வடசென்னையின் சினிமா வழக்கப்படியே தாதாயிச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் சாய் தீனா மற்றும் அபிஷேக்.
இவர்களின் உபரி தொழில்களை தாண்டி முக்கியமான தொழில் மும்பையில் இருக்கும் தாவுத் என்பவர் கைமாற்றச் சொல்லும் போதை மருந்தைக் கை மாற்றி விடுவது.
அப்படி தாவுதின் பொருள்களை தவறாக கையாடல் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு மரணம்தான். அத்தனை கொடூரமான தாவுத் யார் என்பதை அறிய ஒரு பக்கம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தாவுதின் கைமாற்றும் அசைன்மெண்டை சீனியரான சாய் தீனா பல வருடங்கள் செய்து வந்து கொண்டிருக்க, திடீரென்று ஒரு வருடம் வளர்ந்து வரும் அபிஷேக்கின் கைக்கு ஒரு சரக்கு மாறுகிறது. அதில் வெகுண்டெழும் சாய் தீனா அந்த சரக்கை அடைய நினைக்க தன் முதல் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அபிஷேக் நினைக்க… இந்தப் போராட்டத்தின் முடிவு என்ன என்பதுதான் கதை.
ஆனால் கதையின் நாயகனாக வரும் லிங்கா அப்பாவியான கார் டிரைவராக வருகிறார். ஏகப்பட்ட கடன் தொல்லையில் மூழ்கி இருக்கும் அவர் சந்தர்ப்ப வசமாக அபிஷேக் கின் அல்லக்கையாக இருப்பவர் தொடர்பு கிடைக்க… போதை வஸ்துவை கைமாற்றும் வேலை அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அப்பாவியாக வந்தாலும் முரட்டுத்தனமானவராக வந்தாலும் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார் லிங்கா. தன்னுடைய கஸ்டமராக வரும் சாரா ஆச்சரிடம் காதலைச் சொல்வார் என்று பார்த்தால் கடனைச் சொல்லி பண உதவி கேட்கும் இடம் பரிதாபம்.

கதை நாயகியாக வரும் சாரா ஆச்சராவது ஒரு கட்டத்தில் தன் காதலை லிங்காவிடம் சொல்லி விடுவார் என்று பார்த்தால் , வெறும் போக்குவரத்துக்கு மட்டும் அவரை பயன்படுத்திக் கொண்டு வில்லன் கோஷ்டியில்…. அதுவும் அவரது அல்லக்கை சரத்ரவியின் ஆசை நாயகியாக இருப்பது ஆகப்பெரிய ஏமாற்றம்.
அந்த விஷயம் நமக்குத் தெரிய வரும்போது கறந்த பால் கைதவறி மண்ணில் கொட்டியது போல் ஆகி விடுகிறது.
சாய் தீனாவும், அபிஷேக்கும் அவ்வப்போது முறைத்து முறைத்து ஒரு கட்டத்தில் மோதிக் கொள்கிறார்கள்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவுத்துறை அதிகாரியாக வரும் அர்ஜெய் வழக்கமான அதிகாரிகளைப் போலவே அங்கங்கே கோட்டை விடுகிறார்.
தாவுத் என்ற பெயரைத் தவிர அவரது புகைப்படமோ வேறு எந்த விஷயங்களோ காவல் துறைக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான். அந்த தாவூத்தை கடைசி வரை நமக்கும் கூட காட்டவில்லை. ஒருவித குழப்பத்துடன் முடிகிறது அவரது பாத்திரம்.

இவர்களுடன் அங்கங்கே மணியை ஆட்டிக்கொண்டு நகைச்சுவை புரியும் ஷாரா மற்றும் திலீபன், வையாபுரி, ராதாரவி உள்ளிட்டோர் நியாயமான வேடங்களில் வந்து படத்தின் தரத்தை தூக்கி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி பாடல்களை விட பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த்தின் ஒளிப்பதிவு, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளும் பிரம்மாண்டத்தை தந்திருக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் ராமன், ஒரு சஸ்பென்சுடன் படத்தை நகர்த்தி இருக்கிறார். அதற்கு அவர் எடுத்துக் கொண்டது, படம் முழுவதும் ஒரே ஒரு சரக்கு கைமாறும் சம்பவத்தை மட்டுமே. மேலும் சில சம்பவங்களைச் சேர்த்து இருந்தால் கூடுதல் சுவாரசியமாக இருந்திருக்கும்.
தாவுத் – தீராத சஸ்பென்ஸ்..!
– வேணுஜி