December 12, 2024
  • December 12, 2024
Breaking News
July 19, 2023

அவள் அப்படித்தான் 2 திரைப்பட விமர்சனம்

By 0 377 Views

1978-இல் ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் தமிழ் பட உலகில் என்றென்றும் பேசப்படத்தக்கது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற முயற்சியில் 2023-ல் வந்திருக்கிறது இந்தப் படம்.

இப்படத்தை இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். யுன் ப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார்.

சின்ன லைன்தான் படத்தின் கதை.

மஞ்சு ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. பிறருக்கு உதவுவது, தவறுகளைத் தட்டிக் கேட்பது, சுதந்திரமான சிந்தனையோடு இயங்குவது என்று இருப்பவள். அப்படிப்பட்ட மஞ்சு ஒரு நாள் இரவு வீட்டுக்கு வரவில்லை.

ஆணாதிக்கம் கொண்ட அவ்வளவு கணவன் இரவெல்லாம் அவளைத் தேடுகிறான் குடும்பமே மஞ்சுவைக் காணாமல் தவிக்கிறது.

மறுநாள் காலையில் அவள் வீடு வந்து செல்கிறாள். “இரவு எங்கே போனாய்..?” என்ற கணவனின் கண்டிப்பான கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை – முடியவில்லை என்பதைவிட அவள் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதே சரி.

அந்தக் கேள்வி அவள் மீதான அக்கறையில் கேட்கப்படாமல் ஒரு ஆணாதிக்க அடிப்படையில் கேட்கப்படுவதாக அவள் உணரவே கடைசிவரை அந்த கேள்விக்கு அவள் பதிலே சொல்லவில்லை.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அவரவர்களுக்கு என்று தனியான அந்தரங்கங்கள் உண்டு. அந்தரங்கம் மிகவும் புனிதமானது. அதை கணவனே ஆனாலும் பகிர்ந்து கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று நினைக்கும் மஞ்சுவின் பாத்திரம்தான் இந்த படத்தின் அடிநாதம்.

கதையின் பெரும்பகுதி ஒரு வீட்டுக்குள் நடக்கிறது.மஞ்சுவைத் தேடும் போது காட்டப்படும் சிற்சில வெளிப்புற காட்சிகளோடு சரி. கதை நிகழும் போது இதை நாம் உணராத வகையில் காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

படம் ஆரம்பித்ததில் இருந்து மஞ்சுவின் முகத்தை காட்டாமல், காணாமல் போன பிறகு மஞ்சுவைத் தேடுகிற போது மஞ்சுவின்  குணச்சித்திரங்களை உணரும் வகையில் காட்சிகள் வருகின்றன. மஞ்சு எப்படிப்பட்டவள் என்று அதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .இதைத் தனியாக விளக்காமல் அது சார்ந்த காட்சிகள் மூலம் விளக்கியுள்ளார் இயக்குநர்.

பின்னர் மறுநாள் காலை அவள் வீட்டுக்கு வரும்போது மட்டும் அவளது முகத்தை நம்மிடம் காட்டுகிறார் இயக்குனர்.

இதன் மூலம் அவளது கேரக்டர் என்ன என்பதை நம்மால் உணர்ந்து அந்த முகத்தில் ஏற்றிக் கொள்ள முடிகிறது.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு நேர் எதிரானது அல்ல என்றும் நம் நாட்டின் கலாச்சாரம் குடும்பம், குழந்தை நலன்களைக் காப்பாற்ற பெண் மீது அதிகாரத்தை செலுத்துவதே தவறு என்று கூறுகிற கதை.

வசனங்கள் கூர்மையாக உள்ளன. கணவன் மனைவிக்குள் நடக்கும் ஆண் பெண் சார்ந்த விவாதங்கள் கூட அர்த்தமுள்ளதாக உள்ளன. “இரவு எங்கே போயிருந்தாய்.?” என்ற ஒற்றைக் கேள்விக்கு மஞ்சுவின் பதிலாக “நீங்களும் பல இரவுகள் வீட்டுக்கு வந்ததில்லை. நான் உங்களை எதுவும் கேட்டதில்லை..!” என்று பதில் சொல்வாது நியாயமாகவே இருக்கிறது.

ஆனால் வீட்டில் சமையலுக்கு மாமியார் இருக்க, தான் வேலைக்கு போவது, வருவது பிடித்தமான விஷயங்களை செய்வது என்று மட்டுமே மஞ்சு இருப்பதில் எந்தவிதமான நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

குறிப்பாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் இரவில் ஒரு பெண் காணாமல் போகிறாள் என்றால் அந்தக் குடும்பத்தினர் எவ்வளவு தவித்துப் போவார்கள் என்பதைக் கூட மஞ்சு உணராமல் இருப்பது அபத்தமான விஷயம்.

அதிலும் குழந்தை “அம்மா எங்கே..?” என்று கேட்கும் போது அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அந்தக் குடும்பத்தினர் தவிக்கிறார்கள். குறைந்தபட்சம் ‘இன்று இரவு வரமாட்டேன். காலையில் வருகிறேன்’ என்ற பதிலையாவது அவர்களிடம் அவள் கூறிச் சென்றிருக்கலாம்.

படத்தில் நடித்திருப்பவர்கள் ஒருவித நாடகத் தன்மையுடன் நடித்திருப்பதாகவே தோன்றுகிறது. அது இயல்பாக இருக்கும் பட்சத்தில் இன்னும் கூட இந்த படத்தில் நாம் ஒன்றி இருக்க முடியும்

கதையின் நாயகியாக மஞ்சு கதாபாத்திரம் ஏற்றுள்ள சினேகா பார்த்திபராஜாவின் தோற்றமும், உடல் மொழியும், முக பாவங்களும் மஞ்சு என்பவள் இப்படித்தான் என்ற கருத்தை சொல்லி விடுகின்றன.

மஞ்சுவின் கணவனாக வரும் அபுதாஹிர் இறுக்கமாக, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அந்த நடுத்தர வயது கணவருக்குரிய உணர்வுகளை இயல்பாகவே வெளிப் படுத்தியுள்ளார். 

கணவனை “அப்பா…” என்று கூப்பிடும் வழக்கம் உள்ள மஞ்சுவால் பட ஆரம்பத்தில் அவளது கணவனை நாம் அவளது அப்பாவோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

கணவன் ராமின் அம்மாவாக வரும் ராஜேஸ்வரி, மனைவி மஞ்சுவின் அம்மாவாக வரும் அனிதா ஸ்ரீ, ஆச்சியாக வரும் சுமித்ரா,மகள் சிறுமி கார்த்திகா,மஞ்சுவின் அப்பா இயக்குநர் வெங்கட்ரமணன் என நடித்தவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைத் தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவில் சரியாகச் செய்துள்ளார்கள். இயக்குனரும் அவர்களிடம் அதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை.

தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கும் இயக்குநரின் பார்வைக்கும் ஏற்றபடி திருப்தியான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் வேதா செல்வம்.

பாடல்கள் இல்லாத இந்தப் படத்திற்குக் கதையின் தன்மைக்கு ஏற்றபடியும் பின்னணியில் மிகையொலி காட்டாமலும் இசை அமைத்துள்ளார் இசை அமைப்பாளர் அரவிந்த் சித்தார்த். குறிப்பாக அவர் வெளிப்படுத்தியுள்ள வயலினின் ரீங்காரம் காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டுகின்றன.

படத்தைச் சிக்கனமாக எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எடுத்திருப்பது புரிகிறது.

காட்சிகளில் சுவாரசியமும் நடிப்பில் இயல்பையும் மிகச் சரியாக வாங்கியிருந்தால் இயக்குனரின் கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கும்.

‘இந்தப்படம் இப்படித்தான்…’ என்கிற அளவில் இதை ஏற்றுக் கொள்ளலாம்.