கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பி டி செல்வகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள்.
நிகழ்வில் அப்பாவு அவர்கள் பேசியபோது, ”என்னுடைய உறவினர் தம்பி பி டி செல்வகுமார் கலையுலகில் கண்ணியத்துடனும், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் பயணிக்கிறார். அதற்காக பாராட்டுகிறேன். பி டி செல்வகுமார் கடந்த பல வருடங்களாக கன்னியாகுமரி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடத்துகிறார். 3006 பெண்கள், 3006 பானைகளில் பிரமாண்டமாக சமத்துவ பொங்கல் வைப்பார்கள். பிரமாண்டமாக நடக்கும் அந்த நிகழ்வுக்கு நான் போய் வந்ததுண்டு.
அதேபோல, காமராஜரைப் போல கல்விப் பணியிலும் அவரது ஈடுபாடு அதிகம். கன்னியாகுமரியில் வெள்ளாளன்விளை, பொட்டல்விளை, மணக்குடி, இலந்தையடிவிளை, கோவளம் என்று பல ஊர்களில் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், நிரந்தர கலையரங்கங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். மயிலாடி என்று ஒரு ஊர் உண்டு. அங்குள்ள பள்ளியில் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் மெக்காலே பிரபு மூலம் மெக்காலே கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியில்கூட பி டி செல்வகுமார் கட்டடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே அதையெல்லாம் செய்ய முடியும். சமூகத் தொண்டோடு, அரசியலில் திமுகவின் அறிவாலயத்தை நாடி வந்திருக்கிறார். அவர் காலம் முழுக்க சுய மரியாதையுடன் நடத்தப்பட்டு மக்கள் தொண்டாற்றுவார். அவரது மக்கள் பணி தொடர வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசியபோது, ”பி டி செல்வகுமாருக்கு இரண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று இத்தனை காலம் பத்திரிகைத்துறை, சினிமா துறையில் நல்லவிதமாக சேவை செய்திருக்கிறார்; நல்ல பெயரெடுத்திருக்கிறார். அதற்காக முதல் வாழ்த்து. அரசியலில் அடியெடுத்து வைத்ததற்காக இரண்டாவது வாழ்த்து. இரண்டு நாள் முன் என்னை பார்க்க வந்தார். எனக்கு சிறிய மோதிரத்தை போட்டு விட்டார். அத்தோடு சிறிய விழா இருக்கு. வரணும்னு கேட்டுக்கிட்டார். இங்கு வந்து பார்த்தால் பெரிய அரசியல் விழாவாக இருக்கிறது.
உதவி செய்வதற்கு பொருளாதாரம்தான் இருக்கணும்னு அவசியமில்லை. மனசு இருந்தா போதும். அந்த மனசு பி டி செல்வகுமாருக்கு இருக்கு. அவர் செய்த கல்விப் பணிகள் பத்தியெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். அவரோட தொண்டு தொடர வாழ்த்துகள்!” என்றார்.
இயக்குநர் பி டி செல்வகுமாரை ”30 வருசத்துக்கு மேலா தெரியும். பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்னு பல அவதாரங்கள் எடுத்திருக்கார். நாட்டாமை படத்துல நடிச்சிருக்கார். அதனாலேயோ என்னவோ அவரே நாட்டாமையா மாறி பஞ்சாயத்து செய்து ரிலீஸ் பண்ண முடியாம பிரச்சனைகள்ல சிக்கியிருந்த ஏகப்பட்ட படங்களை ரிலீஸ் பண்ண உதவி பண்ணிருக்காரு. அவரோட கலப்பை மக்கள் இயக்கத்தோட பணிகள் பத்தி எனக்கு தெரியும். அவரு சினிமாவுல தளபதி விஜய்கூட இருந்தாரு. அரசியல்ல தளபதி ஸ்டாலின் அவர்களோட இருக்காரு. சினிமாவுல, சமூக சேவைகள்ல சாதிச்சது மாதிரி அரசியல்லயும் அவர் பெரியளவுல சாதிக்கணும்னு வாழ்த்தறேன்” என்றார்.
நடிகர் எஸ் வி சேகர் பேசியபோது, ”பி டி செல்வகுமார் நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்கிறார். நல்ல விஷயங்களை செய்கிறவர்கள் நல்லபடியாக அரோக்கியமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். நல்ல விஷயம் செய்றேன்னு கிளம்புறவங்கள்ல சிலர் ஏழாயிரம் ரூபா தையல் மெஷின் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு 40ஆயிரம் ரூபாய்க்கு போஸ்டரெல்லாம் அடிச்சு நிகழ்ச்சி நடத்துவாங்க. ஆனா, பி டி செல்வகுமார்கிட்டே 40 ஆயிரம் இருந்தா அந்த மொத்த பணத்துக்கும் உதவி பண்ணலாம்னு நினைப்பார். அப்படிப்பட்டவர் நல்லபடியா இருக்கணும், சேவை தொடரணும்னு வாழ்த்துகிறேன்” என்றார்.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பேசியபோது, ‘ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் செத்தாருள் வைக்கப் படும்’ என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி, பி டி செல்வகுமாரின் சமூகப் பணிகளைப் பாராட்டி, அப்படியான பணிகளை அவரது மனைவியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் செய்திருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி அவரையும் பாராட்டி வாழ்த்தினார்.
”பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்றில்லாமல் நம்மால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு, காமராஜர் வழியில் கல்விக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தே என்னை சமூக சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். கஷ்டபட்டுத்தான் எதையுமே செய்கிறேன். சரியான உழைப்புக்கு பலன் கிடைக்காமல் போகாது என நம்புகிறேன்” என தனது துவக்கவுரையில் குறிப்பிட்ட பி டி செல்வகுமார் தனது பத்திரிகை பணியின் ஆரம்பகாலம், திரையுலப் பணியில் கிடைத்த அனுபவம் என பலவற்றை சுருக்கமாக விவரித்தார். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கும் தனக்குமான பழக்கம், நெருக்கத்தை எடுத்துச் சொல்லி வரவேற்று, வந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.