“எப்படா வரும்..?” என்று ஆவலை ஏற்படுத்தும் படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’. அடுத்த வாரம் ரிலீஸ் என்கிற நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தது வட சென்னை டீம்.
கண்ணிலேயே பார்க்க முடியாத தனுஷ், ‘இதுக்குதான் காத்திருந்தேன்…’ என்ற அளவில் அத்தனை ஈடுபாட்டுடன் பேசினார். அவர் பேசியதிலிருந்து…
“இந்தக் கதையை பொல்லாதவன் படத்துக்குப் பிறகு நானும், வெற்றிமாறனும் பேசினோம். ஆனா, பெரிசா ஆயிரம் கேரக்டர்களோட பண்ண வேண்டிய படம். அதனால அப்புறம் பண்ணலாம்னு ‘ஆடுகளம்’ பண்ணினோம். அதுக்குப் பிறகு பண்ணலாம்னு யோசிச்சோம்.
நான் வேற கமிட்மென்ட்ல இருந்தேன். அப்புறம் அவர் சிம்புவை வச்சு இந்தப் படத்தை பண்ணிட்டு வரேன்னு போனார். சரின்னு சொல்லிட்டேன். அதோட அதுல ராஜன்னு ஒரு கேரக்டர் வருது. அதுல நீங்கதான் நடிக்கணும்னு கேட்டார்.
‘அன்பு’ங்கிற கேரக்டர்தான ஹீரோ. அதுல சிம்பு. இந்த ராஜன் கேரக்டர் நாலு சீன்ல வரும். அது பவர்புல்லான கேரக்டர்னாலும் அதுல நானான்னு யோசனை இருந்தது. “அதுல நடிக்கிற அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை. விட்டுடுங்க…”ன்னு சொல்லிட்டேன்.
அப்புறம் கொஞ்சம் காலம் கழிச்சு “சிம்பு படம் பண்ணலை. நாமே பண்ணலாம்…”னு சொன்னார். அதுக்கு ரெடியாகறதுக்குள்ளே இன்னொரு படம் பண்னிட்டு வரேன்னு ‘விசாரணை’க்குப் போயிட்டார். பிறகு ஆரம்பிச்சு பண்ணினோம். ஆக, எனக்குன்னே சுத்தி சுத்தி வந்த கதை ‘வட சென்னை..!’முதல்ல ஆரம்பிக்கும்போது ஐஸ்வர்யா (ராஜேஷ்)தான் நடிக்கிறதா இருந்தது. பிறகு யார் யாரோ முயற்சி பண்ணி கடைசியில் அவங்கதான் நடிச்சாங்க. ரொம்ப கஷ்டமான கேரக்டர். இயல்பா நடிச்சுட்டாங்க.
இதை அப்படியே கொடுத்தா நாலு மணிநேரம் வரும்கிறதால மூணு பார்ட்னு முடிவு பண்ணினோம். நாங்க ரொம்ப வருஷமா ட்ராவல் பண்றோம். இந்தபடத்துக்காக வெற்றிமாறன் ரொம்ப கஷ்டப்பட்டார்.
இப்படி ஒரு ரெண்டு படம் ஒரு நடிகனோட வாழ்க்கையில அமைஞ்சாலே அது பெரிய விஷயம். அது எனக்கு அமைஞ்சிருக்குன்றது எனக்கு சந்தோஷம்.
பத்து வருஷமா ட்ராவல் பண்ற கதை இப்ப முடிவுக்கு வந்து ரிலீசுக்கு நிக்கிறதைப் பாக்குறப்போ மகிழ்ச்சியா இருக்கு. அதோட எங்களை நாங்களே புகழ ஒரு மாதிரி இருக்கு.
மண்ணில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆசீர்வதம்தான். சமீபத்துல என் உறவினர் 38 வயதில் தவறிட்டார். எதுவும் நிரந்தரம் கிடையாது. இன்றைக்கு இது கடவுளோட ஆசீர்வாதம். இறைவன் அருள் இருந்தாதான் எதுவும் நடக்கும்..!”