தமிழில் வெளிவந்த ‘அந்நியன்’, ‘வேலைக்காரன்’ படங்களின் வரிசையில் அவற்றுக்கு நிகரான ஒரு சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கதைக்களம்.
உடனே நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதல்லவா..? இப்படித்தான் இந்தக் கதையைக் கேட்டோர் ஒவ்வொருவரும்… இந்தப்படத்து ஹீரோ சித்தார்த் முதற்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் எப்படிச் சொதப்பி ஒரு நல்ல கதையைக் காலி பண்ணலாம் என்பதற்கும் இது ஒன்றே உதாரணப் படம்.
அருமையான மந்திரங்கள் கையில் கிடைத்தும் பாபா படத்தில் ரஜினி காத்தாடி பிடிப்பதற்கும், அது கையில் வந்து விழுவதற்குமாக அதை வீணடிப்பாரே அப்படி ஒரு நல்ல கதையை யோசிக்க முடிந்தும் இதர விஷயங்களில் திணறி முழுப்படத்தை வீணடித்திருக்கிறார் இயக்குநர் சாய்ஷேகர்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு நஞ்சு கலந்திருக்கிறது என்று தெரிந்தால் நமக்கு எப்படி அடிவயிறு பற்றியெறியுமோ அப்படி எரிகிறது உணவுப் பாதுகாப்புத்துறையில் உதவி இயக்குநராக இருக்கும் சித்தார்த்துக்கு. டீக்கடையில் தொடங்கும் அவரது வேட்டை அடுத்து ஹோட்டல், பருப்பு வியாபாரிகள், பால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் என்று போய் கடைசியில் எல்லாமே மாபியாக்கள் கையில் இருப்பதை அறிகிறார். அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வாங்கித்தர முடிவெடுக்கையில் என்ன ஆகிறது என்பது கதை.
ஆனால், இதெல்லாம் இரண்டாவது பாதியில்… பிளாஷ்பேக்கில்தான் வருகிறது. முதல்பாதி முழுக்க, விறுவிறுப்பில்லாத சித்தார்த் – கேதரின் தெரசா காதல், ஆவியின் அட்டகாசங்கள் என்று ‘அம்புலிமாமா’த்தனமாக போய்க்கொண்டிருக்கிறது படம். உயிரோடு இருந்து முடிக்க முடியாதவற்றை எல்லாம் செத்துப் போய் ஆவியாகி வந்து (படத்தையும் சேர்த்துதான்…) முடிக்கிறார் சித்து.
ஒரு காமெடிப்படம், ஒரு ஹாரர் படம், ஒரு சமூகப் பொறுப்புணர்வுப் படம் இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு பாதியும், முக்காலுமாக ஓட விட்டால் என்ன ரிசல்ட்டோ அதுதான் இந்தப் படத்துக்கும்…
‘பாய்ஸ்’ படத்திலிருந்து சித்தார்த் இன்னும் வெளியே வரவேயில்லை. அந்த அம்மாஞ்சி மூஞ்சிக்கு (மீசை வேறு இல்லை…) ‘தொர சிங்கம்’ ரியாக்ஷனெல்லாம் எடுபடவேயில்லீங்கோ. ஒரு ‘ஆபீஸர்’ என்பதால் எப்போதும் விரைப்புடனேயே இருப்பதில் துணிக்கடை பொம்மைக்கு சாவி கொடுத்ததைப் போல் அப்படியொரு செயற்கைத்தனம்.
அதைவிட கேதரின் தெரசாவை இவ்வளவு வீணடித்திருக்கும் ஒரு படம் டோலிவுட்டில் கூட வந்ததில்லை. அவருக்கு வாசனையை நுகர முடியாத கேரக்டர் என்பதால் அதற்கொரு ஒபனிங் சீன் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்… அவர் ஆசிரியையாக இருக்கும் பள்ளியில் ஒரு அறையிலிருந்து வயிற்றைக் குமட்டும் நாற்றம் வர, யாரும் உள்ளே போகவே அலறுகிறார்கள்.
அங்கே வாசனை தெரியாத கேதரின் வந்து உள்ளே போய் அங்கே செத்து போய் அழுகி நாறி ஈ மொய்த்துக் கிடக்கும் ஒரு நாயை அலாக்காகக் கையில் தூக்கிக் கொண்டு வந்து அவரே புதைக்கிறார். உவ்வே… அதற்கு மேல் ஒரு ஹீரோயின் மீது உங்களுக்குக் காதல் வரும்…? ஆனால், சித்தார்த்துக்கு வருகிறது.
இரண்டாம் பாதி வரை உட்கார உங்களுக்குப் பொறுமை இருந்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் பத்துப் பதினைந்து காட்சிகளை ரசிக்கலாம். பிறகு கிளைமாக்ஸ் வருவதற்குள் நீங்களாச்சு… உங்கள் பொறுமையாச்சு..!
காமெடி சதீஷ் அங்கங்கே சிரிக்க வைக்கிறார். மற்றபடி மனோபாலா, ஆடுகளம் நரேன் எல்லாம் வழக்கமான ‘செட் பிராபர்டீஸ்..!’
படத்தின் டெக்னிக்கல் பலம் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு. இசையமைத்திருக்கும் தமனை ஒரு வாரத்துக்கு எலக்ட்ரிக் டிரைனின் ஹாரன் அருகே கட்டிப்போட்டு தண்டனை தரலாம். படம் முழுக்க அப்படி ஒரு டார்ச்சரான இரைச்சல்.
அருவம் – பல்லி விழுந்த ‘சரவண பவன்’ சாம்பார்..!