நெடிய பாதையில் வாகனம் ஓட்டிப் பந்தயம் வெல்வது ஒரு வகை. ஆனால், ஒரு சிறிய கோளத்துக்குள் வாகனம் ஓட்டுவது வேறு வகை.
அப்படித்தான் இந்தப்பட இயக்குனர் சுனில் தேவுக்கு இவ்வளவுதான் பட்ஜெட் – இதற்குள் ஒரு படம் எடுத்து அசத்த வேண்டும் என்கிற நெருக்கடி இருக்க, அதற்குள் அதை சாதித்து இருக்கிறாரா பார்ப்போம்.
மலையும் மலை சார்ந்த இடங்களும் எப்போதும் சஸ்பென்ஸ் த்ரில்லர்களுக்கு ஏதுவானவை. அப்படி ஊட்டியில் தனி பங்களாவில் தன் காதல் மனைவியுடன் வசிக்கும் நாயகன் எஸ்.பி.சித்தார்த்துக்கு நேர்ந்த ஒரு பயங்கர அனுபவம்தான் இந்தப்படம்.
பள்ளியிலிருந்து ஒருதலையாய்க் காதலித்து… காதலைச் சொன்னதும் கோபித்துப் பிரிந்த நாயகி சைதன்யா பிரதாப்பை சில வருடங்கள் கழித்து ஒரு சுபயோக சுப தினத்தில் மீண்டும் சந்தித்துக் காதலில் வென்ற வேளையில் தன் திருமண ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறார் சித்தார்த்.
ஆனால், அவரைவிட ஸ்மார்ட்டாக சைதன்யா அவருக்கு ஒரு எதிர் சர்ப்ரைஸ் கொடுத்து அவரது சர்ப்ரைசை ‘சப்’ ரைஸ் ஆக்கி விடுகிறார்.
ஆனால், மனைவியை எப்படியாவது ஆச்சரியப்படுத்திய எண்ணி, அவளது செல்போனில் அவளுக்கே தெரியாமல் ஒரு App – பை டவுன்லோடு செய்து அவளது நடவடிக்கைகளைப் படமெடுத்து பரிசளிக்க நினைக்க, சைதன்யாவின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிந்து அந்த App – பே அவரது மண வாழ்கைக்கு ஆப்பு வைக்க, என்ன ஆனதென்பது மீதி.
அப்பாவியான வேடத்துக்கு சித்தார்த் அழகாகப் பொருந்துகிறார். ஆரம்பத்தில் காதல் மனைவியை ரசிப்பதும், போகப்போக அவளை வெறுப்பதும், அந்த வெறுப்பை அவளுக்குத் தெரியாமல் மறைப்பதுமாக உணர்வுகளை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், அதையெல்லாம் மீட்டருக்குள் செய்யக் கற்றுக் கொண்டு விட்டால் நல்ல நடிகராக உயரலாம். கடைசி கடைசி என்று அவர் நிலை மிகவும் பரிதாபகரமாக ஆகிவிடுகிறது.
இந்தப் பூனையும் எலி பிடிக்குமா என்ற அளவில் (எப்போதும் பூனை பால்தான் குடிக்குமா..?) அப்பாவியாக ஆதரவில்லாதவராக சித்தார்த்திடம் ‘அபய’ மாகும் சைதன்யா போகப் போக இன்னொரு ‘அபாய’ முகம் காட்டி மிரள வைக்கிறார்.
சித்தார்த்தின் நண்பனாகவும், முதலாளியாகவும் வரும் அனந்த் நாக் அளவான நடிப்பால் கவர்கிறார்.
இவர்களுடன் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார் உள்ளிட்டோரும் பொருத்தமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கடைசிக் காட்சியில் ஆச்சரிய அதிர்வாக அருண்பாண்டியன் வந்து நிராதரவான சித்தார்த்துக்கு நம்பிக்கை தருவது நிம்மதியாக இருக்கிறது. ஆனால், அதற்கான முடிவை அடுத்த பாகத்துக்கு மிச்சம் வைக்காமல் இதிலேயே தீர்த்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.
இரண்டாவது பாகமெல்லாம் இப்படிப்பட்ட சின்னப் படங்களுக்கு எந்த நன்மையையும் தராது.
அதேபோல் குறைந்த எண்ணிக்கையிலேயே பாத்திரங்கள் வருவதால் வில்லன் (கள்) யாரென்பதை புத்திசாலி ரசிகர்கள் யூகித்து விட முடியும். அத்துடன் முதல் காட்சியிலேயே சைதன்யாவின் புத்திசாலித்தனம் பற்றி நாம் தெரிந்து கொள்வதால் அவரது அடுத்த நடவடிக்கைகள் நம்மில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
அருண் விஜயகுமாரின் ஒளிப்பவும், மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், சரண் ராகவனின் பின்னணி இசையும் உறுத்தாமல் பயணித்திருப்பது இயல்பாக இருக்கிறது.
படம் மெதுவே நகர்ந்தாலும், அடுத்தடுத்த ஆச்சரியங்கள் தரும் திரைக்கதையில் சுணக்கம் ஏற்படாமல் நம்மை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார் சுனில் தேவ்.
அதோமுகம் – (எதிர்வினையான) அதேமுகம்..!
– வேணுஜி