October 5, 2024
  • October 5, 2024
Breaking News
December 21, 2023

டங்கி திரைப்பட விமர்சனம்

By 0 413 Views

இந்தி(ய) சினிமாவின் முன்னணி வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் ராஜ்குமார் ஹிரானியும், முன்னணி நடிகரான ஷாருக் கானும் கைகோர்த்து இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான படம் இது.

அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா பார்ப்போம்..!

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக…” என்பார்கள். அப்படி உள்ளூரில் சம்பாதிக்க வழி இல்லாமல் இருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த லல்டு கிராமத்தில் இருக்கு மூன்று நண்பர்கள், ஒரு நண்பி நால்வரும் இங்கிலாந்து செல்லத் திட்டமிடுகின்றனர். 

விசா எடுக்க எந்த வகையிலும் தகுதி இல்லாத அவர்களை இங்கிலாந்து அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து குறுக்கு வழியில் டங்கியாக அழைத்துச் செல்கிறார் முன்னாள் ராணுவ வீரரான நாயகன் ஷாருக் கான்.

அதென்ன டங்கி வழி..? 

விசா இல்லாமல் திருட்டுத்தனமாக பல நாடுகளையும் கடந்து இங்கிலாந்து செல்வதுதான் டங்கி வழி. டாங்கி… அதாவது கழுதை செல்லும் பாதை என்பதன் இந்திய மொழியாக்கம்தான் இந்த டங்கியாம்.

அது என்னவோ ஷாருக்கான் படம் என்றாலே அவருக்கு இளைய மற்றும் வயதான கெட்டப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள். இதிலும் வயதானவராக படத்தின் தொடக்கத்தில் வருபவர் பிளாஷ்பேக்கில்  இளைஞராக வருகிறார். 

இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் வயோதிக நோயாளியாக இருக்கும் படத்தின் நாயகி டாப்ஸி பண்ணு, மருத்துவமனையில் இருந்து தப்புவதில் தொடங்குகிறது படம். இந்தியாவுக்கு வருவதற்கு அவருக்கு விசா மறுக்கப்பட, துபாய் வரை செல்ல முடிகிறது. அங்கிருந்து இந்தியா செல்ல வழி இல்லாததால் இந்தியாவில் இருக்கும் பழைய நண்பரான ஷாருக்கை நாடுகிறார்.

25 வருடங்கள் கழித்து டாப்ஸியிடமிருந்து தொலைபேசி வந்ததில் ஆடிப் போகும் வயோதிகர் ஷாருக்கான், டாப்ஸிக்கு உதவ நினைக்கிறார். அதேபோல் டாப்ஸியும் இங்கிலாந்தில் இருக்கும் தன் இரு நண்பர்களுடன் துபாய் புறப்படுகிறார்.

ஷாருக்குக்கும் டாப்சிக்கும் என்ன உறவு, அந்த இரு நண்பர்கள் யார், அவர்களுக்கு ஏன் இந்தியா செல்ல விசா கிடைக்கவில்லை என்பதற்கெல்லாம் பிளாஷ் பேக் பதில் சொல்கிறது.

ஷாருக் கானின் நடிப்பு பற்றிப் புதிதாக சொல்லத் தேவையில்லை. அதேபோல் வயதான வேடத்திற்கும் இளைய வேடத்திற்கும் அவர் எப்போதும் அலட்டிக் கொள்வதும் இல்லை. கொஞ்சம் போல முடியிலும் தாடியிலும் வெள்ளை பூசிக் கொண்டு வந்தால் முதியவராகி விடுகிறார் – முழுக்க மழித்துக் கொண்டால் இளையவர்… அவ்வளவே..!

இங்கிலாந்து போக முடியாததால் மனம் உடைந்து எரிந்து சாம்பலான நண்பனின் அஸ்தியை வைத்துக்கொண்டு ஷாருக் இங்கிலாந்து நீதிமன்றத்தில் பேசும் வசனம் மனம் உருகத்தக்கது அந்தக் காட்சியில் அவரது நடிப்பு அபாரம். அதேபோல் கிளைமாக்சிலும் அசத்தி விடுகிறார் கிங் கான்.

டாப்ஸி பண்ணுவின் நடிப்பும் அற்புதமாக அமைந்திருக்கிறது. அவருக்கும் வயதான மற்றும் இளைய கெட்டப்புகள் இரண்டு. ஷாருக்கிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சிகளில் தெறிக்க விடுகிறார் டாப்ஸி. தன் லட்சியத்திற்காக இங்கிலாந்தில் பொய் பேசி குடியுரிமை பெரும் குற்ற உணர்ச்சியிலும் டாப்ஸி நடிப்பு டாப் கிளாஸ்.

இவர்களுக்கு இணையான வேடத்தில் வந்து கலக்கி இருக்கிறார் விக்கி கௌஷல். இங்கிலாந்து சென்றுவிட்ட தன் காதலியை மீட்க அவர் போராடும் போராட்டத்திலும் அது முடியாமல் போய் தற்கொலை செய்து கொள்ளும் இடத்திலும் நடிப்பில் மிரட்டி விடுகிறார் விக்கி.

டாப்சியின் இரண்டு நண்பர்களாக வரும் நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அத்துடன் இவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக வரும் போமன் இராணியின் நடிப்பும் கலகலப்பின் உச்சம். அவர் நடத்தும் ஆங்கில வகுப்புகள் அனைத்தும் நினைத்து ரசித்து சிரிக்க வைப்பவை.

படத்தின் முன் பாதி புயல் வேகத்தில் கடக்கிறது அதற்குக் காரணம் அட்டகாசமான காட்சி அமைப்புகளும் சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் வசனங்களும்தான். படத்தின் அடிநாதமான டங்கி பகுதிகள் இரண்டாம் பாதியில்தான் வருகின்றன. 

கலகலப்பாக நகரும் முன்பாதியின் இயல்புத் தன்மை இரண்டாம் பாதியில் கொஞ்சம் சினிமாசாயம் பூசிக் கொள்கிறது. 

அதேபோல் படத்தின் கதையும் நம்பகத்தன்மை இல்லாமல்தான் இருக்கிறது. டங்கி வழியில் திருட்டுத்தனமாக இன்னொரு நாட்டுக்குள் அத்துமீறி பிரவேசிப்பது சட்டப்படியான குற்றமாக இருக்க அதில் இவர்கள் படும் சிரமங்கள் நமக்கு ஒட்டவில்லை.

அவர்கள் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கும் நோக்கமும் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதால் இவர்கள் சென்றால் என்ன, செல்ல முடியாவிட்டால் என்ன என்ற பிடிப்பில்லாமல்தான் போகிறது.

தேசப்பற்று கொண்ட ஒரு ராணுவ வீரர் திருட்டு வழியில் இங்கிலாந்துக்கு இவர்களை கூட்டிப் போவதையும், மீண்டும் அதே திருட்டு வழியில் இந்தியா கொண்டு வருவதையும் ஏற்பதற்கு மனம் ஒப்பவில்லை.

டாப்ஸி பண்ணுவின் பாத்திரம் முழுக்க சுயநலம் கொண்டதாகவே உணர முடிகிறது. காரியம் ஆக வேண்டுமென்றால் ஷாருகின் காதலை நாடுகிறார். மற்ற இடங்களில் மறந்து போகிறார்.

“எங்கள் நாட்டில் வாழவே வழியில்லை…” என்று இந்தியாவைப் பற்றிக் குறை சொல்லி இங்கிலாந்தில் தங்கும் டாப்ஸியை தேசப்பற்று கொண்ட ஒரு ராணுவ வீரரான ஷாருக்கால் தொடர்ந்து காதலிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

அத்துடன் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பொதுவான விஷயம், இந்தியா தொடங்கி பாகிஸ்தான், ஈரான், இங்கிலாந்து வரை எங்கே வேண்டுமானாலும் லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும் என்பதுதான்.

இத்தனை லாஜிக் ஓட்டைகள் இதற்கு முன் இந்த இயக்குனரின் படங்களில் இருந்தனவா என்பதும் இன்னொரு கேள்விக்குரிய விஷயம்.

லாஜிக்கை மறந்து விட்டுப் பார்த்தால் சிரித்தும் சிந்தித்து விட்டும் வரக்கூடிய படமாக இருக்கிறது டங்கி.

நட்பு, காதல், பாசம், குடும்ப உறவுகள் என்று அத்தனை மனித உணர்வு நிலைகளையும் வைத்து எழுதி இருக்கக்கூடிய திரைக்கதை படத்தின் சிறப்பு.

அத்துமீறி எல்லை கடக்கும் விஷயங்களை இவ்வளவு சுவாரசியமாகப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் எல்லை கடப்பார்களோ என்று நமக்கு சந்தேகம் ஏற்படுவது நியாயமே. ஆனால் அப்படிப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்று நிஜத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ( படு பயங்கரம்…) வைத்து நம்மை எச்சரிக்கிறார் இயக்குனர்.

டங்கி – அச்சுறுத்தி ஆசி தரும் சாமக் கோ’டங்கி..!’

– வேணுஜி