May 1, 2024
  • May 1, 2024
Breaking News
May 5, 2023

தீர்க்கதரிசி திரைப்பட விமர்சனம்

By 0 579 Views

மலையாளத்தில் வருவது போல் சிறந்த கதை திரைக்கதையுடன் ஒரு படம் வராதா என்று ஏங்கிய தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக வந்திருக்கிறது இந்தப் படம்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி செய்கிறார் ஶ்ரீமன். அங்கு அடிக்கடி அனாமதேய போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது. 

அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவார் என்று அந்த அழைப்பு சொல்ல போலீசும் அது அனாமதேய அழைப்பு என்று அசட்டையாக இருந்து விடுகிறார்கள். ஆனால் அந்த குரல் சொன்னபடி ஒரு பெண் கொல்லப்படுகிறார்.

அதற்குப் பின் தொடரும் அந்த அனாமதேய  அழைப்பில் பேசும் நபர் அண்ணா சாலையில் ஒரு விபத்து நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிக்கிறார். அதேபோல் நடந்து உயிர் பலியும் ஏற்படுகிறது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கும் அந்தக் குரல் அதைத் தொடர்ந்து மீடியாக்களுக்கும் அழைப்பு விடுப்பதில் இந்த விஷயம் வைரலாகி போலீசுக்கு பெரும் சவாலாக அமைகிறது.

தமிழக முதல்வர் வரை எட்டும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும் படி காவல்துறை ஆணையருக்குக் கட்டளை வர, அதற்காகவே இணை கமிஷனர் நாயகன் அஜ்மலை அந்தப் பணிக்கு அமர்த்துகிறார் காவல்துறை ஆணையர். அஜ்மலுக்கு முன் அந்த கேசை கவனித்துக் கொண்டிருந்த காவல் அதிகாரிகள் ஜெய்வந்த்தும், ஜெய் துஷ்யந்தும் அஜ்மலுடன் இணைந்து இதைத்  துப்பறிகிறார்கள்.

அனாமதேய அழைப்பு எச்சரிக்கும் ஒரு வங்கிக் கொள்ளையில் மட்டும் கொள்ளை போன பணத்தைத் திரும்பப் பெற முடிகிறது. மற்ற எல்லா விஷயங்களிலும் காவல்துறை கோட்டை விட, காவல்துறையை எச்சரிக்கும் அந்த அனாதைய குரலுக்கு உரியவர் ஒரு ‘தீர்க்கதரிசி’ என பொதுமக்களாலும் மருத்துவராலும் வர்ணிக்கப்பட… பல உயிர்கள் பலியாவது தொடர… இதைத் தொடர்ந்து என்ன ஆனது என்பது மீதிக்கதை.

தான் நடித்த எல்லா படங்களிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் அஜ்மல், இடையில் என்ன ஆனார் என்ற கேள்விக்கு பதிலாக வந்திருக்கிறது இந்தப் படம். ஓங்குதாங்கான உடலும் அதற்கேற்ற உடற்கட்டும் சிறந்த நடிப்பும் கொண்ட அஜ்மல் கையில் இந்நேரம் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் இருந்திருக்க வேண்டும். தன் பாத்திரத்தை உணர்ந்து அசாத்தியமாக நடித்திருக்கிறார்.

எங்கே தவறு இருக்கிறது என்பதைக்  கண்டுபிடித்து அஜ்மல் இனிமேலாவது முன்னணிக்கு வர முயற்சிக்க வேண்டும்.

இதுவரை கதாநாயகர்களாக நடித்திருந்தாலும், தயங்காமல் இந்தப் படத்தில் இரண்டாவது நாயகர்கள் போன்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜெய் வந்தும் ஜெய் துஷ்யந்தும் தங்கள் நடிப்புக்கு நியாயம் சேர்த்துப் பாராட்ட வைக்கிறார்கள்.

படத்தை ஆரம்பித்து வைக்கும் ஸ்ரீமன், கடைசியில் விடை தெரியாத கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் துப்பறிந்து உண்மைகளைக் கண்டுபிடிப்பதும் ரசிக்க வைக்கிறது.

சிறந்த நடிகரான ஶ்ரீமனையும் பார்த்து நீண்ட காலம் ஆகி விட, இடையில் சில படங்களில் காமெடியன் போல வந்தாலும் இந்தப் படத்தில் தனது பாத்திரத்தை நிறைவாக செய்து மனதில் இடம் பிடிக்கிறார் அவர்.

நாயகன் அஜ்மல் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை ஸ்ரீமன் கண்டுபிடிப்பதில் ஒரு டிவிஸ்ட் இருக்க அந்த ட்விஸ்ட் என்ன என்பது சுவாரஸ்யமான படத்தின் கட்டம்.

ஸ்ரீமனின் மனைவியாக வரும் தேவதர்ஷினியும் அப்பாவாக வரும் மோகன்ராமும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இரட்டை இயக்குநர்கள் பிஜி மோகன் மற்றும் என் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் இலக்கை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருப்பது ஆகப்பெரிய ஆற்றல்.

முக்கால்வாசிப் படம் சயின்ஸ் பிக்சன் போல நகர்ந்தாலும் படத்தின் கடைசி காட்சி நம் நினைப்பை குப்புறப் போட்டு சென்டிமெண்டில் இமயம் போல உயர்ந்து விடுகிறது.

கடைசி ஒரு காட்சியில் மட்டும் வரும் சத்யராஜ் தன் நடிப்பால் நம்மை நெகிழவும், கலங்கவும், ரசிக்கவும் வைத்து விடுகிறார்.

அவர் சொல்லும் காதல் காட்சியில் வரும் சம்பவங்கள் நாம் நிஜத்தில் கடந்தவை போல் இருப்பதும், ஒரு மணவாழ்க்கை முளையிலேயே கிள்ளி எறியப்படுவதும் மனதைக் கலங்கடிக்கிறது.

மனோ தத்துவ மருத்துவராக வரும் ஒய் ஜி மகேந்திரன் நிறைவாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் கைகோர்த்துக்கொண்டு படத்தைப் பரபரவென்று நகர வைத்திருக்கிறார்கள். இடையில் வரும் அந்தோணி தாசன் பாடும் பாடல் ஒன்று மட்டும் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது.

படம் முடிந்து எழுந்து வரும்போதுதான் நமக்கே தோன்றுகிறது, படத்தில் நாயகி என்று ஒருவர் இல்லவே இல்லை என்பது. அதை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் திரைக்கதையில் சுவாரஸ்யம் இருப்பது அருமை.

ஒரு காட்சியில் தமிழக முதல்வரையும் அடுத்து இரு காட்சிகளில் அவரது குரலையும் கூட பதிவு செய்திருக்கும் இயக்குனர்களின் ‘தில்’ பாராட்ட வைக்கிறது.

சாம்.சி.எஸ்க்கு போட்டியாகக் களம் இறங்கி இருக்கிறார் போலிருக்கிறது இந்த பட இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஜி.

பின்னணி இசையில் அடித்து நொறுக்கும் இவர் இந்தப் படத்துக்கு இசை தான் முக்கியம் என்பதை தெரிந்து வைத்திருந்தாலும் பல இடங்களில் அது முக்கியமான வசனங்களை ஓவர் டேக் செய்து கொண்டு போவதைத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி பரபரப்பாகப் பறக்கும் படத்தில் குறைகளைக் கண்டுபிடிக்கவே தோன்றவில்லை என்பதுதான் நிஜம்.

அப்படி ஆரம்பிக்கும் கதை இப்படி முடியும் என்று யாருமே எதிர்பார்க்க முடியாது.

தீர்க்கதரிசி – வெல்டன் டீம்..!

– வேணுஜி