அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை என்றால் அரசையே எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் என்று சொல்லும் படம்தான் இது. இதற்கு ‘அஞ்சாமை’ என்று தலைப்பிடப்பட்டு இருப்பது மெத்தப் பொருத்தம்
அதற்கு இயக்குனர் சுப்புராமன் தேர்ந்தெடுத்திருக்கும் களம், மருத்துவக் கல்வி கற்க அத்தியாவசியமானதாக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தகுதித் தேர்வு.
நீட் தேர்வு முறையை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களும்… குறிப்பாக நாட்டு மக்களும் எதிர்த்து வரும் நிலையில் அது வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எல்லாம் தனியான விவாதத்தை ஏற்படுத்தாமல் அதை நீதிமன்ற வாயிலாகக் கொண்டு வந்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்திற்கு சான்று.
கதை என்று பெரிதாக ஒன்றும் இலலை. கூத்துக் கலையில் வல்லவரான பூ விவசாயி விதார்த் தன் மகனைத் தாய்மொழிக் கல்வியில் கற்பதே சிறந்தது என்று அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறார். கூத்துக் கலையில் அவருக்குள்ள ஆர்வம் போலவே மகன் கிருத்திக் மோகனுக்கும் ஆர்வம் ஏற்பட வெகுண்டெழும் விதார்த்தின் மனைவி வாணி போஜன் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி வடுகிறார்.
அதன் விளைவாக தானும் கூத்துக்கலையைக் கைவிடுவதுடன் மகனையும் கல்வியில் நாட்டம் கொள்ளச் செய்கிறார் விதார்த். இதன் விளைவாக பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வருகிறான் கிருத்திக். மருத்துவம் பயில ஆசைப்படும் அவனுக்கு இடி போல வந்து விளைகிறது நீட் தேர்வு.
அதற்கான பயிற்சிப்படிப்புக்கு விளைச்சல் நிலம், கையிருப்பை இழந்தது மட்டுமல்லாமல் மேலும் கடன் பெற்று மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த், தகுதித் தேர்வு மையம் கூட ராஜஸ்தானில் அமைந்து போக மகனைக் கடைசி நிமிடத்தில் காலில் விழுந்து தேர்வுக்கு அனுப்பும் மன உளைச்சலில் மரணமே அடைகிறார்.
தந்தையின் மரணத்தை எதிர்த்து அரசைக் கேள்வி கேட்க நினைக்கும் மகன் கிருத்திக் மோகன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அங்குள்ள மனிதநேய ஆய்வாளர் ரகுமான் அவனுக்குத் துணை நிற்கிறார்.
அரசுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் போடும் ரகுமானுக்கு காவல்துறை கண்டனம் தெரிவிக்க காக்கிச் சட்டையைத் துறந்து கிருத்திக்குக்கான நியாயம் பெற தன் படிப்புத் தொழிலான வழக்கறிஞராகி கருப்புக்கோட்டை அணிகிறார். அங்கு வழக்கு என்ன ஆனது என்பது மீதிக்கதை.
முதல் பாதி இப்படிச் செல்ல இரண்டாவது பாதி முழுவதும் நீதிமன்ற நடவடிக்கைகளாகவே நடந்து முடிகிறது படம். கதை கற்பனையானது என்றாலும் முடிவையும் கற்பனையில் சொல்ல இயலாது என்பதால் ஒரு கேள்விக்குறியுடன் படத்தை முடிக்கிறார் இயக்குனர்.
கூத்துப்பட்டறையில் நடிப்பைப் பயின்ற விதாரத்துக்கு யதார்த்த வேடம் இந்தப் படத்தில் கிடைத்திருப்பதால் அந்தப் பாத்திரத்தில் ஒன்றி நடித்திருக்கிறார். அதுவும் வசனங்கள் இன்றி நிறைய உணர்வுகளை உடல் மொழியின் மூலமே விளக்க வேண்டும் என்ற நிலையில் ராஜஸ்தான் செல்லும் வழியிலும் அங்கே சென்ற பின்பும் மனம் உளைச்சலுக்கு உள்ளாகும் உணர்ச்சிகளை தன் நடிப்பின் மூலமே வெளிப்படுத்தி இருப்பது அற்புதம். அவர் குடிக்கத் தண்ணீர் தேடும் போது நமக்கே தொண்டை வறண்டு விடுகிறது.
இந்த நடிப்பின் மூலம் நிறைய விருதுகளுக்குத் தகுதி பெறுகிறார் அவர்.
இதுவரை படங்களில் காட்சிப் புதுமையாகவே வந்து கொண்டிருந்த வாணி போஜனுக்கு இந்தப் படத்தில் நடிப்புத் திறமையைக் காட்ட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டைட்டிலில் அவர் பெயரைப் பார்க்காவிட்டால் இது அவர்தான் என்று சத்தியம் செய்தாலும் நம்ப முடியாத அளவுக்கு ஒப்பனை இல்லாமல் அதே நேரத்தில் உணர்ச்சிமயமாக நடித்துத் தன் பெயருக்கான நியாயமாக தான் கற்ற கலை மூலம் கலைவாணிக்கு போஜனம் இடுகிறார் அவர்.
அவர்கள் மகனாக வரும் கிருத்திக் மோகனின் நடிப்பைக் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். இதுதான் முதல் படம் என்று தெரியாத அளவில் இரண்டாவது பாதிப் படம் முழுவதையும் அவனே தாங்கும் நிலையில் அதை அனாயசமாக நடித்துக் கடந்து இருக்கிறான். நடிப்பிலும் நிறைய தூரம் கடக்க கிருத்திக்குக்கு வாழ்த்துகள்..!
முன்பாதிப் படத்தில் இரண்டொரு காட்சிகளில் மட்டுமே வந்து போகும் முன்னணி நடிகரான ரகுமான் இந்தப் படத்தில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்பது இடைவேளையில் எழும் கேள்வியாக இருக்கிறது. அதற்கு பதிலாக பின் பாதிப் படம் முழுவதும் அவராலேயே அமைகிறது. தன் பண்பட்ட நடிப்பின் மூலம் புண்பட்ட மனங்களுக்கு அவர் ஊன்று கோலாக இருப்பது நன்று.
கார்த்திக்கின் ஒளிப்பதிவும் , ராகவ் பிரசாத்தின் இசையும் படத்தின் தன்மையைப் பிரதிபலித்திருக்கின்றன.
சொந்தமாக மெயில் ஐடி கூடத் தொடங்கத் தெரியாத அப்பாவி மாணவர்களை அறிவியல் பூர்வமாக திருட்டுத்தனம் செய்து விடக்கூடாது என்று தேர்வு மையத்தில் வைத்து அவர்கள் உள்ளாடை முதற்கொண்டு சோதனை இடும் கொடுமையை அப்பட்டமாக சொல்லி இருப்பது நெகிழ வைக்கிறது.