December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்திய சுதந்திரம் கிடைத்ததே தெரியாத தமிழக கிராமத்தின் கதை ஆகஸ்ட் 16, 1947
March 19, 2023

இந்திய சுதந்திரம் கிடைத்ததே தெரியாத தமிழக கிராமத்தின் கதை ஆகஸ்ட் 16, 1947

By 0 321 Views

ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலாக தன் ஏ ஆர் முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தன் உதவி இயக்குனர் என்.எஸ். ஆகஸ்ட் 16, 1947 படத்தை தயாரித்து முடித்து இருக்கிறார்.

அவருடன் இணைந்து பர்ப்பிள் புல் புளூ எண்டர்டெயின்மெண்ட் (Purple Bull Entertainment), காட் பிளஸ் எண்டர்டெயின்மெண்ட் (God Bless Entertainment) சார்பில் ஓம் பிரகாஷ் பட், நரசிராம் சவுத்ரி ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, புதுமுக நடிகை ரேவதி நாயகியாக நடித்திருக்கிறார். புகழ் முக்கியமான வேடத்தில் நடிக்க, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் ஆங்கிலேயராக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் பொன்குமார், நடிகர் கெளதம் கார்த்திக், தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட், நடிகர் புகழ் ஆகியோர் படம் குறித்து பேசினார்கள்.

A.R. Murugadoss

“இந்தப் படத்தின் கதையை பொன்குமார் எங்கு சொன்னாலும், அவர்கள் உடனே தயாரிக்க ஆர்வப்பட்டார்கள். ஆனால், பல காரணங்களால் படம் தொடங்காமல் இருந்தது. அதன் பிறகுதான் நான் கதையை கேட்டேன். கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது. நிச்சயம்  ரசிகர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது..!” என்ற ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்தார்.

“இருந்தாலும் எனக்கு இருந்த ஒரே ஒரு பயம், பொன் குமாரின் முதல் படமே பீரியட் கதை என்பதும், நம்மால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியுமா? என்பதும் தான். ஆனால், மற்ற என் உதவி இயக்குனர்களைப் போலவே பொன்குமார் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தது.

இந்தக் கதைக்கு நிறைய ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது அதை சரியாக செய்து விட்டு வா என்றேன் அதற்கு ஏற்றார் போல் நிறைய நேரம் எடுத்து சரியாக இந்த ஸ்கிரிப்ட் குமார் கொண்டு வந்தார். பீரியட் படம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தி சரியாக எடுத்து விட வேண்டும் என்றேன் நான். இப்படித்தான் இந்தப் படத்தை நான் தயாரிக்க முன் வந்தது..!” என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இயக்குநர் பொன்குமார் படம் குறித்து கூறுகையில், “திருநெல்வேலி அருகே ஒரு மலை அடிவாரத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் இருப்பவர்களுக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த தகவலே தெரியாத சூழ்நிலை இருக்க, அம்மக்கள் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்காக மேற்கொள்ளும் போராட்டம் தான் படத்தின் கதை.

சுதந்திரம் கிடைத்த நாள் மற்றும் அதற்கு முன் நாள், அடுத்த நாள் என்று மூன்று நாட்களில் கதை நடக்கிறது. அதனால் தான் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன்.

இந்த கதையை முருகதாஸ் சாரிடம் சொன்ன போது, “நல்ல விஷயத்தை புடிச்சிருக்க, ஆனால் இதை படமாக்கும் போது அந்த காலத்தில் பயன்படுத்திய உடை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மிகச் சரியாக செய்ய வேண்டும், என்று கூறினார்.

அதேபோல், கெளதம் கார்த்திக் சாரிடம் இந்த கதையை சொன்ன போது, அவர் ஆர்வத்துடன் ஒத்துக் கொண்டதோடு, அப்போதில் இருந்து இன்று வரை பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ஒரு ஹீரோ என்பதைத் தாண்டி பரமன் என்ற கதபாத்திரமாக மக்கள் மனதில் இடம்பெறும் அளவுக்கு அவர் நடித்திருக்கிறார்.

அந்த ஊரிலேயே படிக்கத் தெரிந்த ஒரே ஒரு நபர் புகழ் தான். இரண்டாம் பாதி முழுவதும் அவர் பேசவே மாட்டார். பேசாமலேயே அவர் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. நிச்சயம் புகழுக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

நாயகியாக நடித்திருப்பவர் ரேவதி, ஒரு ஜமீன் வீட்டில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் அவருக்கான சுதந்திரத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பார்.

பயம் தான் நம்முடைய முதல் எதிரி என்பதுதான் கதையின் அடிநாதம்.

எங்கள் ஊர் பெரியவர் ஒருவர் பேருந்தில் செல்லும் போதும், ஒரு வெளிநாட்டுக்காரர் வந்திருக்கிறார். அப்போது அவரை பார்த்ததும் அவருக்கு பதற்றம் ஏற்பட்டதாக கூறினார்.  இப்போதும் ஆங்கில மொழியை பார்த்தால் பயப்படுகிறோம், அவர்களுடைய உடையை அணிவதை பெருமையாக கருதுகிறோம். இந்த விஷயங்கள் தான் இந்த கதையை எழுத என்னைத் தூண்டியது.” என்றார்.

“இது எனக்கு முக்கியமான படம். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் நடிக்க வந்தபோது எனக்கு எதுவும் தெரியாது, பல தவறுகளை செய்திருக்கிறேன். அதன் பிறகு தான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். அதுபோல தான் இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுகொண்டு பணியாற்றினேன்.

இயக்குநர் பொன்குமார் என்ன சொன்னாரோ அதை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், பிறகு எனக்கு தோன்றியதை சில இடங்களில் செய்வேன், அது பிடித்தால் இயக்குநர் வைத்துக்கொள்வார். அப்படி தான் இந்த படத்தில் ரசித்து ரசித்து நடித்திருக்கிறேன்.” என்றார் கௌதம் கார்த்திக்.

நடிகர் புகழ் பேசுகையில், “பொதுவாக என்னை காமெடி பண்ண சொல்லி தான் எல்லோரும் கேட்பார்கள். காரணம் இந்த பரட்டை முடிக்காக தான். ஆனால், இயக்குநர் பொன்குமார்தான், என் பரட்டை தலைமுடியை மாற்றி இருக்கிறார்.

எனக்கு திரைக்கதையை முதலிலேயே கொடுத்து விடுவார்கள், நான் முழுமையாக படித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு போனால் பேச கூடாது, முக பாவங்கள் மூலமாகவே நடிக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அது எனக்கு புதிதாக இருந்தது.

கெளதம் கார்த்திக் சார் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு முன்னணி நடிகர் போல் இல்லாமல் ரொம்ப சகஜமாக பேசினார். அனைவரும் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். இந்த படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சுதர்ஷ்.ஆர் படத்தொகுப்பு செய்ய, டி.சந்தானம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ஏப்ரல் 7 ஆம் தேதியன்று உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது ஆகஸ்ட் 16, 1947.