விளை நிலங்களின் பெருமையையும், விவசாயத்தின் அவசியத்தையும் முன்னிறுத்தும் நோக்கில் ஒரு காதல் கதையையும் சொல்லி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இரட்டை இயக்குனர்கள்.
சென்னை நகரத்தில் பணிபுரியும் கதாநாயகி பூஜாஸ்ரீ, கிராமத்து இளைஞனான நாயகன் வசியைக் காதலித்து அதன் காரணமாகவே திருமணத்தைத் தவிர்க்கிறார்.
சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் தேர்ந்திருக்கும் நாயகன் வசி, ஒரு நாயனாகிவிட பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.
நாயகி பூஜாஸ்ரீயோ அதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று கிளாமரில் கலக்கியிருக்கிறார்.
பிளாக்பாண்டி, சிங்கம்புலி, தெனாலி, வெங்கல்ராவ் உள்ளிட்ட காமெடி சிரிக்க வைப்பதற்கு பதில் படத்தின் புட்டேஜை நீட்ட உதவியிருக்கிறது.
சமூகப் போராளியான நடேசன் வாத்தியார் பாத்திரத்தில் வருகிற சீமான் வருகிற காட்சிகள் மட்டும் வேகமாகக் கடக்கின்றன. அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் நீரும், நெருப்பும்..!
அவருடைய நண்பராக வரும் ஐகோ, விவசாயிகளின் ஏக்கங்களைக் கண்முன் கொண்டு வருகிறார்.
இவர்களெல்லாம் நடிப்பது போதாதென்று படத்தின் இயக்குநர்கள் விஜயானந்த் சூரியனும் படம் முழுதும் நடித்திருக்கிறார்கள். நாயகன் வசியின் மாமாவாக சூர்யனும், வில்லன் சிவண்ணாவாக விஜயானந்தும் வருகிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. வேல்முருகனின் ஒளிப்பதிவு தேவைக்குத் தோதான அளவு இருக்கிறது.
நல்ல விஷயத்தைக் கடத்த கதை இருந்தும் பலவீனமான திரைக்கதையும், நீள நீளமான காட்சிகளும் அலுப்படைய வைக்கின்றன.
கிளைமாக்சின் புதுமையான திருப்பம் ஓகே.
தவம் – ஷார்ப்பாக சொல்லியிருந்தால் வரமே கிடைத்திருக்கும்..!