March 2, 2026
  • March 2, 2026
Breaking News
January 2, 2026

டியர் ரதி திரைப்பட விமர்சனம்

By 0 87 Views

பெண்கள் என்றாலே ஒதுங்கிப் போகும் ஃபோபியா உள்ள ஒருவனுக்கும் ஆண்களுடனேயே காலத்தை கழிக்க நேரும் பாலியல் தொழிலாளி ஒருத்திக்கும் ஒரு நாள் பொழுது உண்மைக் காதலைப் புரிய வைப்பதுதான் கதை.

இதை நேரடியான திரைக்கதை உத்தியில் சொல்லாமல் மாற்று சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.மணி. அத்துடன் டார்க் காமெடியையும் முயற்சித்து இருக்கிறார்.

அப்படி பெண்களைக் கண்டால் நடுங்கும் சரவண விக்ரமின் பதட்டத்தை போக்க, பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமானுடன் ஒரு நாளைக் கழிக்க நண்பன் ஒருவன் ஏற்பாடு செய்கிறான்.

ஆனால் இருவருக்குமே பாலியல் தொடர்பு என்பது ஒரு விஷயமே இல்லை என்பதால் இருவரும் மனம் விட்டு பேச ஆரம்பிக்கிறார்கள். பல இடங்களுக்கும் அவர்கள் பயணப்படும் போது ஒருவர் மனது அடுத்தவருக்கு புரிகிறது. 

இந்த நிலையில் ஹஸ்லி அமானை ரவுடி கும்பல் ஒன்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஏன் என்பதும் அவர்களிடம் ஹஸ்லி அமான் அகப்பட்டாரா என்பதும், சரவண விக்ரமுடனான அந்த ஒரு நாள் எப்படி கழிந்தது என்பதும் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு சுத்தமாக இருக்கிறது. ஆனால் இன்னும் நடிக்க முயற்சித்து இருக்கலாம். அவர் வழியாகவே கதையின் போக்கை நமக்கு கடத்துகிறார் இயக்குனர்.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தில் டைட்டில் ரோலில் நடித்திருக்கும் ஹஸ்லி அமான், தயக்கமின்றி அந்த பாத்திரத்தில் நடித்திருப்பதற்கு பாராட்டலாம். நடிப்பும் அவருக்கு எளிதாக வருகிறது.

ஆனால் படம் முழுவதும் ஸ்கோர் செய்திருப்பவர் வில்லன் பாத்திரத்தில் வரும் ராஜேஷ் பாலச்சந்திரன்தான். டார்க் காமெடி வகையறா படம் என்பதால் படம் முழுவதும் இவரது நக்கலும் நையாண்டியும் இடம் பெறுகிறது. 

ஆனால் ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு மனிதர் போகிற இடங்களில் எல்லாம் சுட்டுக் கொண்டே இருக்கிறார். அதில் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை.

ஒளிப்பதிவாளர் லோகேஷ் இளங்கோவன் படத்தின் தன்மையை புரிந்து கொண்டு பக்காவாக வேலை பார்த்திருக்கிறார்.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் அப்படியே. வழக்கத்துக்கு மாறான பின்னணி இசையாக தந்திருப்பதில் அவரது திறமை புரிகிறது.

படம் முழுவதுமே இரண்டு இடங்களில் நடக்கும் சம்பவங்களை மாற்றி மாற்றி கட் செய்து சொல்லி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரேம்.பி. அது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி, இரு வேறு நிலையில் இருக்கும் இயல்புக்கு மாறான மனிதர்களின் காதலை சொல்லி இருக்கிறார். 

அதை இயல்புக்கு மாறான வகையில் சொல்லி இருப்பதுதான் படத்தின் தனித்தன்மை. ஆனால் அதுவே வழக்கமான படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாத பலவீனத்தையும் தந்துவிடுகிறது.

இரண்டு தடவையாவது இந்த படத்தை பார்த்தால்தான் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது சராசரி ரசிகனுக்கு புரியும். 

மற்றபடி சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்ப ஏதுவான படம். 

டியர் ரதி – மாற்றுக் காதல்..!

– வேணுஜி