April 26, 2024
  • April 26, 2024
Breaking News
June 10, 2022

777 சார்லி திரைப்பட விமர்சனம்

By 0 622 Views

வித்தியாசமான கதைகளுக்குதான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஒரு நண்பன் நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு காதலி நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு குழந்தை நம் வாழ்க்கைக்குள் வந்தால்…. என்னென்ன மாற்றங்கள் – சந்தோஷங்கள் நிகழும் என்றெல்லாம் இதுவரை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் ஒரு நாய் வாழ்க்கைக்குள் வர, தனிமையில் வாழும் நாயகன் ரக்ஷித் ஷெட்டியின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிரண்ராஜ்.கே.

ஒரு விபத்தில் தன் அழகான குடும்பத்தை இழந்து ஊரோடு ஒட்டாமல் தனிமையில் வாழும் ரக்ஷித் ஷெட்டியின் வாழ்வில், ஒரு பாதகனின் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாய்க்குட்டி தப்பி வந்து சேர… அந்த அற்புதம் நிகழ்கிறது.

பல்லாண்டுகளாக சிரிப்பை மறந்து இருந்த ரக்ஷித் ஷெட்டி இப்போது சிரிக்க ஆரம்பிக்கிறார். ஊர் உலகம் அவரை தோழமையுடன் எதிர்கொள்கிறது. வாழ்வில் மீண்டும் வசந்தத்தை நுகர ஆரம்பிக்கும் வேளையில் அந்த நாய் அவரை பிரியும் சூழ்நிலை உருவாக அடுத்து என்ன என்பதுதான் மீதிக்கதை.

சார்லி சாப்ளினின் தீவிர ரசிகராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி தன்னிடம் வந்து சேர்ந்த பெண் நாய் குட்டிக்கு சார்லி என்ற பெயரை சூட்டுகிறார். பெண் நாய்க்கு ஆண் பெயரா என்று குழம்ப வேண்டாம். அது ஏன் பெண் நாயாக இருக்க வேண்டும் என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

வெறுப்புடன் வாழும் சூழலுக்கும் சரி சந்தோஷத்தை அனுபவிக்கும் சூழலுக்கும் சரி ரக்ஷித் ஷெட்டியின் முகபாவங்கள் நன்றாகவே ஒத்துழைக்கின்றன. சார்லியின் விருப்பத்தை நிறைவேற்ற கையிலிருக்கும் சொற்ப பணத்துடன் அவர் பனிமலை தேடிச்செல்லும் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கின்றன.

அதுவும் பனி மலையை நெருங்கும் நேரம் பனிச் சரிவு ஏற்பட்டு பயணம் தடைப்பட, அவர் படும் பாடும் அந்த தடைகளை மீறி சார்லியின் விருப்பமான பனி மலைக்கு இட்டுச் செல்வது ஒரு ஆக்ஷன் படத்துக்கான நேர்த்தி.

அவரை விடுங்கள். அவருக்கு சினிமா தெரியும். கேமரா தெரியும் – ஆங்கிள் தெரியும் நடித்துவிட்டார். ஆனால் சார்லியாக நடித்திருக்கும் நாய்க்கு கொஞ்சம் கூட நம்மை ஒரு கேமரா படமாக்கிக்கொண்டு இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் அதுபாட்டுக்கு திரையில் அப்படி ஒரு அற்புத உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறது.

இதுவரை விலங்குகளை மையப்படுத்தி வந்த படங்களிலேயே இந்தப் படத்தில் நடித்திருக்கும் சார்லியின் நடிப்புதான் அபாரம் எனலாம். சொல்வதைச் செய்வது என்றில்லாமல் கேரக்டரை உள்ளுக்குள் வாங்கிக் கொண்டு சார்லி, கேமராவை பார்க்காமல் போகிற போக்கில் தன் பாட்டுக்கு நடித்து நம்மைக் கவர்கிறது. 

படத்தில் நாயகி பாத்திரம் ஒன்று வேண்டுமே என்பதற்காக சங்கீதா சிருங்கேரியை நடிக்க வைத்திருக்கிறார்கள். விலங்கு ஆர்வலராக வரும் அவருக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் காதல் மலர்ந்து விடும் என்று நாம் எதிர்பார்த்தால் அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் ரக்ஷித் ஷெட்டிக்கும் சார்லிக்கும் இருக்கும் பந்தத்தை பார்த்து பரவசப்படுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

பெற்றோரின் ஆசை… காதலியின் ஆசை இதற்காக என்னவெல்லாமோ சினிமாவில் செய்து காட்டியிருக்கிறார்கள். ஆனால் தான் அன்பு செலுத்தும் ஒரு நாயின் ஆசைக்காக பல கிலோமீட்டர் பயணப்பட்டு பாதி இந்தியாவெங்கும் நாயகன் சுற்றிவரும் இந்தக் கதை நிச்சயம் வித்தியாசமானதுதான்.

ஒரு மெல்லிய லைன் கொண்ட கதையை இத்தனை பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் இயக்குனரும் முக்கியமாக இதற்கான பிரம்மாண்ட செலவை ஏற்றிருக்கும் தயாரிப்பாளர் குப்தாவும் பாராட்டுக்குரியவர்கள். அவருடன் இணைந்து இந்த படத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் தானும் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி. 

வளர்ப்பு மிருகங்களை வைத்திருப்போர் கண்டிப்பாக இந்த படத்தைக் கொண்டாடவே செய்வார்கள். அதையும் தாண்டி குடும்பங்களையும் குழந்தைகளையும் கவர்வதற்காக நிறைய சென்டிமெண்ட் விஷயங்களை படம் எங்கும் அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர்.

ரக்ஷித் ஷெட்டி இட்லி வாங்கும் கடை நடத்தும் வயதான தம்பதியினர் நம் உள்ளத்தை நெகிழ வைக்கிறார்கள். அவர்களின் அருமையை கூட சார்லிதான் ரக்ஷித்துக்கு உணர்த்துகிறது.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக ஒரு பாத்திரத்தில் வருகிறார் பாபி சிம்ஹா. அவரது பாத்திரப் படைப்பும் அவர் வசிக்கும் இடமும் மிகுந்த ரசனையுடன் இருக்கிறது.

கையில் காசு இல்லாமல் போனாலும் தனக்கு உதவிய பாபி சிம்ஹாவுக்கு தன்னாலான பண உதவியை அவர் அறியாமல் ரக்ஷித் செய்துவிட்டு வருவது ஹீரோயிஸம்.

பனிமலைகளில் ஓடிஓடி படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள். அதேபோல் நெஞ்சை நெகிழ வைக்கும் இசைக்கு சொந்தக்காரரான பாராட்டலாம்.

படத்தின் நீளம் ஒன்றே இந்த சுவாரசியமான கதையை அங்கங்கே ஸ்பீட் பிரேக்கர் போட்டு ரசிக்க விடாமல் செய்கிறது. மனதை கல்லாக்கிக் கொண்டு ஒரு அரை மணிநேர நீளத்தை வெட்டி குறைத்தால் அற்புதமான படம் ஒன்று கிடைக்கும்.

சார்லி – வாவ்… வாவ் சொல்ல வைக்கும் வள்… வள்..!