September 22, 2020
  • September 22, 2020
Breaking News
August 27, 2019

நடிகை அண்ணா என்று அழைத்ததால் அண்ணன் ஆனேன்

By 0 259 Views

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ள ‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது நெகிச்ழ்சியான ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் பேச்சிலிருந்து…

“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார் ?

சினிமா ஒரு நல்ல அருமையான தொழில் .இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது .இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது.. அது பலருக்கும் தெரிவதில்லை .

நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் . இதுவரை சொல்லாத விஷயம் அது.
நான் ‘பொன்னுமணி’ படத்தில் நடிகை சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். கார்த்திக்குடன் அவரை ஒரு நாள் படப்பிடிப்பில் நடிக்க வைத்தேன் . அவர்தான் கதாநாயகி என்று உறுதி செய்யப்படவில்லை . நடிப்பை பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று இருந்தேன் . ஒரே ஒரு நாள் நடித்திருந்தார் .

அப்போது நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தோம் .அப்போது அவர் நடித்த காட்சிகளை சென்னையிலிருந்து ஜெமினி லேபிலில் இருந்து எடுத்த ரஷ்ஷை வரவழைத்து அங்கு உள்ள ஒரு தியேட்டரில் போட்டுப் பார்த்தோம் . கூடவே மனோரமா ஆச்சியும், சிவகுமார் அண்ணனும் பார்த்தார்கள். அவரவர் ஒரு கருத்து சொன்னார்கள். “இவள் சாவித்திரி மாதிரி வருவாள்..!” என்றார் ஆச்சி. இது எவ்வளவு பெரிய வார்த்தை.

சௌந்தர்யா என்னை அழைக்கும் போதெல்லாம் “அண்ணா…” என்றழைத்தார் . எனக்கு நெகிழ்ச்சியாகிவிட்டது. இன்னொருவர் மத்தியில் பேசும் போது “சார் என்று கூப்பிடு…” என்றேன்.

RV Udhayakumar

RV Udhayakumar

ஆனால் அவர் “அண்ணா…” என்று அழைத்தது முதல் நான் அண்ணனாகவே இருந்தேன் . கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதைவும் அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா. பொன்னுமணி படத்தில் நடித்த போதே இரண்டாவது படமான சிரஞ்சீவி படத்திற்கு நான்தான் சிபாரிசு செய்தேன் .விரைவில் பெரிய நடிகையாக்கி விட்டார்.

அவர் வளர்ந்து நடிகையாகி ஆயிரம் பிரச்சினைகளிலும் காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல்லாம் நான்தான் . சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்து விட்டு வருவேன். அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார். என்னால் செல்ல முடியவில்லை. மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார். போக முடியவில்லை.

தமிழில் ‘சந்திரமுகி’யாக வெற்றி பெற்ற படம் கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா ‘என்ற பெயரில் வாசு எடுத்திருந்தார் . அதில் சௌந்தர்யாதான் நடித்திருந்தார் .எனக்கு ஒருநாள் போன் செய்தார் .”அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. நடிப்பு வாழ்க்கை முடிந்துவிட்டது இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ‘ஆப்த மித்ரா’ தான் என் கடைசி படம் நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்..!” என்று என்னிடமும் என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். தன் அண்ணனின் வற்புறுத்தலால் பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார் .

மறுநாள் காலை ஏழு முப்பதுக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அவர் விபத்தில் இறந்துவிட்டார் . அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. இறப்புக்கு செல்லலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மிக பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தார் . உள்ளே சென்ற போது எனது படத்தை பெரிதாகப்போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

இங்கே இயக்குநரை நடிகை தீபா அப்பா என்று அழைத்தார். அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை. அது பெருமையான விஷயம்..!”

படத்தின் இயக்குநர் கே.மகேந்திரன் பேசியதிலிருந்து…

“நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமாக்களை பார்த்துத்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். 50 வயதுக்கு மேல் இயக்குநராக வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம். மனசுதான் முக்கியம் .என் மனம் இளமையாக இருக்கிறது. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்து எடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..!”

Thandagan Audio Launch

Thandagan Audio Launch