வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.
மனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தி மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றுவதுதான் படம்.
பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் ரிச்சர்டுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் படம் இது . அன்பு கொண்ட கணவராகவும், வீரமுள்ள சிலம்ப ஆசானாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். பிணையில் வந்த பின் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நடித்து அவர் செய்யும் செயல்களை நடிப்பில் நியாயப்படுத்துகிறார்.
ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான உடலமைப்புடன் இருக்கிறார். சிறையிலிருந்து வந்த பின் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நடித்து அவர் செய்யும் செயல்களை நடிப்பில் நியாயப்படுத்துகிறார்.
திரெளபதி எனும் பெயரில் நடித்திருக்கும் ஷீலா, நாட்டில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் பெண்ணாக வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை அவர் அம்பலப்படுத்துவது கைதட்டல் பெருகிறது.
காவல் அதிகாரியாக நடித்திருக்கும் நிஷாந்த் அந்த வேடத்துக்கு சரியாக பொருந்தவில்லை. மருத்துவரான லெனாகுமார், சமூக சேவகி செளந்தர்யா, வழக்குரைஞராக நடித்திருக்கும் கருணாஸ், கோபி, இளங்கோ உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஜூபினின் இசையும், மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஆணவக் கொலை என்று வருகிற செய்திகளை அப்படியே நம்பாதீர்கள் உண்மை வேறுமாதிரி இருக்கிறது என்று நிறுவ முயன்றிருக்கிறார் மோகன்.ஜி. படத்தின் வசனங்களும் காட்சிகளும் முக்கியம், என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் அவர்.
ரிச்சர்ட் சென்னை வந்து தேநீர் விற்கிறார் எனும்போது அவரை யாருக்குமே தெரியவில்லை என்பது லாஜிக் குறைபாடு. இப்படி சில குறைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். போலியான வழக்கறிஞர்கள், போலியான பதிவு திருமணங்களைப் பற்றி உரக்கப் பேசியிருக்கிறார் அவர்.
திரெளபதி – எதிர் வினை..!
Related