April 26, 2024
  • April 26, 2024
Breaking News
October 9, 2021

டாக்டர் படத்தின் திரை விமர்சனம்

By 0 472 Views

பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா தொடர்ந்து சேரன், பாலா, அமீர் எல்லாம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டது ஒரு காலம். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்றவர்களின் சீசன்.

சீரியசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சீரியஸைக் கொண்டுவராமல் இலகுவாக நகைச்சுவையுடன் அமைப்பது இவர்களது பாணி. இன்றைய இளைய ஹீரோக்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.

இந்தப் படத்திலும் அப்படித்தான். சிறுமிகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். டாக்டராக வரும் ஹீரோ சிவகார்த்திகேயன் திருமணம் செய்ய விரும்பும் பிரியங்கா மோகனின் அண்ணன் மகளும் கடத்தப்பட்ட சிறுமிகளில் ஒருவராக இருக்க அவர்களைக் கண்டுபிடிக்க சிவகார்த்திகேயன் களத்தில் இறங்குகிறார்.

காபியை சூடாகப் பருக வேண்டும் என்பது நியதி. ஆனால் ‘ கோல்ட் காபி ‘ என்பதும் புழக்கத்தில் வந்து விட்டது போல் சிறுமிகள் கடத்தல் என்கிற கனமான களத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதை இறுக்கமாகச் சொல்லாமல் டார்க் ஹியூமர் என்கிற ஜேனரில் சொல்லி முதல் காட்சியில் இருந்தே நகைச்சுவையில் தியேட்டரை தெறிக்க விடுகிறார் இயக்குனர் நெல்சன்.

ராணுவத்தில் டாக்டராக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகனை கண்டவுடன் காதல் கொண்டு அவர்கள் வீட்டிற்கு பெண் பார்க்க செல்லும்போது சிவகார்த்திகேயனின் ஒழுங்கான கேரக்டர் பிரியங்கா மோகனுக்கு பிடிக்காமல் போக திருமணத்துக்கு தடை வருகிறது. அதே நேரத்தில் பிரியங்காவின் அண்ணன் மகள் கடத்தப்பட அந்த சூட்டோடு அந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு களமிறங்குகிறார் சிவா.

பெண் பார்க்கச் செல்லும்போது சட்டையின் காலர் பட்டனையும் போட்டுக்கொண்டு சிவகார்த்திகேயன் செல்ல அதை பார்த்த பிரியங்கா மோகன் “எப்போதுமே இந்த பட்டனை போட்டுக்குவீங்களா..?” என்று கேட்க, “போட்டுக்கத்தானே அதை வச்சிருக்காங்க..?” என்று சிவா சொல்வதிலிருந்து தொடங்குகிறது அமளிதுமளி.

வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலந்து விழும் வசனங்களில் முதல் பாதிப் படம் கடந்ததே தெரியவில்லை. இரண்டாவது பாதிப் படத்தில் அந்த அளவுக்கு நகைச்சுவை இல்லாமல் கொஞ்சம் சீரியஸ் பக்கம் திரும்புவதால் அந்த கலகலப்பு கொஞ்சம் மிஸ் ஆகிறது. ஆனால் கடைசி காட்சியில் சென்டிமென்ட் கலந்து பேலன்ஸ் செய்கிறார் இயக்குனர்.

சிவகார்த்திகேயன் நீட் எழுதி டாக்டர் ஆனாரா என்பது தெரியவில்லை என்றாலும் எதிலும் ஒழுங்கை விரும்பும் பாத்திரம் என்பதால் படம் முழுவதும் நீட்டாக வருகிறார். நடிப்பையும் ஒயிட் காலர் ஜாப் போல அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறார். குகைக்குள் நடக்கும் அந்த மெட்ரோ ரயில் சண்டை அமர்க்களம்.

சட்டையில் அழுக்கு படாமல் அத்தனை குழந்தைகளையும் கடைசியில் மீட்டுக் கொண்டு வர அதில் ஒரு குழந்தை மட்டும் வராதது தெரியவே மீண்டும் வில்லன் இருப்பிடத்திற்கு சென்று அவர் ரத்தக்களறி ஆவதில் நெகிழ வைக்கிறார்.

ஒருகட்டத்தில் கடத்தப்பட்ட சிறுமையை மீட்கும் சாத்தியம் சிவகார்த்திகேயனின் கைகளுக்கு வந்துவிட ஆனால் கடத்தப்பட்டிருக்கும் அத்தனை குழந்தைகளையும் அவர் மீட்க முடிவெடுப்பது ஹீரோயிசத்தில் உச்சம்.

சும்மாவே சிவகார்த்திகேயன் படங்களை குழந்தைகளுக்குப் பிடிக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான்… குறிப்பாக பெண் குழந்தைகள் அவரைக் கொண்டாடுவார்கள்.

நேரில் பார்ப்பதை விட திரையில் பிரியங்கா மோகன் அத்தனை அழகாக இருக்கிறார். முதல் பார்வையில் சிவா கட்டுண்டு போனது நியாயம் தான் என்கிற அழகுடன் இருக்கிறார். சிவாவின் கேரக்டர் பிடிக்கவில்லை என்று அவர் சொல்ல கடுப்பாகும் சிவாவின் அம்மா “அழகா இருந்தா அறிவாளியாக இருக்க மாட்டாங்க அப்படிங்கறது உண்மைதான்..!” என்று பதிலுக்கு ஓட்டுவது ‘ லகலக…!’

படத்தை டெம்போ குறையாமல் பார்த்துக்கொள்வது நகைச்சுவைதான் என்றாலும் அதில் ரெடின் கிங்ஸ்லியின்  பங்களிப்பு அபாரம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர் அதிர்கிறது. ஒரு கட்டத்தில் அவருடன் யோகி பாபுவும் சேர்ந்து கொள்ள ஒரே அதகளம்தான். யோகிபாபு வை மீண்டும் மீண்டும் போலீஸில் கிங்ஸ்லி அடி வாங்க வைக்கும் இடத்தில் சிரித்து வயிறு புண்ணாகிறது

சீரியசான வில்லன் ரோலில் வினய். சிவகார்த்திகேயன் ஆறடி உயரத்தில் இருக்க அவருக்கு வில்லனாக வரும் இவர் அவரை விட இரண்டு அங்குலம் உயரமாக இருப்பது காட்சிக்கு மிடுக்கு சேர்க்கிறது. 

ஓரிரு காட்சிகளில் வந்தாலும் சிவாவின் ராணுவ உயர் அதிகாரியாக வரும் மிலிந்த் சோமன் ரசிக்க வைக்கிறார்.

பிரியங்கா மோகனின் அண்ணியாக வரும் அர்ச்சனாவும் அவரைக் கண்டத்திலிருந்து காதல் கொள்ளும் உள்ளூர் தாதாவும் கூட அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள்.

கடத்தப்பட்டவராக வரும் சிறுமியும் நெகிழ வைக்கிறார். அதுவும் அந்த சிறுமியை பிரியங்காவின் குடும்பத்தினர் சந்திக்கும் கட்டம் சென்டிமென்ட் தூக்கலாக அமைந்திருக்கிறது.

ஆனால் அந்தச் சிறுமி கடத்தப்பட்டதிலிருந்து அவள் என்ன ஆனாரோ என்று பதைபதைக்காமல் பிரியங்காவின் குடும்பம் கலகலப்புடனேயே மீட்பதில் ஈடுபடுவது லாஜிக்கில் இடிக்கிறது.

சென்னை ஆகட்டும் கோவா ஆகட்டும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா சுற்றிச்சுழன்று இருக்கிறது. கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஒளிப்பதிவு. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்து விட பின்னணி இசையிலும் அடடே போட வைத்திருக்கிறார் அனி.

நகைச்சுவை ததும்பும் இந்த படத்தின் திரைக்கதையில் மீறப்படும் லாஜிக்கை மட்டும் கவனித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக சிரிப்பு வராது ஆனால் சிரிக்க ஆரம்பித்துவிட்டால் லாஜிக் மீறல் எதுவும் கருத்துக்கு வராது.

அந்த வகையில் ஜாலியாக சிரித்து ரசித்து விட்டு வரக் கூடிய படம் இது.

கலகலப்பான இந்தப்படத்தை அடுத்து இதே நெல்சன், விஜய் படத்தை இயக்கி வர, விஜய் ரசிகர்களும் கூட இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள்.

டாக்டர் – காமெடி ட்ரீட்மென்ட்..!