April 26, 2024
  • April 26, 2024
Breaking News
December 13, 2019

‘கேப்மாரி’ திரை விமர்சனக் கண்ணோட்டம்

By 0 1495 Views

தமிழ் ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… முதுபெரும் இயக்குநர் எஸ்ஏசி இயக்கத்தில் இன்று வெளியாகும் ‘கேப்மாரி’ படத்தை எப்படியாவது பெரு வெற்றிபெறச் செய்ய மன்றாடி வேண்டுகிறோம்…

எப்படிப்பட்ட இயக்குநர் எஸ் ஏ சி..? ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் சதாப்தி எக்ஸ்பிரஸ் போலக் கடந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியவர். தொடர்ந்து சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு ‘விளையாடி’ சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

சட்டத்துறைக்கு இவர் ஆற்றிய கலைப்பணிக்கு இவருக்கு ஒரு கௌரவ ‘சட்ட அமைச்சர்’ பதவி கூட கொடுத்திருக்கலாம்..! சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ இன்றைக்குப் பார்த்தாலும் பக்காவான கமர்ஷியல் படம். அதன் மூலம் பாலிவுட் வரை போய் ‘தமிழ்க்கொடி’ பறக்க விட்டு வந்தவர்..!

அதுமட்டுமா..? விஜயகாந்த், விஜய் என்று தமிழின் தவிர்க்க இயலாத நட்சத்திரங்களை மட்டுமல்லாமல் பவித்ரன், ஷங்கர், எம்.ராஜேஷ் உள்ளிட்ட இயக்குநர்களை… பல இசையமைப்பாளர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு… தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளிலும் தலைமையேற்ற பெருமை பெற்றவர்…

தனக்குக் கீழ் வேலை பார்க்கும் படத்தின் பி.ஆர்.ஓ உள்பட அனைவரையும் “சார்…” என்றழைக்கும் பண்பாளர்..!

அத்தனையும் மீறி இன்றைக்கு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய ‘விஜய்யின் அப்பா’ என்பது எந்த அப்பாக்களுக்கும் கிடைக்காத அரும்பேறு. அதன் பின்னணியிலும் அவரது அயர்வறியா உழைப்பு இருக்கிறது.

இந்தப் பெருமைகளோடு அப்பாவை அண்ணாந்து பார்த்த விஜய், “நீங்கள் உழைத்ததெல்லாம் போதும். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்..!” என்றார். இதைவிட ஒரு தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும் பெருமை சேர்க்க முடியுமா..?

ஆனால், விட்டாரா எஸ்ஏசி..? விஜய் அப்படிக் கேட்டுக்கொண்ட கடைசி முயற்சிக்குப் பியன்னரும் ஆறேழு படங்கள் இயக்கி அத்தனையிலும் ‘டக் அவுட்’ ஆனார். அவர் மீது உள்ள மரியாதையில் இதையும் ஆரோக்கியமாகப் பார்த்தால் அவரது கலைத்தாகம் அடங்கவில்லை என்றே கொள்ள முடியும். அதிலும் சில முயற்சிகள் “அடடே…” என்ற அளவில் இருந்தன.

அப்போது தமிழ் சினிமாவில் முகிழ்த்துக் கிளம்பிய வசந்தபாலன், பாலாஜி சக்திவேலுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டவர் அவர்கள் போல் தன்னாலும் எடுக்க முடியும் என்று ஈஸிசேரிலிருந்து எழுந்து முறுவலித்து சில முயற்சிகளை எடுத்தார்.

என்னதான் பிடறியை சிலிர்த்துக்கொண்டு யானையையே வேட்டையாடிய சிங்கமானாலும் கடைவாய் போன கடைசி காலத்தில் அடித்துக் கொண்டுவந்த போட்ட அணில்கறியைக் கூட முக்கல் முனகலுடன்தானே விக்கலும், சிக்கலுமாய் முழுங்கிப் புரையேற வேண்டும்..? அப்படியானது அந்தப் படங்கள்…

அப்போதும் கலைத்தாகம் தணியாத ‘புரட்சி இயக்குநர்’, கால்சட்டை அணியாத கன்னிப்பெண்களின் கவட்டைக்குக் கீழ் கேமராவை வைப்பதுதான் இளைமைப் புரட்சி என்று இன்றைக்கு அண்ணாந்து பார்த்து காறித்துப்பிக் கொண்டிருக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இவர்களுடன் ‘மல்லுக்கட்ட’ முடிவெடுத்ததுதான் ஆகப்பெரும் சோகம்.

இப்படியொரு ‘பாலியல் குப்பை’ படத்துக்கு தலைப்பு ஒன்று யோசித்திருக்கிறார் பாருங்கள். இந்திய சினிமாவின் கண்ணியத்தை என்றென்றைக்கும் நினைவுகூறும் வகையில் இவர் யோசித்த ‘கேப்மாரி’ என்ற தலைப்புக்கே தாதா சாகிப் பால்கே உயிருடன் இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

‘சென்னை 28’, ‘சுப்ரமணியபுரம்’ என்று தமிழின் குறிப்பிடத் தகுந்த படங்களில் நடித்து அடுத்த விஜய் இவர்தான் என்று நினைக்க வைத்து… (சரி… சரி… டென்ஷனாகாதீர்கள்..!) தன் அக புற ஒழுக்க நிலைகளால் அடுத்த ‘சிம்பு’வான ‘ஜெய்’தான் படத்தின் ஹீரோ. இந்தப்படத்தில் நடித்ததைவிட அவர் ‘புளூ வேல்ஸ்’ ஆடி நாடியை அறுத்துக்கொண்டு மாடியிருந்து குதித்திருக்கலாம்.

அவரையாவது விடுங்கள்… காலம் போனாலும் அண்ணன், மாமா, சித்தப்பா வேடங்களில் நடித்து கரையேறிக் கொள்ளலாம். கோலிவுட்டில் புதிதாகக் குடியேறி வண்ணக்கனவில் மிதந்து வலம் வரும் அதுல்யா ரவி என்ற இருபது வயதுபெண்ணை கள்ள மனைவியாக்கி, கர்ப்ப ஸ்திரீ ஆக்கி அதுல்யாவின் பயணச்சாலைக்கு ‘டோல்’ போட்டாலும் பரவாயில்லை ‘டோர்’ போட்டே மூடிவிட்டார்.

படம் முழுதும் பீர் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள் ஆணும், பெண்ணும். மது குடிப்பது குற்றம் என்ற ‘டிஸ்கிளைமர்’, சப்டைட்டில் போல் படம் முழுதும் வந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் என்னதான் சொல்ல வந்திருக்கிறார் எஸ்.ஏ.சி..? இன்றைய இளைஞர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றா… அல்லது இப்படி இருக்க வேண்டுமென்றா..?

அன்றைய அவரது புரட்சிப் படங்களில் அவ்வப்போது தலைகாட்டி ‘சமுதாயத்துக்கு நீதி சொல்லி’ ஒரு பாட்டுப்பாடுவார். இந்தப்படத்திலும் அவர் வருகிறார் இன்ஸ்பெக்டராக. ஒரு பைக்கில் இரண்டு, மூன்று ‘பார்ட்டி’களை ஏற்றிக்கோண்டு போகும் ஜெய்யை நோக்கி “துப்பாக்கியை எடுத்து சுடுங்க சார்..!” என்பார் உடனிருக்கும் கான்ஸ்டபிள். உடனே இவர் துப்பாக்கியை எடுத்து அந்த கான்ஸ்டபிளை சுட்டு விடுகிறார்..!?

இதுதான் பாலியல் சட்டப்படி நீதிக்கு அவர் தரும் தண்டனை..!

சரி… இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். இவரது இந்தக் கலைத்தாகம் இப்படியே நீடித்துக்கொண்டு போனால் தமிழ் சினிமாவும், ரசிகர்களும் தாங்குவார்களா..?

சாமானிய மனிதர்களால் முடித்து வைக்க முடியாத சாகசங்களை எல்லாம் சூப்பர் ஹீரோக்கள் சாதிப்பார்கள். ஆனால், சூப்பர் ஹீரோவும், அவரது மகனுமான விஜய்யாலேயே அவரது கலைத் தாகத்தை அடக்க முடியவில்லை எனும்போது சாமானியர்களான நாம் என்னதான் செய்யலாம்..?

அதற்காக மண்டையைக் கசக்கி விபரீதமாகச் சிந்தித்து ‘முதுமக்கள் தாழி’ முறையையெல்லாம் யோசித்துக் கருத்து சொல்லாதீர்கள்.

அதைவிடச் சிறந்த வழியை அவரே கடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார். “ஒரு வெற்றியுடன் என் இயக்கப் பணியை முடித்துக்கொள்வதாக இருக்கிறேன். இந்தப்படம் வெற்றியடைந்தால் இனி படங்கள் இயக்க மாட்டேன்..!” என்பதுதான் அது.

கத்தியின்றி ரத்தமின்றி இந்தப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இதைவிடச் சந்தர்ப்பம் நமக்கு வாய்க்கப் போவதில்லை. தமிழில் சரித்திரம் படைத்த ஒரு இயக்குநரை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வழியனுப்பி வைக்க இதைவிட ஒரு தருணம் அமையாது. அதனால்தான் பொது மக்களின் நலன் கருதிக் கேட்டுக் கொள்கிறோம்…

‘கேப்மாரி’யை வெற்றி பெறச் செய்யுங்கள்..!

– வேணுஜி