September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 17, 2024

டிமான்டி காலனி 2 திரைப்பட விமர்சன

By 0 46 Views

டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியின் விளைவாக அதன் இரண்டாவது பாகத்தை எடுத்து நம்மை பயமுறுத்த நினைத்திருக்கிறார்கள். 

கதை இப்படித் தொடங்குகிறது.

நண்பர்களுடன் தற்கொலை செய்து கொண்ட கணவரின் மர்ம மரணத்தை நினைத்து  துக்கத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர் சில வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க கணவரின் ஆத்மாவிடம் பேச முயற்சிக்கிறார்.

அப்போது ஆபத்தில் இருக்கும் வேறு ஒரு ஆத்மா அவரிடம் உதவி கேட்கிறது. அதன் மூலம் முதல் பாகத்தில் இறந்ததாக காட்டப்படும் அருள்நிதியை உயிர் பிழைக்க வைப்பதற்கான ஒரு வாய்ப்பும் கிடைக்க, இந்த இரண்டாவது பாகத்துக்கும் உயிர் வருகிறது.

அத்துடன் அவருக்கு சகோதரர் ஒருவர் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் பிரியா, அருள்நிதியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் இந்த இரண்டாவது பாகம்.

கடந்த பட அருள்நிதி படுத்தே கிடப்பதால், அவரது சகோதரர் வேடத்துக்கும் அதே அருள்நிதியை இன்னொரு வேடமாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

படம் தொடங்கியதில் இருந்து கதையை பிரியா பவானி சங்கரை முதன்மைப்படுத்தி நகர்த்தி இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு தன் ஹீரோ அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்கிறார் அருள்நிதி.

ஒரு ஹீரோ என்றால் அவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணங்கள் எல்லாம் மீறி பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் நடிகர்களில் முதன்மையானவராக இருக்கிறார் அருள்நிதி. இந்தப் படத்திலும் அவருக்கு சொத்துக்கு ஆசைப்படும் வகையில் கிட்டத்தட்ட எதிர்மறை வேடந்தான். ஆனால் அந்த பாத்திரத்துக்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை அற்புதமாக செய்து பேர் வாங்கி விடுகிறார் அருள்நிதி. 

தான் நடித்த மற்ற படங்களில் எல்லாம் அழகு பதுமையாக வந்து விட்டுப் போகும் பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் கதையை தாங்கிச் செல்லும் அழுத்தமான வேடம். காதல் கணவர் இறந்த துக்கம் ஒருபுறம், உயிருக்கு போராடும் அருள்நிதியை காப்பாற்ற முயற்சிப்பது மற்றொருபுறம் என்று பல பாவங்கள் காட்டி நடித்திருக்கிறார் பிரியா. ஆனால் அதில் பயப்படும் காட்சிகளே அளவுக்கு அதிகமாக இருப்பது அவருடைய குறை அல்ல.

சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த முத்துக்குமாருக்கு இதில் அருள்நிதியின் சித்தப்பாவாக படம் முழுவதும் பயணிக்கும் பாத்திரம்.

அதேபோல் பிரியாவின் மாமனாராக வரும் அருண் பாண்டியனும் அப்படியே. எல்லோரும் பதட்டத்தில் பேசிக் கொண்டிருக்க, அவர் மட்டும் தன் பாணியில் எந்த பதட்டமும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனாட்சி கோவிந்த், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிற பாத்திரங்களும் பாத்திரப்படி பயந்து நடுங்கி இருக்கிறார்கள்.

படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று இருக்கும் சீன துரோகிகள் ஏதோ அற்புதம் நிகழ்ந்து வடுவார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு அல்வா கொடுத்து விடுகிறது அந்த அமானுஷ்ய சக்தி.

அந்த அசகாய சக்தி பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள அடுத்த பாகம் வரை காத்திருக்க வேண்டும்.

நிசப்தம் தான் நம் பயத்தை அதிகரிக்கும் என்கிற உண்மை தெரியாமல் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் படம் முழுவதும் இசையை அடித்து நொறுக்கி நம் தலைவலி அதிக படுத்தி விடுகிறார். அந்த சீன மந்திரவாதிகளிடம் சொல்லி சாம் சிஎஸ்ஸின் இசையையும் கொஞ்சம் கட்டியிருக்கலாம்.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு  நேர்த்தியாக இருக்கிறது ஆனால் பின்பாதி முழுவதும் ரெஸ்டாரண்டிலேயே நகர்வது அவருக்கும் பெரிய சவால் தான்.

‘டிமான்டி காலனி’ வெற்றி தந்த ருசியில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, அந்த முதல் பாகத்தின் பாணியிலேயே இந்த இரண்டாவது பாகத்தையும் கையாண்டு ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்தாலும் திரைக்கதை முதல் பாகம் போல் அத்தனை சுவாரஸ்யம் தரவில்லை.

இந்த உயிர் பலிகள் எல்லாமே டிமான்டி ஆவிகள் உலக அரசருக்கு பலி கொடுப்பதற்காக குறிப்பிட்ட நாளை நடக்கின்றது என்று நம் காதுகளில் நிறைவே பூச்சூடி இருக்கிறார்.

மூன்றாவது பாகமும் இப்படியேதான் இருக்கும் என்றால் இதுவே போதும். 

டிமான்டி காலனி – அதே டிமாண்ட்..!