2021 ல் ஜீ5 ‘மதில்’, ‘விநோதய சித்தம்’. ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கியதைத் தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் உருவான இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், “ப்ளட் மணி’ படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிகையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி..!”.
நடிகர் கிஷோர் கூறுகையில், “வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உலகம் முழுதும் நிகழ்ந்திருக்கும் நகரமயமாக்கலில் இன்று இது சாதாரணமாகிவிட்டது. ‘ப்ளட் மணி’ வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் அவலத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. அதே நேரம் இன்றைய சமூகத்தில் இதில் உள்ள விவரங்களை வெளிப்படுவத்திலும், சமூகத்தில் இது பற்றிய மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கையும் இது வலியுறுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, பணக்கார வாழ்க்கையைத் தேடி, அனைத்தையும் விட்டுவிட்டு, வெளிநாட்டிற்கு, தெரியாத நிலத்திற்கு பயணம் செய்வதற்கு முன்பு, எவரையும் ஒருமுறைக்கு இருமுறை இந்த படம் யோசிக்க வைக்கும். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஊடகங்கள் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் உணர்ச்சிகரமான விஷயங்களை திரையில் கொண்டு வந்ததற்காக புகழ்பெற்ற இயக்குனர் சர்ஜுனுடன் மீண்டும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..!”
நடிகர் சிரிஷ் கூறுகையில், “பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும், தலைப்பு செய்தியை விட அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதையும் கூறும் படைப்பாக வரவுள்ளது..!”
இயக்குனர் சர்ஜூன் KM கூறுகையில், “ஜீ5 இன் மிகச் சிறப்பு மிகுந்த படைப்புகளில் ஒன்றான ‘பிளட் மணி’ படத்தின் இயக்குனராக இருப்பது மிகப் பெருமையான தருணமாகும். வியத்தகு லொகேஷன்களில், சிறந்த நடிகர்களுடனான, மிக அற்புதமான படப்பிடிப்பு அனுபவங்கள் என, ‘பிளட் மணி’ என் வாழ்வின் சூப்பர் ஸ்பெஷல் திரைப்படம்..!”
தயாரிப்பாளர் இர்பான் மாலிக் கூறுகையில், “ஜீ5 உடன் இணைந்து இந்த அற்புதமான ‘பிளட் மணி’ திரைப்படத்தை உருவாக்கியது மிகவும் பெருமையாக உள்ளது..!”.
இதன் திரைக்கதை, வசனத்தை சங்கர் தாஸ் எழுத, ஒளிப்பதிவை ஜி. பாலமுருகன் ஏற்க, சதிஷ் ரகுநந்தன் இசையமைக்கிறார்.
‘பிளட் மணி’ டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
Related