November 24, 2024
  • November 24, 2024
Breaking News
May 13, 2022

டான் திரைப்பட விமர்சனம்

By 0 825 Views

வம்பு வழக்குகள், அடிதடி கேஸ்களைத் திறம்பட கையாண்டு முடித்து கொடுப்பவன் மட்டும் ‘டான்’ அல்ல – தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்து காட்டுபவனும் தான்தான் என்று ‘டானு’க்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

அதனிடையில் பெற்றோரும் ஆசிரியர்களும் நம்மீது கண்டிப்பு காட்டுவதும் கோபப்படுவதும் நமது நன்மைக்குத்தான் என்றும் பல காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்.

இதை அப்படியே சொன்னால் ஒரு நீதிக்கதை போலாகி வடும் என்பதால் காமெடி, காதல், ஆக்ஷன், சவால், சென்டிமென்ட் என்றெல்லாம் கமர்ஷியல் மசாலா தூவி ‘கம கம’வென்று கொடுத்திருக்கிறார் சிபி.

அதற்குத் தோதாக வந்து வாய்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்றே சொல்லலாம். 

நாயகன் சிவகார்த்திகேயன் வரும் 30 வயதுக்குள்ளான வேடத்தில் ‘மூன்று முகம்’ காட்டி இருப்பது சிறப்பு. அதில் பள்ளிக்காலம் கொஞ்சமாகவும், கல்லூரிக்காலம் அதிகமாகவும் மிச்ச சொச்சம் அதற்கடுத்த பருவமாகவும் வாய்த்திருப்பதை வித்தியாசம் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் சிவா.

வாழ்க்கையில் எந்த இலக்கும் வைத்துக்கொள்ளாமல் அது போகிற போக்கில் ஏற்றுக்கொண்டு அவ்வப்போது அப்படி ஆகலாமா, இப்படி ஆகலாமா என்று சதா மனதை மாற்றிக் கொண்டே இருக்கும் கேரக்டர் சிவகார்த்திகேயனுக்கு ‘நச்’சென்று பொருந்தியிருக்கிறது.

அப்பா மீதான பயம், கல்லூரியில் வைஸ் பிரின்ஸ்பால் ஆக வரும் எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால்விட்டு ஜெயிக்கும் திறன், பிரியங்கா மோகனுடனான காதல், நண்பர்களுடனான லூட்டி என்று ஒவ்வொரு அம்சத்திலும் அவரது பாணியிலேயே நடித்து கொள்ளை கொள்கிறார். கடைசியில் செண்டிமெண்டையும் விட்டுவிடாமல் குடும்ப ரசிகர்களையும் கவர்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கென்றே நேர்ந்து விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது பிரியங்கா மோகனை. அடுத்தடுத்த படங்களில் அவருடன் நாயகியாகும் வாய்ப்பு இவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. சல்லிசான வேடம் என்பதால் மெல்லிசான எஃபர்ட் போட்டு கடந்து விடுகிறார் பி.மோ.

எந்த வேடம் என்றாலும் அந்த வேடத்துக்குள் எப்படித்தான் தன்னை அடைத்து கொள்கிறாரோ சமுத்திரக்கனி..? கண்டிப்பான அப்பா பலரைப் பார்த்திருக்கிறோம். இதில் சிவாவின் அப்பாவாக முரட்டு தோற்றத்தில் வந்து பயமுறுத்தவே செய்கிறார் சமுத்திரக்கனி. இரும்புக்கடை வியாபாரியாக வரும் அவர், ஆளும் இரும்பு மனிதராகவே இருப்பது சிறப்பு.

‘மாநாடு’ படத்துக்குப் பிறகு அதிக அப்ளாஷ்களை அள்ளும் வேடத்தில் வந்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. மாணவ மாணவிகளை பாடாய்ப்படுத்தும் கேரக்டரில் இப்படியும் ரசிக்க வைக்க முடியும் என்பது அவரால்தான் சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் சிவா விஷயத்தில் மட்டும் அவர் போடும் கணக்குகள் தப்பாகிப் போவதும் சிம்புவிடம் மாநாட்டில் மாட்டிக்கொண்டது போல் இதில் சிவாவிடம் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார் எஸ்.ஜே.எஸ்.

காமெடிக்கு இயக்குனர் அதிக ஒதுக்கீடு கொடுத்திருப்பதால் பள்ளி ஆசிரியராக மனோபாலா, கல்லூரி பேராசிரியர்களாக ராம்தாஸ், காளி வெங்கட், கல்லூரி முதல்வராக ஜார்ஜ் மற்றும் சிவாவின் தோழர்களாக வரும் சூரி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், நடிகர் சிங்கம்புலி என்று ஏகப்பட்ட காமெடியன்கள் படத்தில் இருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு பிரியங்காவின் தோழியாக சிவாங்கி. அவர் சிவாவின் மீது கிரஷ் கொள்ளும் காட்சி ‘ஃப்ரெஷ்..!’

அவரவர் பங்குக்கு அவரவர் பங்களித்து இருந்தாலும் சிவாவின் அப்பாவாக கல்லூரியில் ‘நடிக்க’ வரும் சூரி, சிவாவுடன் பேசும் அந்த ‘பாஷை’ வயிறு வலிக்கும் காமெடி ஆகியிருக்கிறது. தமிழையே தமிழ் போல் அல்லாமல் வேறு மொழியாக இருவரும் பேசுவது சரியான காமெடி.

கல்லூரி பேராசிரியர்களுக்கு மாணவர்கள் தகுதித் தேர்வு நடத்துவது எல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லை. ஆனால் காமெடிக்கு அது பெரிதாக உதவியிருக்கிறது.

தான் வெளியேற்றப்பட்ட கல்லூரிக்கு தலைமை விருந்தினராக வரும் அளவுக்கு சிவா வாழ்க்கையில் முன்னேறி அதே கல்லூரிக்கு வருவது தலைமை விருந்தினராக அல்ல… வேறு எதற்காக என்பதும் ‘சர்ப்ரைஸ் காமெடி’.

சமுத்திரக்கனியின் அகால மரணம் செண்டிமெண்டுக்கு உதவினாலும் சட்டென்று அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்து விட அதை திரையில் வண்ணமயமாக காணும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தருகிறது. அதற்கு கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவும் வண்ணங்களை வாரி இறைத்து ஒத்துப்போகிறது.

முன் பாதியிலும் பின் பாதியிலும் படத்தில் சில காட்சிகள் நீள நீளமாக இருப்பதைக் குறைத்திருந்தால் இன்னும் இந்த படத்தை இடைவிடாமல் ரசித்து இருக்க இயலும்.

ஆனாலும்…

டான் – ஜெயிச்சுட்டான்..!