பேய் பிடித்து ஆட்டும் கோலிவுட்டில் அடுத்த பேய்ப் படமாக வந்திருக்கும் இதில் புது முகம் சச்சினைப் பிடித்து ஆட்டுகிறது ஒரு நகரத்துப் பேய்.
“ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஒரு வீடு, அந்த வீட்டில் ஒரு பேய்…” என்று ஆரம்பிக்காமல் “நகரத்தின் மையப் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட், அதில் ஒரு பேய்…” என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.
இயக்குனராகத் துடிக்கும் ஹீரோ சச்சின் அதற்காக ஒரு பேய்க் கதையைத் தயார் பண்ணி ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி படமும் பெற்று விடுகிறார். தனிமையில் ஸ்கிரிப்ட் எழுதுவதற்காக ஒரு நகரத்தின் மையப்பகுதியில் ஒரு அபார்ட்மெண்டில் அவர் தங்கியிருக்க, அங்கே நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள்தான் கதை.
மூன்று படுக்கையறை வீடுகள் கொண்ட அந்த அபார்ட்மெண்டில் சச்சின் குடியேறும் வீட்டில் மட்டும் இரண்டு படுக்கை அறைகள் மட்டுமே இருக்கின்றன. அது ஏன் என்பது பின்னால் சொல்லப்படும் ஒரு சஸ்பென்ஸ்.
சச்சின் தூங்கும்போது மட்டும் அவருக்கு வினோதமான கனவுகள் வந்து போக, விழித்திருக்கும் போது எந்த விதமான பிரச்சினையும் ஏற்படுவது இல்லை. இப்படி இருக்க அவரை ஆட்டுவிப்பது எது என்பது படத்தின் பின் பாதியில் சொல்லப்படுகிறது.
வழக்கம்போல அந்த ஆவிக்கு ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகளாக இருப்பதும் அந்த பிளாஷ்பேக்கும் படு திரில்லாக அமைந்திருப்பதும் இந்தப் படத்தில் ‘அடடே…’ விஷயம்.
அந்த ஆவிகள் ஒரு வட இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க அதில் பொருத்தமான நடிகர், நடிகையர் நடித்திருப்பது படத்துக்கு ‘பலே’ பலத்தை தருகிறது.
படம் முழுதும் சச்சின்தான் சோலோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்படும் அனுபவங்களும், அவை எதனால் ஏற்படுகின்றன என்று அவர் திகைப்பதும், மருகுவதும், துடிப்பதும், அதிலிருந்து மீள என்ன வழி என்று விழி பிதுங்கி நிற்பதுவுமாக சச்சனின் நடிப்பு சக்சஸ் ஃபுல்லாக அமைந்திருக்கிறது.
அவருடைய உதவி இயக்குனர்களாக இரண்டு பெண்கள் இருந்த போதும் கதாநாயகியாக அதில் ஒருவரை ஒத்துக் கொள்வதில் திருப்தி இல்லாத இயக்குனர் அதற்காக அபர்ணதியைப் பிடித்திருக்கிறார்.
இதுவரை நடித்த படங்களில் தன் அற்புத நடிப்பால் நம்மைக் கவர்ந்த அபர்ணதிக்கு இந்தப் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்பு தரப்படவில்லை. அடக்கமான நதியாக வந்து விட்டுப் போகிறார்.
சச்சினின் நண்பனாக வரும் கும்கி அஸ்வினுக்குப் பெரிய வேடம். நகைச்சுவைக்காக அவர் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் பாத்திரப்படைப்போ, வசனங்களோ அவரோ நம்மை சிரிக்க வைப்பதில் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.
இயக்குனர் தன் முத்திரையைப் பதிப்பது இரண்டு இடங்களில். முன்பாதியில் தன் வீட்டில் பேயால் குழப்பத்துக்கு உள்ளான சச்சின் அலுவலகத்தில் தன் அறையில் வந்து அமர, அவரைச் சுற்றி இருக்கும் அவரது உதவியாளர்களுக்கு அவர் வந்ததோ, பேசுவதோ தெரியாமல் இருக்கும் காட்சி ‘செம.’
அதேபோல் இரண்டாவது பாதியில் வட இந்தியக் குடும்பத்தின் தலைவியான பாட்டி இறந்து போன தாத்தா சொன்னதாக குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க ஒரு உபாயம் சொல்லும் காட்சி.
ஆரம்பத்தில் கொஞ்சம் ஜவ்வு போல் காட்சிகள் இழுத்துக் கொண்டிருந்தாலும் பின்பாதியில் சரியான திகில் படத்தைப் பார்த்த அனுபவத்தை தந்து விடுகிறது டீமன்.
சச்சின் அபர்ணதியுடன் நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலரும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ரோனி ரபெல்லின் இசையும், ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவும் அபாரம். ரவிகுமார்.எம்மின் படத்தொகுப்பும் பின்பாதி படத்தில் பேய் வேலை பார்த்திருக்கிறது.
டீமன் – இன்னொரு ஓமன்..!