படத்தின் ஒன்லைன் என்ன என்று கேட்டால் இந்தப்பட டைரக்டர் ஜெய் என்ன பதில் சொல்வாரோ தெரியாது. ஆனால், நாம் புரிந்து கொண்டது, “யார் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படி வாழுங்கள்…” என்பதாகத்தான் இருக்கும்.
பணம் சம்பாதிக்க வக்கில்லாமல் காதலியால் கைவிடப்படும் ஏ.பி.ஸ்ரீதர், எப்படியாவது சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்கள் ராஜ் பரத், மதி, பாலாஜியுடன் பெரும்பணம் அடிக்கும் அசைன்மென்ட்டை ஒத்துக்கொண்டு அதையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல் லவட்டிக்கொண்டு காட்டில் ஒரு ஜமீன் தோட்டத்தில் அடைக்கலமாகிறார். பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மொத்தக் கதையும்.
‘ராஜ் பரத்’தான் ஹீரோ என்று நாம் புரிந்து கொள்வது அவர்தான் குட் லுக்கிங்காக… இளையவராக… கட்டுமஸ்தானவராக… முக்கியமாக நாயகியாகக் கருதப்படும் ‘தேஜஸ்வினி’யின் மனம் கவர்பவராக வருவதால்…
அந்த ஈர்ப்பும் சமுதாயப் பார்வையில் கள்ளக்காதலாகவே கொள்ளப்படும். ஒண்ட வந்த இடத்தில் தஞ்சம் கொடுத்த ஜமீன் துணையையே அள்ளுவதென்பது என்ன வகைக் காதல்..? அவளும், “இதுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தேன்..!” என்பதாக அவனுடன் சல்லாபித்து அவனுடன் பயணப்படுகிறாள். தேஜஸ்வினியை அடைவதுதான் வாழ்க்கை லட்சியம் போல ராஜ் பரத் காடு, மலைகளில் அசிரீரி ஒலிக்க ‘சவுண்டு’ விட்டுக் கொண்டிருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்..!
நமக்கும் ‘தேஜஸ்வினி’ என்கிற கட்டுக்குலையாத பந்தயக்குதிரையை, ராஜ் பரத் என்கிற வாளிப்பான ‘ஜாக்கி’ மட்டுமே அடக்கி சரியான தீனி போட முடியும் என்று புரிந்து கொள்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். போதாக்குறைக்கு ஜமீன் அமர் தன்னால் ‘எதுவும்…’ முடியவில்லை என்று ராஜ் பரத்திடமே ஸ்டேட்மென்ட் வேறு விடுகிறார்.
இன்னொரு பக்கம் மதி காதலிக்கும் ‘பூஜா தேவாரியா’யும் காட்டுக்குள் வந்துவிட, காடு கலர்ஃபுல்லாகிறது.
படத்தில் வந்த வில்லன் தேவராஜ் உள்பட எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதுடன், இயக்குநரின் நடிப்பை வாங்கும் திறமையும் சேர்ந்துகொள்ள இவர்களுடன் இணைந்த புதுமுகங்களான ஏ.பி.ஸ்ரீதரும், தேஜஸ்வினியும் கூட நடிப்பில் மிளிர்ந்து நேர்த்தியான படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறார்கள்.
அதிலும் ஜமீன் அமர் வரும் காட்சிகள் எல்லாம் அவர் நடிப்புடன் கலந்து ரசிக்க வைக்கின்றன. புலியை ஒருநாளாவது நேரில் பார்த்து புலிப்பால் கறந்து ஐய்யப்பனுக்கு அடுத்து சரித்திரத்தில் இடம்பெற நினைக்கும் அவரது ஆசை, புலியடித்து வீணாவது பரிதாபமான வேடிக்கை.
அத்துடன் முகேஷின் ஒளிப்பதிவு காட்டுக்குள் கொஞ்சகாலம் சென்று தங்கிவரவேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது. பிரஷாந்த் பிள்ளையின் இசையும், அதில் தோய்ந்த குட்டி ரேவதியின் பாடலும் போதை சுகம். வசனங்களும் வசீகரிக்கின்றன.
இத்தனை நேர்த்தியான விஷயங்கள் படத்தில் இருந்தும் எதுவுமே வெகுஜன ரசனையுடன் ஒன்றாத ‘வேற லெவல்’ முயற்சிகளாக இருப்பதால் வெற்றிக்கோட்டை ‘கோட்டை’ விடுகின்றன.
படம் முழுக்க அழகியலால் செதுக்கியிருக்கும் இயக்குநர் கதை, திரைக்கதையில் கொஞ்சம் கவனித்து செதுக்கியிருந்தால் ‘தியாகராஜன் குமாரராஜா’ போல் வந்திருப்பார்.
இந்தக் கதைக்கும் ஆந்திரா மெஸ்ஸுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்டு விடக்கூடாது என்பதால் கடைசியில் அதற்கும் ஒரு கனெக்ஷன் கொடுக்கிறார் இயக்குநர்.
ஆந்திரா மெஸ் – ‘ஆரண்ய காண்ட…’ நேர்த்தி… ‘ஏ சென்டர்’ தாண்டாத பூர்த்தி..!
– வேணுஜி