April 29, 2024
  • April 29, 2024
Breaking News
March 30, 2024

பூமர் அங்கிள் திரைப்பட விமர்சனம்

By 0 178 Views

படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார் என்றதும் அவர்தான் பூமர் அங்கிளாக நடிக்கப் போகிறார் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

முதலில் பூமர் அங்கிள் என்றால் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் போன்றவர்களைப் போலவே இந்தியாவில் சக்திமான் என்று ஒரு சூப்பர் ஹீரோ இருந்தார் இல்லையா..? அவர்தான் இப்போது வயதாகி பூமர் அங்கிள் ஆகிவிட்டார்.

அந்த வேடத்தில் நடிப்பவர் எம்.எஸ்.பாஸ்கர் ஆனால், இந்தக் கதையை நீங்கள் தெரிந்து கொள்ள படத்தின் இரண்டாம் பாதிதான் கை கொடுக்கிறது.

முதல் பாதியில் யோகி பாபுவை ஒரு ரஷ்யப் பெண் மணந்து கொண்டு அவரது பூர்வீக பங்களாவில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறார். ஆக அதற்காகத்தான் அவர் யோகியை கல்யாணம் செய்து கொண்டார் என்று அறிக.

அதே பங்களாவுக்குள் அந்த ஊர் நாட்டாமையாக வரும் ரோபோ சங்கர், சேஷு , கேபி பாலா, தங்கதுரை மற்றும் யோகி பாபுவின் அப்பாவின் அசிஸ்டன்ட் இருவர் என்று கும்பலே புழங்கிக் கொண்டு இருக்கிறது.

சரி… யோகி பாபுவின் விஞ்ஞானி அப்பா யார் தெரியுமா..? அவர் மதன் பாப். அவர் கண்டுபிடித்த 8.0 ஃபார்முலாவின் படிதான் மேற்படி ஸ்பைடர் மேன், பேட்மேன், ஹல்க் உள்ளிட்டோர் உருவானார்கள். ஆனால் அதை நம் இந்திய தேசம் கண்டுகொள்ளாமல் போக, உள்ளே புகுந்த அமெரிக்காக்காரன் இந்த பார்முலாவை தள்ளிக் கொண்டு போய் மேற்படி சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி விட்டு விட்டான்.

எனவே இந்தியாவுக்கு என்று ஒரு சூப்பர் ஹீரோவைத் தயார் செய்ய 9.0 என்ற ஃபார்முலாவை மதன் பாப் கண்டுபிடிக்க அதற்குப்பின் இறந்து போகிறார். அந்த பார்முலாவை இந்தமுறை ரஷ்யாவுக்கு தள்ளிக் கொண்டு போகத்தான் ரஷ்ய உளவாளி யோகி பாபுவின் மனைவி வேடத்தில் உள்ளே நுழைந்து இருக்கிறார்.

இந்த விஷயம் தெரியப் போய் மேற்படி காமெடி யன்களும் இந்த ஃபார்முலா வளையத்துக்குள் வந்து ஒரு கட்டத்தில் ரோபோ சங்கர் ஹல்க்காகவே மாறிவிடுகிறார்.

படம் முழுவதும் அரை டிராயர் போட்ட பெண்கள் இங்குமங்கும் போய்க்கொண்டிருக்க இதெல்லாம் போதாது என்று இரண்டாம் பாதியில் அதே அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு ஓவியா வந்து நடனமாடி சண்டையெல்லாம் போட்டுவிட்டுப் போகிறார். (அவரும் ஒரு சூப்பர் ஹீரோயின்)

கதையாகக் கேட்கும் போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது ஆனால் படமாக்கும் போது நிறைய சிரமப்பட்டு இருக்கிறார் இயக்குனர் ஸ்வதேஷ்.எம். எஸ்.

யோகிபாபு உள்ளிட்ட அனைத்து காமெடியன்களும் தங்களுக்கு என்ன வருமோ அதைச் செய்துவிட்டு போகிறார்கள்.

கிளாமர் நடிகை சோனாவும் சின்ன ஒரு கேரக்டரில் வருகிறார். ஆனால் அவருக்குப் புடவை கட்டி விட்டு  நம் ஆர்வத்தைக் கெடுத்து விட்டார்கள்.

சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவும், சந்தான் தர்மபிரகாஷின் இசையும் ஓகே.

இத்தனை காமெடியன்கள் இருந்தும் பத்து இடத்திலாவது நம்மை மறந்து சிரிக்க வைத்திருக்கலாம்.

பொழுது போகாதவர்களின் புகலிடமாக அமைவார் இந்த பூமர் அங்கிள்..!