April 26, 2024
  • April 26, 2024
Breaking News
August 1, 2021

ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்

By 0 347 Views

ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கார்டுகளை வேறு வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்தும்போது பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 15-இலிருந்து ரூ. 17 ஆக உயருகிறது.

இதுவே பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 5-இலிருந்து ரூ. 6 ஆக உயருகிறது.

எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை மற்ற வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் மாதத்துக்கு மூன்று முதல் ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளும் நடைமுறை தொடர்கிறது.

இதன்மூலம், மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் மூன்று முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மற்ற நகரங்களில் அதிகபட்சம் ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

முன்னதாக, அதிக பரிமாற்றக் கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவை ஈடுசெய்யும் வகையில், பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது.