November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆண் தேவதை இயக்குநர் தாமிராவின் குமுறலைக் கேளுங்கள்…
October 17, 2018

ஆண் தேவதை இயக்குநர் தாமிராவின் குமுறலைக் கேளுங்கள்…

By 0 1135 Views

தான் அறிமுகமான ‘ரெட்டச் சுழி’ படத்திலேயே இயக்குநர் இமயத்தையும், இயக்குநர் சிகரத்தையும் நடிக்க வைத்த பெருமைக்குரிய இயக்குநர் தாமிரா எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆண் தேவதை’ மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்குள் வந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் பாராட்டியும் அவர் பட்ட… பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை அவரே சொல்கிறார். கேளுங்கள்…

“ஆண் தேவதை திரையிட்ட அரங்கங்களில் படம் பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது.

திருச்சி கோவை சேலம் சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வட்டிக்கு வாங்கி படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் வட்டியற்ற திரைப்படமாக ஆண் தேவதை திரைப்படத்தினை எடுத்து முடித்தோம்.

அதன் தொலைக்காட்சி உரிமை ஒரு நல்ல விலைக்கு விற்கப்பட்டது படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. இதுவரை எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது.

தமிழ்நாடு திரையரங்க விற்பனை உரிமைக்காக விநியோகஸ்தர்களை அனுகியபோது வியாபாரத்தில் எங்கள் அனுபவமின்மையை பயன்படுத்தி எங்களிடமிருந்து திருச்சி விநியோகிஸ்தர்கள் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் ஒருவர் ஒன்றே முக்கால் கோடி என விலை பேசி நாற்பத்தியோரு லட்சம் முன் பணமாக தந்தார்..

கடந்த மூன்று மாதகாலமாக பட வெளியீட்டு தேதியை மாற்றி மாற்றி சொல்லி தட்டிக்கழித்தபடியே இருந்தார். மேற்கொண்டு பணமும் தரவில்லை.

இதற்கிடையே அவர் எங்களுக்குக் கொடுத்த நாற்பத்தியோரு லட்சமும் வட்டிக்கடன்.

அந்தக் கடனுக்காக எங்கள் திரைப்படத்திற்கு ரெட்கார்டு போடப்பட்டது. ஒரு பைசா வட்டிக்கு வாங்காமல் அங்கங்கிருந்து நண்பர்கள் பணத்தை புரட்டி எடுக்கப்பட்ட படத்திற்கு ரெட் கார்ட்.

நிலைகுலைந்து போனோம்.

அந்த விநியோகஸ்தர் வாங்கிய பணத்திற்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டியது வந்தது.

நாற்பத்தியோரு லட்சம் வாங்கிய பணத்திற்கு மூன்று மாதத்தில் ஐம்பது லட்சம் பணம் கட்ட வேண்டியதாயிற்று.

சரி சூழல் நமக்கெதிராக வலுவான நிலையெடுத்திருக்கிறது.

இந்த பணத்தை கட்டி படத்தை நாமே வெளியிடுவோம் என்று தீர்மானித்து கடன் வாங்கி பணத்தை கட்டினோம், அதன் பின் ஒவ்வொரு பூதமாக கிளம்பியது.

இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை நியூ ஆர் எஸ் எம் பிலிம்ஸிற்கு வழங்கியிருக்கிறோம் என எங்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்த ஒரே காரணத்திற்காக அந்த நபர் முன்னம் பெற்றிருந்த அனைத்து கடனுக்கும் ஆண் தேவதை திரைப்படமே பொறுப்பு என்கிற நிலையை சங்கம் உருவாக்கியது.

அந்த வகையில் மேலும் ஐம்பத்தியாறு லட்சத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் ஆண் தேவதை வெளியாகவே ஆகாது என்கிற சூழ்நிலை உருவாகியது.

எங்களுக்கு வேறு வழியில்லை. சங்கத்திற்கு எங்கள் மேலெந்த தவறும் இல்லையென்று தெரியும்.

தெரிந்தும், இவ்வாறான ஒரு தீர்வினை முன் வைத்தது.

ரிலீஸிற்கான தேதியை மூன்றாம் முறையாக அறிவித்திருந்தோம். இதையும் தள்ளிவைத்தால் இனி திரைப்படமே வெளியாகாது என்கிற சூழ்நிலை.

எட்டுஆண்டுகள் கழித்து எனது திரை முயற்சி ஒரு நல்ல திரைப்படம் என பார்த்தவர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம்..

இனி மக்களை நம்பி திரைப்படத்தினை வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில் திரையரங்கத்திற்கு படத்தினை கொண்டுவந்தோம்.

கடைசி நேர நெருக்கடியில் ஒரு குடும்பத்திரைப்படம் வெளியாக வேண்டிய திரையரங்கங்கள் கிடைக்கப் பெறாத நிலை.

என்ற போதும் நல்ல திரையரங்கில் நல்ல வசூலைப் பெற்றது ஆண் தேவதை.

மற்ற திரையரங்கில் பார்த்தவர்கள் எல்லோரும் நல்ல திரைப்படம் என பாராட்டும்படியாக இருக்கிறது.

படம் மெல்ல மக்கள் கருத்தில் கவனம் பெறும்தருணத்தில் வடசென்னை, சண்டக்கோழி2 என இரண்டு பெரிய திரைப்படங்களின் வருகை.

இத்தனையும் தாண்டி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஆண் தேவதை வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறான்.

பெரிதாக விளம்பரம் செய்யும் வாய்ப்பில்லை. இப்போது சமூக வலைத்தளங்களையும் மக்கள் ரசனையையும் மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம்.

அருகிலிருக்கும் திரையரங்கில் ஆண் தேவதையைப் பாருங்கள்.

இது நல்ல படமென உணரும் பட்சத்தில் உங்கள் அக்கம் பக்கத்தினரிடம் படம்பற்றி கருத்துச் சொல்லுங்கள்.

உங்கள் சொல் எங்களின் வெற்றியாகட்டும்.. எங்களை இழப்புகளிலிருந்து மீட்கட்டும்..!”

வெளியே இருப்பவர்கள் நினைப்பது போல் எல்லோருக்குமே சினிமா சொர்க்கபுரியாக இல்லை என்பது மட்டும் தெரிகிறது..!