April 24, 2024
  • April 24, 2024
Breaking News
August 22, 2019

பக்ரீத் திரைப்பட விமர்சனம்

By 0 1380 Views

“யாரா இருந்தாலும் வெட்டுவேண்டா…” என்று ஹீரோவுக்கு ஹீரோ விதவிதமான ஆயுதங்களுடன் படங்களில் கிளம்பி சமுதாயத்தில் வன்முறையை விதைத்துக் கொண்டிருக்க, ஒரு உயிரை… அதுவும் ஒரு வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு ஹீரோ போராடும் கதை புதியதா, இல்லையா… சொல்லுங்கள் மக்களே..!

தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி மேலாளரிடம், “நல்ல பூமிங்க அது. விவசாயம் செய்யப்போற கடைசி தலைமுறை நாமதான்…” என்று பதில் சொல்லும் விக்ராந்தின் குரலில் தெரியும் கழிவிரக்கம் வீழ்ந்துவிட்ட ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த ஏக்கம் எனலாம்.

வங்கிக்கடன் எதிர்பார்த்தது போல் அமையாமல் போனதால் தனியாரிடம் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்கப் போன் இடத்தில் ஒரு ஒட்டகக் குட்டி கிடைக்க, அதையும் சேர்த்து ஓட்டிக் கொண்டு வரும் விக்ராந்தின் மேல் இன்னும் நமக்கு அன்பு அதிகரிக்கிறது.

அந்த ஒட்டகத்தைக் கண்ணும், கருத்துமாகப் பாதுகாத்து வளர்க்கும் அவரது மனைவியும், மகளும் கூட மனம் கவர்கிறார்கள். ஒரே நாடு என்றிருந்தாலும் நமக்கே வட இந்திய உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாது என்றிருக்க, ஒட்டகத்துக்கு புல்லும், வைக்கோலும் ஒத்துக்கொள்ளுமா..? அதை ஒரு மிருக வைத்தியர் விளக்கிச் சொல்ல, அந்த ஒட்டகத்தை சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கே கொண்டு விட நினைக்கும் விக்ராந்தின் முயற்சி என்ன ஆனது என்பதுதான் கதை.

ஒரு வெள்ளந்தி விவசாயி எப்படி இருப்பான் என்பதை இந்தப்படத்தில் அப்படியே நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் விக்ராந்த். வங்கி மேலாளரிடம் பேசும் பணிவாகட்டும், மகளின் விருப்பத்துக்காகவே வாழும் பாசமாகட்டும், ஒட்டகத்தின் மீது வைக்கும் பரிவாகட்டும், அதைக் களவாட முயற்சிப்பவர்களைக் கூட காயப்படுத்தாமல் மீட்கும் மனிதமாகட்டும் விக்ராந்த் இந்தப்படத்தில் நடிப்பின் பல்வேறு நிலைகளைத் தொட்டிருக்கிறார்.

ஒரு முன்னணி ஹீரோவாக நிலைபெறுகிறாரோ இல்லையோ ஒரு நல்ல நடிகர் வேண்டுமென்றால் விக்ராந்த் நினைவு வருவதே அவரது வெற்றி. அவரை நம்பி எந்த வேடத்தையும் ஒப்படைக்கலாம் என்பது இந்தப்படத்தின் மூலம் இன்னும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

அவருக்கேற்ற அளவெடுத்த மனைவியாக வசுந்தரா. கட்டைக் குரலாக இருந்தாலும் கணவன் கடன் கேட்கப் போனாலும் சரி… ஒட்டகத்தைக் கூட்டி வந்து வளர்த்தாலும் சரி… அவனது எல்லா செயல்களையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ளும் பத்தினித் தெய்வம். இப்படி வாழ எல்லா பெண்களும் பழகினால் ‘விவாகரத்து’ என்ற வார்த்தையே சமுதாயத்தில் இருக்காது.

இந்த அழகான தம்பதிக்கென்று வந்து வாய்த்த தேவதையாக குழந்தை ஷ்ருத்திகா. அப்பாவிடம் எப்படிக் கேட்டால் ‘லேஸ் சிப்ஸ்’ வாங்கிக்கொடுப்பாரென அவள் ஒரு யுக்தி வைத்திருக்க, அவளிடமிருந்து உடல்நலத்துக்கு ஆகாத அந்த ‘லேஸ் சிப்ஸை’ கணவனும், மனைவியும் சேர்ந்து எப்படி அகற்றிக் கண்ணுக்குப் படாமல் ஒதுக்கி வைக்கிறார்களென்பது ஒரு ஹைகூ கவிதை.

அந்த லேஸ் சிப்ஸை மறைத்து வைக்குமிடத்தில் இன்னும் அப்படி மல்டிநேஷனல் கம்பெனிகளின் அத்தனைத் தின்பண்டங்களும் உரை பிரிக்காமல் கிடப்பது ஆரோக்கியக் குறியீடு. இயக்குநர் பேசாமல் பேசியிருக்கும் உலகச் சந்தை அரசியல் அது.

அப்படியே படம் நெடுக, இந்துத்துவத்தின் பெயரால் பொய்யான மிருக அன்பைக் காட்டி மனிதம் மறக்கச் செய்யும் போலி அரசியலையும் மோதி மிதிக்காமல் முகத்தில் உமிழ்ந்து விட்டுப் போயிருக்கிறார் இயக்குநர். பசுக்களையும், ஒட்டகட்தையும் மீட்டு அவர்கள் மீது கேஸ் போட்டு நாலு சாத்து சாத்தும் போலீஸார் மதிய உணவுக்கு ‘பிரியாணி’ ஆர்டர் செய்வதும் எல்லை மீறாத எள்ளல்…

ராஜஸ்தான் போகிற வழியில் மத்தியப் பிரதேசத்தில் சிக்கிக் கொண்டு மொழி தெரியாமல் அல்லாலுறும் விக்ராந்திடம் வழிப்போக்கரான வெளிநாட்டுக்காரர், “அமெரிக்காவிலிருந்து வந்த நானே உங்க நாட்டுல கால்நடையா சுத்திக்கிட்டிருக்கேன்… இது உன் நாடு. தைரியமா போ..!” என்று தன்னம்பிக்கை கொடுக்குமிடம் புல்லரிக்கிறது.

பத்திரத்தைக் கூட பெற்றுக் கொள்ளாமல் விவசாயத்தின் மேல் நம்பிக்கை வைத்து ஒரு லட்ச ரூபாயைத் தந்து உதவும் முஸ்லிம் பெரியவர், விக்ராந்தை அவரிடம் அழைத்துச் செல்லும் மலையாளி நண்பர் என்று படத்தின் அத்தனைப் பாத்திரங்களும் நாம் வாழும் மண்ணின் சமத்துவத்தைக் காட்டுகிறது.

ஒரு ஒட்டகத்தை மீட்கும் அம்புலிமாமா கதையில் சமுதாய மேன்மை, மனிதம் வலியுறுத்தி உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசியிருக்கும் இயக்குநர் ஜெகதீசன் சுபு, போற்றுதலுக்குரியவர்.

அவரே ஒளிப்பதிவாம். உலகின் எந்த நாட்டில் திரையிட்டாலும் மொழி புரியாவிட்டாலும் கூட ரசிக்க முடியும் சாத்தியம் பெற்ற இந்தப்படத்தில் ஒளிப்பதிவு கலப்படமில்லாத உலகமொழியிலேயே அமைந்திருக்கிறது. கிராமத்துப் பசுமையிலிருந்து ராஜஸ்தான் பாலை வரை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது அவரது கேமரா.

முன்பாதி முழுக்க இமானின் இசையில் “ஆலங்குருவிகளா…” நம் தோளிலேயே அமர்ந்து கொண்டு ஊஞ்சலாடி வருகிறதென்றால் பின்பாதியில் ‘கரடு முரடுப் பூவே…’ கைகோர்த்துக் கொள்கிறது. பின்னணி இசையிலும் இமான்… இசைமான்..!

தொடக்கத்தில் முடக்கடி செய்து ஒட்டகத்தை உட்டாலக்கடி செய்து பணம் சம்பாதிக்க நினைக்கும் வட மாநில லாரி டிரைவரும், கிளீனரும் போகப்போக விக்ராந்தின் நல்ல உள்ளத்துக்காக சல்லிக்காசு வாங்காமல், அவருக்காகவும் ஒட்டகத்துகாகவும் அடியும், உதையும் பட்டு அவரை வழியனுப்பி வைப்பது மனித மனங்களுக்குள்ளிருக்கும் மேன்மையை வடிகட்டி எடுத்துக் காட்டுகிறது.

விக்ராந்தின் அண்ணன் பாத்திரமும் அப்படியே. விக்ராந்துடன் பேச்சு வார்த்தை இல்லையென்றாலும் அவர் உழவு ஓட்டிய பயிர்கள் வாடியதைக் கண்டு மனம் பொறுக்காமல் வயலுக்கு நீர் பாய்ச்சுவது அவரது வறண்ட உள்ளத்துக்குள்ளும் இன்னும் உலர்ந்து போகாமலிருக்கும் ‘விவசாயி’யை அடையாளம் காட்டுகிறது.

ஒரு ஒட்டகக் குட்டி மீது விக்ராந்தும், அவர் குடும்பமும் அத்தனைப் பாசம் வைப்பதற்கான காரணம், அந்த ஒட்டகம் இரண்டு ராணுவ வீரகளைக் காப்பற்றுவதாகச் சொல்வது போன்ற காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆனாலும், ஒட்டகம் என்பது படத்துக்கான ஒரு குறியீடுதானே தவிர இன்னும் இறுகிப் போகாத மனங்களை ஒட்ட (வைக்கும்) GUM ஆக, மனிதத்தைப் பேசியிருக்கும் இந்தப்படம் மக்களுக்கானது.

அவார்டுகளுடன், ரிவார்டுகளும் பெற குடும்பங்கள் பார்த்துக் கொண்டாட வேண்டிய முயற்சி..!

பக்ரீத் – ஒட்டகத்தைக் கட்டிக்கோ… கெட்டியாக ஒட்டிக்கோ..!