‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அன்பு ராஜசேகர். அதை வைத்துதான் ‘கத்தி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்ததாக வழக்கும் தொடர்ந்திருக்கிறார் அவர். அதற்கு நீதி கேட்டு இன்று காலை முதல் மாலை வரை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் அவர்.
நேற்று சர்கார் சமரச அறிவிப்பு வந்ததும் அவர் ஊடகங்களிடம் தன் உண்ணாவிரதம் பற்றி அவர் தெரிவித்த விபரங்கள்…
“உதவி இயக்குநராக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். நான் நான்கு வருடங்களாக எனக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளால் சிந்தனைத் திருட்டு தடுக்கப்படும் என நம்புகிறேன்.
முருகதாஸ் உதவி இயக்குநர்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, ‘தாக பூமி’ குறும்படத்தையும், என்னுடைய விவரங்களையும் மெயிலில் அனுப்பி வைத்தேன்.
அந்தக் கதையைத்தான் ‘கத்தி’ படமாக எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுகுறித்து படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், விஜய், முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காப்புரிமை வழக்கு நடைபெற்று வருகிறது.
வருண் ராஜேந்திரன் கேட்டதுபோல, மூலக்கதை என்று என் பெயரைப் போட வேண்டும் என்றுதான் முருகதாஸிடம் கேட்டேன். படைப்பாளிக்கான அங்கீகாரத்தைக் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். ஆனால், எனக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது.
சட்ட ரீதியாக போராடியும், எனக்கு நியாயம் கிடைக்காததால் நாளை (அக்டோபர் 31) என்னுடைய குடும்பத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்..!”
‘கத்தி’ வெளியாகி 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ‘தாக பூமி’ குறும்படத்தில் இருந்துதான் ‘கத்தி’ படம் எடுக்கப்பட்டது என முருகதாஸ் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், அதை வலியுறுத்திதான் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்பு ராஜசேகர், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது..!