September 7, 2024
  • September 7, 2024
Breaking News
July 5, 2024

எமகாதகன் திரைப்பட விமர்சனம்

By 0 506 Views

பாஞ்சாலி சபதம் எல்லோரும் கேள்விப்பட்டு இருப்போம். இது, கிட்டத்தட்ட அதே போன்றதொரு ‘பாஞ்சாயி சாபம்’. இதை ‘மண்ணாசை’ மணத்தோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷன் ராஜ்.

சிறு தெய்வ வழிபாடுகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு பெண்ணின் சோகக் கதை இருக்கும். அப்படி ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாஞ்சாயி என்ற பெண் கைம்பெண்ணான தனக்கு நேர்ந்த கொடுமையின் காரணமாக ஒரு சாபத்தை விட்டுச் செல்கிறாள். 

அதன்படி அந்த கிராமத்தில் மூத்த மகன்கள் யார் திருமணம் செய்து கொண்டாலும் அவனுடைய மனைவி விதவையாவாள். இந்த சாபத்திலிருந்து மீள்வதற்காக பாஞ்சாயியை சிறு தெய்வமாக்கி அந்த கிராமமே வழிபட்டு வருகிறது. ஆனாலும் பரம்பரை பரம்பரையாக குடும்பத்தின் மூத்த மகன் திருமணம் செய்து கொண்டதும் இறந்து விட அவன் மனைவி விதவையாவது தொடர்கிறது.

இதற்கு பயந்து கொண்டு சில பேர் ஊரை விட்டுக் கிளம்பிப் போவதும், இருக்கும் சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்வதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த கார்த்திக் ஸ்ரீராம் தன் காதலி ராஸ்மிதா ஹிவாரியைத் திருமணம் செய்து கொள்ள, கார்த்திக் ஸ்ரீராமும் அகால மரணம் அடைகிறார். அதில் நிலைகுலைந்து போனாலும் ராஸ்மிதாவுக்கு இந்த சாப விஷயத்தில் நம்பிக்கை இல்லாததால் தன் கணவன் மரணம் எப்படி நடந்தது என்பதை கார்த்திக்கின் நண்பர் மனோஜின் துணையுடன் கண்டுபிடிக்க முயல்கிறார். அது நடந்ததா என்பதுதான் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் ஸ்ரீராம், நாயகியாக நடித்திருக்கும் ராஸ்மிதா ஹிவாரி இருவரும் திரைக்குப் புதியவர்களாக இருந்தாலும் இளமையால் கவர்கிறார்கள். ராஸ்மிதாவுக்கு அழுத்தமான பாத்திரம் என்பதால் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கார்த்திக்கின் நண்பராக நடித்திருக்கும் மனோஜ்தான் கிட்டத்தட்ட ஹீரோ போல் உண்மையைக் கண்டுபிடிக்க உதவுகிறார். உடைந்து போன ராஸ்மிதாவுக்கு உத்வேகம் கொடுத்து அளவான நடிப்பில் கவர்கிறார் மனோஜ். 

வில்லன் வேடம் ஏற்றிருப்பவரும், இன்ன பிற நடிகர்களும் இயல்பாக நடித்திருப்பதால் சோர்வடையாமல் படத்தைப் பார்க்க முடிகிறது.

விக்னேஷ் ராஜா இசையில், பாடல்கள் கேட்க வைக்கின்றன. பின்னணி இசை பாஞ்சாயி கோட்டோவியக் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

எல்.டியின் இயல்வான ஒளிப்பதிவு சம்பவங்களை நேரில் பார்த்தது போன்று உணர வைக்கிறது. 

மண்ணாசை மனிதர்களை எப்படி எமகாதவர்களாக மாற்றுகிறது என்பதை எளிய நடிகர்கள், சிறிய பட்ஜெட்டில் சொல்லி அலுப்பில்லாமல் படத்தை நகர்த்தி இருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். 

இரண்டாவது பாதியில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் படம் நிறைவடையும் போது முழுமை கிடைத்திருக்கும்.

சிறு தெய்வங்கள் எப்படி மனிதர்களை காப்பாற்றுகின்றனவோ அப்படியே சிறுபடங்கள்தான் சினிமாவைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. 

அப்படி சிறிய முதலீட்டு படமாக இருந்தாலும், அதற்கு நியாயமாக, நேர்த்தியான ஒரு படத்தைக் கொடுத்துப் பார்க்க வைத்திருக்கிறார்கள். 

எமகாதகன் – ஏமாற்றவில்லை..!