இன்றைக்கு சினிமாத்துறையில் பலருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயரெடுத்த முன்னணி நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டமும் இருக்கிறது.
தான் செய்யும் செயல் பிறருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனைத் தூக்கி எறிந்து விடுவார். அப்படித்தான் தமிழர் விரோதப் போக்குள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் அப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்திலிருந்து அவர் விலகினார்.
ஆனால், சமீபத்தில் அவர் செய்த செயலொன்று அவரை பலரையும் கடுமையாக விமர்சிக்க வைத்திருக்கிறது. பொதுமக்களை ஆன்லைனில் மளிகைப் பொருள்களை வாங்க வைக்கும் ‘ஆப்’பான ‘மாண்டி’ (Maandee) யின் விளம்பர மாடலாகி அதன் விளம்பரத்தில் ஆன்லைன் மளிகைப் பொருள்களை வாங்கச் சொல்கிறார்.
சமீப காலமாகவே இதுபோன்ற ஆன்லைன் வணிகத்தால் சிறு குறு வியாபாரிகள் நலிவடைந்து வரும் நிலையில் இப்படி முன்னணி ஹீரோவான இவர் ஆன்லைன் வணிகத்துக்கு ஆதரவு தருவது தவறு என்று அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்து வலுத்து வருகிறது.
“அவரது படங்களை ஆன்லைனில் பார்த்தால் அவர் பொறுத்துக் கொள்வாரா..?” என்று அவரை எதிர்ப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..!
இதற்கிடையில் வரும் 4ம்தேதி திங்கள்கிழமை காலை விஜய் சேதுபதியின் விருகம்பாக்கம் அலுவகத்தை முற்றுகையிட வணிக போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.