
– வேணுஜி