தமிழ் சினிமா பலவிதமான சைக்கோக்களைப் பார்த்திருக்கிறது. இதுவும் ஒரு சைக்கோபாத் கில்லரைப் பற்றிய படம்தான். ஆனால், படு வித்தியாசமான சைக்கோ.
தன் காதலி, (நாயகி) யுக்தா பெர்வியை இழந்த (நாயகன்) ராஜீவ் கோவிந்த், சதா குடிபோதையில் மூழ்கி வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு ஆளாகிறார். யுக்தா பெர்வியைக் கடத்தும் யாரோ அவளைக் கொடூரமாகக் கொன்று போட்டு விடுகிறார்.
அந்த நினைவில் இருந்து ராஜீவை மீட்க நினைக்கும் அவரது சகோதரர் மருத்துவர்கள் உதவியுடன் அவர் காதலியை மறக்கும் விதமாக பழைய நினைவுகளை அழிக்கும் புதிய சிகிச்சை ஒன்றைச் செய்கிறார்கள்.
அதன் விளைவாக அவர் புதிய மனிதனாகிறார். இன்னொரு நாயகியான சித்தாரா விஜயனுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் சகோதர பாசத்தில் பழகுகிறார்.
இன்னொரு பக்கம் வயதான ஒரு ஜோடியை அடைத்து வைத்து அவர்களின் மகனைக் கண்டுபிடிக்க முயல்கிறார் ஹரிஷ் பெராடி. அதற்குக் காரணம் அவர்களின் மகன்தான் தன் மகளைக் கொன்றவர் என்று ஹரிஷ் பெராடி நம்புவதுதான்.
இவற்றிற்கெல்லாம் காரணம் சைக்கோவாக இருக்கும் அபிஷேக் ஜார்ஜ்தான் என்ற உண்மை தெரிய வர, அதன் பின்னணி என்ன… இந்தப் பிரச்சனைகள் எப்படி முடிவுக்கு வந்தன என்று சொல்லும் கதை.
நாயகன் ராஜீவ் கோவிந்த்துக்கு அட்டகாசமான உடற்கட்டு. முன்கோபியான அவர் அந்தக் காரணத்தினால் நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. காதலியை இழந்த துக்கத்தையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவருக்கு சரியான ஜோடியாக அமைந்திருக்கிறார் யுக்தா பெர்வி. அவரது வனப்புக்கேற்ற ஆடைகளும் இரட்டிப்பு அழகைத் தருகின்றன.
இதுவரை எந்த சினிமாவும் பார்க்காத சைக்கோ வில்லனாக வருகிறார் அபிஷேக் ஜார்ஜ். நடிப்பிலும் அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனாலும் சித்தாரா விஜயனைக் கட்டிப்போட்டு விட்டு லுங்கியை அவிழ்த்து காண்பிப்பதெல்லாம் கொஞ்சம் குரூரம்தான்.
ஹரிஷ் பெராடியின் அறிமுகம் அவரைப் பெரிய வில்லனாக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் கடைசியில் அவரும் பாதிக்கப்பட்டவராக வாத்து பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
இவர்களுடன் அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் அனைவரும் சரியான விதத்தில் பங்களித்து இரக்கிறார்கள்.
ஆதித்ய கோவிந்தராஜின் ஒளிப்பதிவு அழகுக்கு அழகு சேர்த்தும், உளவியல் சிக்கலுக்கு ஒத்துழைத்தும் இருக்கிறது.
ஸ்ரீநாத் விஜய் இசையில் மோகன்ராஜன் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.
இந்தச் சின்ன பிரச்சனைக்கு எல்லாமா கொலை செய்வார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், உளவியல் சிக்கல் ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று புரியவும் வைக்கிறது.
சரி… தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா..?
2006 ம் ஆண்டில் ஒளிபரப்பான ஒரு அமெரிக்கத் தொடரில் வந்த சைக்கோபாத் கேரக்டரின் பெயர்தான் டெக்ஸ்டர் மார்கன் என்பது. அந்த பாதிப்பில் அதனை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சூரியன்.ஜி.
டெக்ஸ்டர் – எக்ஸ்ட்ரீம் சைக்கோ..!
– வேணுஜி