பிரம்மாண்ட அரங்குகளுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று சொல்வோம். ஆனால், இந்தப் பட இயக்குனர் ராச்குமார் சினிமாவை குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டார்.
ஒரு மாமாங்கத்துக்கு முன்னால்… அதாவது 2011ல் இவர் அரும்பாடு பட்டுத் தயாரித்து இயக்கிய ‘ வெங்காயம் ‘ என்கிற படம் விமர்சன ரீதியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தினால் கவரப்பட்ட இயக்குனர் சேரன் அதை வெளியிட பெரு முயற்சி எடுத்தார்.
வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பல முனையில் இருந்தும் பாராட்டுப் பெற்றார் ராச் குமார்.
அவர் படம் எடுத்த கதையை பிரசுரித்த பத்திரிகை ஒன்று இந்த அனுபவங்களையே ஒரு படம் எடுக்கலாம் என்று எழுதியது. அத்துடன் இன்னொரு பத்திரிகையில் வெங்காயம் படம் ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பிரசுரித்தது.
இந்த இரண்டு விஷயங்களையும் மனத்தில் இருத்திக்கொண்டு இவற்றை வைத்தே அடுத்த 13-வது வருடத்தில் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் ராச்குமார். இப்படி, ஒரு படத்தின் விளைவுகளையே இன்னொரு படமாக அதே இயக்குனர் இயக்கியதாக வேறு எந்தப் பதிவும் நமக்குத் தெரிந்து உலக அளவில் இல்லை என்பது இந்தப் படத்தின் புதுமையான விஷயம்.
அதேபோல் தொழில்முறை நடிகர்கள் அல்லாது அந்த இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட மனிதர்களே இந்தப் படத்தின் பாத்திரங்களாகவும் நடித்திருப்பதும் ஓர் உலக சாதனைதான். அந்த வகையில் பிரமிக்க வைத்து விட்டார் ராச்குமார்.
கிராமத்திலிருந்து கிளம்பி சென்னை வந்து தான் கற்ற சினிமாக்கலையை மீண்டும் கிராமத்துக்கு எடுத்துப் போய் அங்கிருக்கும் சிறுவர், சிறுமியர், வயசாளிகளை வைத்தே வெங்காயம் படத்தை எடுத்த கதையை முதல் பாதியிலும், அந்தப் படம் வெற்றி பெறாவிட்டாலும் அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி மாற்றிக் காட்டி படம் எடுத்த நோக்கத்தை நிறைவேற்றியது என்கிற உண்மைச் சம்பவத்தை இரண்டாவது பாதியிலும் கதையாகச் சொல்லி இருப்பவர், வெங்காயம் படத்தைப் போன்றே இதிலும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் மூடநம்பிக்கையைச் சாடி இருக்கிறார்.
அதற்கு வந்தனங்கள்..!
முதல் பாதிப் படத்தைப் பொறுத்தவரை அவர்தான் கதாநாயகன். அவருடன் போட்டி போட்டு நடித்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள் அவர் சொந்தங்களும், பந்தங்களும், சுற்றங்களும். அதிலும் அந்த ஆகஹஷன் சொல்லும் டைரடக்கர் கிழவி… அசத்தியிருக்கிறார்.
இரண்டாவது பாதியில் வந்திருக்கும் நிஜ நாயக நாயகியரும் அவர்களது உறவினர்களும் கூட அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு நடிப்பை வாங்கி இருக்கும் ராச்குமார் சிறந்த இயக்குனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தொழில்நுட்ப ரீதியாக பெரிய அளவு பாராட்ட முடியாவிட்டாலும் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறது பட்ஜெட்டும், ராச்குமாரின் பங்களிப்பும்.
முன் பாதியில் இவர்கள் படம் எடுக்கிறோம் என்கிற பெயரில் அடிக்கும் கொட்டத்தை இன்னொரு கேமரா நம் பார்வையில் இரந்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதை சற்று ஏறக்குறைய மறந்தே போகிறோம்.
அதுவே பெரிய விஷயம். அந்த ஒளிப்பதிவை சாதித்து காட்டியிருக்கிறார்.
அதேபோல் இந்தப் படத்துக்கு என்ன இசை தேவையோ அதை மட்டும் தந்திருக்கிறார் தாஜ்நூர்.
புத்திசாலித்தனமாக படத்தில் பாரதிராஜா, சேரன், சத்யராஜ், மிஷ்கின் உள்ளிட்ட முதல் நிலை இயக்குனர்களை அவர்களாகவே உள்ளே கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருந்தும் இத்தனை கருத்துக்கள் கொண்டு நாம் பார்க்கும் பார்வையில் சராசரி ரசிகனால் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியுமா என்பது வெங்காயத்தைப் போலவே இதிலும் ஒரு கேள்விக்குறிதான்.
ஆனாலும், உலக முயற்சியாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை நாம் கொண்டாடியே ஆக வேண்டும்.
பயாஸ் கோப் – சினிமாவுக்குள் ஒரு சினிமா கடந்த சினிமா..!
– வேணுஜி