October 10, 2024
  • October 10, 2024
Breaking News
April 11, 2024

டியர் திரைப்பட விமர்சனம்

By 0 248 Views

சின்ன சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து எழுந்து விடும் நாயகன் ஜிவி பிரகாஷுக்கு உறக்கத்தில் மெகா டெசிபல் சத்தத்தில் குறட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷைத் திருமணம் செய்து வைக்கப் போய்… ஜிவியின் ‘பேட்  நைட்ஸ்’ மாறி ‘குட் நைட்’ வந்ததா என்பதே படத்தின் லைன்.

அதைக் கொஞ்சம் குறட்டை, நிறைய அரட்டையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

டிவி செய்தி வாசிப்பாளர் வேடத்துக்கு ஜிவி பிரகாஷின் குரலும், மாடுலேஷனும்  ஒத்துழைக்கின்றன. பெரிய சேனலில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற அவரது கனவு ஐஸ்வர்யா ராஜேஷ் விட்ட குறட்டையால் தூள் தூளாக அந்தப் பரிதவிப்பைத் தன் பதற்றத்தில் காட்டி நடித்திருக்கிறார் ஜிவி.

ஐஸ்வர்யா ராஜேஷ தன் பாத்திரம் புரிந்து அருமையாக நடித்திருக்கிறார். கணவனே கேட்டாலும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிற பிடிவாதத்திலும், கணவன் வீட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு முயற்சிகள் எடுப்பதிலும் இப்படி ஒரு மனைவி அமைய வேண்டும் என்று இளைஞர்கள் கேட்கும் அளவில் நடித்திருக்கிறார் ஐஸ். ஆனால் சூட்டைக் கிளப்பும் ஒரு குறை – குறட்டைதான்..!

ஜிவியின் அண்ணனாக நடித்திருக்கும் காளி வெங்கட் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தந்தை ஓடிப்போன வீட்டில் எத்தனை துன்பங்களை அனுபவிக்க நேருமோ அவ்வளவு துன்பங்களையும் அனுபவித்து… சிறிய வயதிலேயே வேலைக்குப் போய்… தம்பியைப் படிக்க வைத்து… அம்மாவை கவனித்து என்று மூத்த மகனுக்குரிய இலக்கணத்துடன் நடந்து கொள்ளும் பாத்திரத்தில் காளி வெங்கட் கவனத்தைக் கவர்கிறார்.

அவரது மனைவியாக நடித்திருக்கும் நந்தினியும் நயமான நடிப்பைத் தந்திருக்கிறார். ஒரே வீட்டுக்கு எப்படி இப்படி அருமையான இரு மருமகள்கள் அமைத்தார்கள் என்று அந்தக் குடும்பம் பொறாமைப் பட வைக்கிறது. 

என்றாலும் அதைக் கொண்டாட முடியாமல் ஜிவியின் அப்பா தலைவாசல் விஜய் கடன் தொல்லையால் குடும்பத்தை விட்டு ஓடி இருக்க… அம்மா ரோகிணியே குடும்பத்தைக் கட்டி காக்கப் போராடி கடைசி காலத்தில் இதய நோயில் விழுவதுடன் இளைய மகனின் இக்கட்டான வாழ்க்கையை நினைத்து வெதும்புவது வரை… அந்தக் குடும்பத்தில் நிறைய சிக்கல்களும் இல்லாமல் இல்லை. 

தன் பண்பட்ட நடிப்பால் அந்த அம்மா பாத்திரத்துக்கு உயிரூட்டி இருக்கிறார் ரோகிணி.

அதிக வசனம் இல்லாமல் அழுத்தமான நடிப்பிலேயே தன் பாத்திரத்திற்கு நியாயம் செய்கிறார் தலைவாசல் விஜய். 

ஐஸ்வர்யாவின் பெற்றோராக இளவரசுவும், கீதா கைலாசமும் பொருத்தமான ஜோடிக்கு இலக்கணமாக இருக்கிறார்கள்.

அங்கங்கே கலகலப்புக்குக் கட்டியம் கூறுகிறார் ஜிவியின் நண்பராக வரும் அப்துல் லீ.

எடுத்துக்கொண்ட கதையைச் சரியாக சொல்லி இருக்கும் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைக்கதையில் மற்றும் லாஜிக்கில் ஏற்பட்டிருக்கும் தொய்வைக் கொஞ்சம் கவனித்து சரி செய்திருக்கலாம்.

குறிப்பாக கணவன் இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் எத்தனைக் கஷ்டப்படுவார்கள் என்பதை அணு அணுவாக ஜிவி பிரகாஷ் அனுபவித்திருக்க, தான் பிரிந்தால் தன் குழந்தைக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்று ஒரு கட்டத்திலும் யோசிக்காமல் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு பிரிந்து போகும்படி மனைவியிடம் சொல்வது ஏற்புடையதாகவே இல்லை.

ஆனாலும் இயக்குனர் பல காட்சிகளில் சபாஷ் போடவும் வைக்கிறார். 

குறிப்பாக, விமானத்தில் செல்லும்போது ஜிவி சற்றே கண்ணயற, ஐஸ்வர்யாவும் தூங்க ஆரம்பிக்க அப்போது ஐஸ் விடும் குறட்டையில் ‘ஆகாயத்தில் பூகம்பம்’ என்கிற அளவில் விமானத்துக்குள் நடக்கும் சண்டை வளமான கற்பனை.

அதேபோல் படத்தின் முன் பாதியில் ஜிவியின் தலைமுடியைப் பார்க்கும்போது “இதை வெட்டித் தொலைத்தால்தான் என்ன..?” என்று நமக்கே ஒரு எண்ணம் ஏற்பட, அதை ரோகிணி யின் வசனத்தில் வைத்ததுடன் இரண்டாவது பாதியில் அந்த முடியைச் சீர் செய்தும் காட்சிப்படுத்தி இருப்பது இயக்குனரின் திறமைக்குச் சான்று.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு  ஊட்டி, இடுக்கி என்ற பயணப்பட்டு படத்திற்கு குளிரூட்டி இருக்கிறது. 

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்துடன் இணைந்து ஒலித்து இருக்கிறது. பாடல்களும், இசையும் கவனிக்க வைத்திருக்கின்றன.

ஆனால், ஒரு சோகப் பாட்டு வேண்டும் என்பதற்காகவே, ஜிவியைக் குடிக்க வைத்து சேர்த்திருக்கும் ஒரு பாட்டு, வேகத்தடையாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை விவாகரத்து கேட்ட எந்தப் படத்திலும் அப்படி ஒரு ஜோடி பிரிந்ததாக சரித்திரமே இல்லை. அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கு இல்லை.

டியர் – சவுண்ட் பார்ட்டி..!