September 16, 2024
  • September 16, 2024
Breaking News
August 18, 2023

புரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்பட விமர்சனம்

By 0 740 Views

சினிமா ஆசை பலரையும் பல வகையிலும் பாடாய்ப் படுத்துகிறது. பெரிய பட்ஜெட்டைப் போட்டு படம் எடுப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்க பயந்து கொண்டு வழக்கமாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்க சிறிய பட்ஜெட்டுடன் வருபவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு எப்படியும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இது. ஒரு குறும்படத்துக்கான சாத்தியத்தில் இருக்கும் இந்த பெரும் படத்தின் கதை என்னவென்பதை கிறிஸ்டோபர் நோலன் படத்தைப் புரிந்து கொள்பவர்கள் கூட புரிந்து கொள்ள முடியாது.

ஒரு கனவு எப்படி தொடர்பு இல்லாத கதையைக் கொண்டிருக்குமோ அப்படித்தான் இந்த படத்தின் கதையும் இருக்கிறது.

இந்தப் படத்தின் கதை எழுதி நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ஜோ ஜியாவினி சிங் , சைக்கோ என்ற கேரக்டரில் வருகிறார்.

ஒரு பக்கம் மனித உடலில் இருந்து உறுப்புகள் திருட்டும் அது தொடர்பாக மருத்துவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதும், இன்னொரு பக்கம் டிராவல்ஸ் நடத்தும் ஒரு குடும்பம் தாங்கள் பிழைக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுவும் சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு விஷயத்தையும் இணைக்கும் முடிச்சாக ஜோ ஜியாவினி சிங் வருகிறார். 

ரியோ ராஜ், நபிசா ஜூலாலுதீன், மூணிலா உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கிறார்கள்.

சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் படம் அங்கங்கே திடீரென்று காமெடிப் படமாக மாறிவிட எதிர்பாராத அதிர்ச்சியில் நாம் சிரித்து வைக்கிறோம்.

அப்படித்தான் டிக்கெட் போட வந்த சிங்கப்பூர் ரஜினி என்ற கேரக்டர் டிக்கெட் போட்டு கொடுக்கும் நாயகியைப் பார்த்ததும் அவள் மீது மையல் கொண்டு ஜானி படத்தில் வரும்  பாடலை அவளும் தானும் நடித்துப் பாடுவதாக கற்பனையில் காணும் காட்சி நம்மைக் குலுங்கிச் சிரிக்க வைக்கிறது.

அதேபோல் நாயகன் ஜோ ஓரிடத்தில் தன்னுடைய உருக்கமான கதையை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்நீஷிடம் சொல்ல அவரோ அதைக் கேட்டுச் சிரித்தபடி, “இங்கே இருந்து ஓடிவிடு… இது நாளை நமதே படத்தின் கதை..!” என்று சொல்ல அடுத்த நிமிடமே நாளை நமதே எம்ஜிஆர் கெட்டப்பில் கிட்டாருடன் வரும் ஜோ நாளை நமதே பாடலைப் பாடிய படி இன்ஸ்பெக்டரைப் போட்டுத் தள்ளுவதும் இந்த வகையான நகைச்சுவைதான்.

சிங் என்று பெயரை வைத்துக் கொண்டு வெள்ளைக்காரன் போலிருக்கும் ஜோவைப் பார்த்து ஓரிடத்தில் இன்னொரு கேரக்டர், “ஒரு தமிழனாக இருந்து கொண்டு நீ இதைச் செய்யலாமா..?” என்று கேட்கும் போது அதைவிட சிரிப்பு வருகிறது.

பெரிய மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக்  கொண்டிருக்க, அதை தான்தான் செய்தேன் என்று சைக்கோ 2 என்ற கேரக்டரில் வரும் குணாளனும் இன்னொரு பக்கம் ஜோவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முடிவாக யார்தான் அதை செய்தார்கள் என்பது பெரிய சஸ்பென்ஸ்.

படத்தின் ஆரம்பக் காட்சியையும், முடிவுக் காட்சியையும் பார்க்காதவர்கள் இந்தக் கதையை எப்படியும் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. அந்த இரண்டு காட்சிகளையும் பார்த்து விட்டால் ஒரு மாதிரி மனதைத் தேற்றிக் கொண்டு கதை இதுவாக இருக்கலாம் என்று யூகிக்க முடியும்.

சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது. ஆனால் ஆச்சரியமாக பிரவீன் விஷ்வா மாலிக்கின் இசை ஒரு சிறந்த தமிழ் படத்துக்குரிய நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

யாரையும் ஏமாற்றாமல் யாரையும் புண்படுத்தாமல் எந்த தயாரிப்பாளரின் தலையிலும் கை வைக்காமல் தனக்குத் தோன்றியதை செய்து முடித்த ஜோவின் தைரியமும் தன்னம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

துண்டு துண்டான திரைக்கதையை கொண்ட இந்த படத்துக்கு புரோக்கன் ஸ்கிரிப்ட் என்று தலைப்பிட்டு இருப்பதும் பொருத்தமான விஷயம்தான்.