January 28, 2022
  • January 28, 2022
Breaking News
December 23, 2021

பிளட் மணி Blood Money படத்தின் திரை விமர்சனம்

By 0 81 Views

இருபத்து ஏழரை மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான ஒரு திரில்லர்.

படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை பார்க்கிறார். சமையல் ஷோ நடத்தி கொண்டிருந்தவருக்கு செய்திப் பிரிவுக்கு புரமோஷன் கிடைக்க அவர் ஏற்றுக் கொள்ளும் முதல் வேலையே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகிறது.

குவைத்தில் வேலை பார்க்கும் கிஷோரும் அவரது தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க அவர்கள் ஏற்படுத்திய ஒரு விபத்துக்காக ஐந்து வருடம் கழித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர ஒரு நாளே இருக்க அதை பிரியா பவானி சங்கர் தன் மீடியா மூலம் சாதித்தாரா என்பதே கதை.

வந்தோம் ஆடினோம் பாடினோம் ரிப்பீட்டு… என்று இல்லாமல் ஒரு வலுவான கதை அமைப்புக்குள் கிட்டத்தட்ட நயன்தாரா தேர்ந்தெடுக்கும் ஒரு கதையைப் போல ப்ரியா பவானி சங்கருக்கு இந்த படம் அமைந்திருக்கிறது.

பிரியாவும் அலட்டிக்கொள்ளாமல் நடித்து பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். அதிகபட்சம் இரண்டு ஆடைகளில் மட்டும் வந்திருக்கும் அவரை அதற்காகவும் பாராட்ட முடியும்.

அவரது சீனியராக வரும் சிரிஷ் ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் பின்னர் பிரியாவின் நல்லெண்ணத்துக்குத் துணை வந்து அவரது நோக்கம் நிறைவேற கடைசி வரை உதவிக் கொண்டிருக்கிறார். சிரிஷின் பாத்திரப் படைப்பும் அவரது நடிப்பும் கூட நிறைவாகவே இருக்கிறது.

குவைத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் குற்றவாளியான கிஷோர்தான் படத்தின் ஆணிவேராக பாத்திரம் ஏற்றிருக்கிறார். செய்யாத குற்றத்துக்கு தான் மட்டுமிலலாமல் தன் தம்பியும் சேர்த்து தூக்கிலிடப்பட இருக்க அந்த ஒரு நாளில் அவர் படும் பாடு நமக்கு வலிக்கிறது.

கிஷோரின் தம்பியாக நடித்திருக்கும் நபரும் நிறைவாக நடித்திருக்கிறார். 

கிஷோரின் மகளாக நடித்திருக்கும் அந்த 8 வயது சிறுமி படம் பார்க்கும் அனைவரையும் தன் கண்ணீரால் நெகிழ வைக்கிறாள். அவளது கண்ணீரே அனைவரது மனசாட்சியையும் உசுப்பி விட்டு கிஷோரை மீட்க பெருமளவில் உதவுகிறது.

கிஷோரின் தாயாக நடித்திருக்கும் ஶ்ரீலேகாவும் தமிழ் சினிமாவில் மிகுந்த இடைவெளிக்கு பிறகு தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிஷோரின் அப்பாவாக வரும் நபரும் அழுத்தமான பாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மீடியா செய்தி ஆசிரியராக வரும் சுப்பு பஞ்சுவும் கச்சிதம்.

துணைப் பாத்திரம்தான் என்றாலும் கலெக்டரின் உதவியாளராக நடிக்கும் சுப. செந்தில்குமரனின் செய்கையே எல்லா நன்மைக்கும் மூல காரணமாக அமைவது பாராட்ட வைக்கிறது. அவரும் நேர்மையான நடிப்பை தந்திருக்கிறார். ஆனால் அவருக்கு யாரும் எந்த இடத்திலும் நன்றி சொல்லவில்லை.

ஒரு மெல்லிய இழையை திரைக்கதையாக மாற்றும் போது அதன் சுவாரஸ்யம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அற்புதமாக திரைக்கதையை நகர்த்தி இருக்கும் சங்கர்தாஸுக்குப் பாராட்டுக்கள்.

அதில் முதலில் விபத்து என்று நினைக்கும் விஷயம் பிறகு கொலையாக மாறி அந்தக் கொலையையும் அவர்கள் செய்யவில்லை என்று பின்னால் உருமாறி அதற்கு வழங்கப்பட்ட பிளட் மணி பணமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேரவில்லை என்று நகர்வதும் அடுத்தடுத்த சுவாரஸ்யமான திருப்பங்கள். அதில் ஈழத்தமிழர்களின் கண்ணீரும் அடங்கியிருப்பது இன்னும் அழுத்தம் சேர்க்கிறது.

பாலைவனமே கிடைத்தாலும் அதையும் என் கேமராவின் மூலமாக பளிங்காக மாற்றிக் காட்டுவேன் என்று கங்கணம் கட்டி செயல்பட்டுருக்கும் ஒளிப்பதிவாளர் ஜி.பாலமுருகனின் கைவண்ணம் படம் முழுவதையும் காட்சி கவிதையாக தூக்கி நிறுத்தியிருக்கிறது.

அதே போன்று தேவையான இடங்களில் மட்டுமே பயணத்திற்கும் சதிஷ் ரகுநந்தனி பின்னணி இசையும் படத்தில் நேர்த்தியைக் கூட்டி இருக்கிறது.

கள்ளத்தோணியில் போய் மன்னிப்பு கடிதம் வாங்கி வருவதெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை. அதேபோல் வாட்ஸ் அப்பில் வரும் அந்த மன்னிப்பு கடிதத்தை பார்த்தவுடன் தூக்கில் தொங்க விடப்பட்டவர்களை நிறுத்தி இறக்குவதும் பரபரப்புக்கு உதவுகிறதே தவிர சாத்தியமாகும் லாஜிக் இருப்பதாகத் தோன்றவில்லை.

சந்தடி சாக்கில் மீடியா துறையிலும் அது பெண்ணாகவே இருந்தாலும் ஒரு பிரமோஷன் கிடைக்கிறது என்றால் தண்ணி பார்ட்டி வைத்து மஜாவாக இருக்கிறார்கள் என்பதையும் இயக்குனர் சொல்லி இருக்கிறார். அது ஒரு விவாத பொருளாக மாறக்கூடும்.

ஆனால் நேர்த்தியான ஒரு படம் பார்த்த நிறைவு நமக்கு கிடைப்பதில் இயக்குனர் சர்ஜுன் கே எம்மைப் பாராட்டலாம்.

பிளட் மணி – அரபு நாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஒரு அபாய சங்கு..!