தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து, திரையரங்கு வளாகத்தை சிலா் முற்றுகையிட்டனா். தொடா்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
அப்போது, திரையரங்கம் எதிரே பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, திரையரங்கு மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.ராஜன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் திரையரங்கு அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.