March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மதுரை அன்புவின் கதைதான் அன்பறிவு படத்தின் கதையா? – ஹிப் ஹாப் ஆதி விளக்கம்
January 5, 2022

மதுரை அன்புவின் கதைதான் அன்பறிவு படத்தின் கதையா? – ஹிப் ஹாப் ஆதி விளக்கம்

By 0 327 Views

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் படம் ‘ அன்பறிவு.’

அன்பறிவு என்று இரட்டை சகோதரர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஆக இருக்க அவர்களின் பெயரை எப்படி இந்த படத்தின் தலைப்பாக வைத்தீர்கள் என்று அஸ்வின் ராமிடம் கேட்டால்,

படத்தின் அடிநாதம் அன்பை காண்பதுதான் நல்ல அறிவு என்பது தான். இதில் ஹிப்ஹாப் ஆதியும் இரட்டையர்களாக வருகிறார். அவர்கள் இருவரும் சிறுவயதில் பிரிந்து பின்பு ஒன்று சேரும் கதையை ரொம்பவும் கிளாசிக் ஆக கொடுத்திருக்கிறோம்.

இரட்டையர்கள் என்பதால் அன்பறிவு என்று பெயர் வைக்கவில்லை. அன்பு தான் அறிவு என்ற அர்த்தத்தில் முதலில் ‘ அன்பே அறிவு ‘ என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். பிறகு அதை அன்பறிவு என்று மாற்றினோம். மாற்றிய காரணத்தாலேயே படத்தில் இரட்டையராக வரும் ஆதிக்கு ஒருவருக்கு அன்பு என்றும் இன்னொருவருக்கு அறிவு என்றும் பெயர் வைத்தோம்..!” என்றார்.

ஆதியிடம் படம் பற்றி கேட்டபோது…

நான் வளரும் நிலையில் இருப்பதால் எந்த விதமான சவால் என்றாலும் உடனே ஓடிப்போய் ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறேன். அப்படித்தான் இந்தப் படத்தின் கதையில் இரட்டைவேடம் என்பதும் உடனே ஒத்துக் கொண்டேன்.

வழக்கமாக என் படங்களில் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். இந்தப்படத்தில் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் படம் முழுக்க நிறைய இருக்கும் உறவுகள் மற்றும் குடும்பத்தின் மேன்மையை சொல்கிற படம். இரண்டு முழுப்பாடல்களும் ஏழு சிறிய பாடல்களும் இருக்கின்றன.

இந்தப் படத்தில் அண்ணன் விதார்த் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருக்கிறார் அந்த வேடம் சிறப்பாக பேசப்படும்… என் படங்களிலேயே இதில்தான் நெப்போலியன், விதார்த், சாய்குமார் என்று அதிகபட்ச நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இரண்டு வேடம் என்பதால் ஹேர் ஸ்டைல் கூட வித்தியாசமாக காட்ட வேண்டி வந்தது. மதுரையை சேர்ந்த தடாலடி பார்ட்டி அன்பு என்ற கேரக்டருக்கு முடி பரட்டையாகவும், அறிவு என்ற வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கேரக்டருக்காக முடியை படிய வாரியும் இரண்டு வேடங்களில் வித்தியாசம் காட்டியிருக்கிறேன்..!”

ஹிப் ஹாப் ஆதி எப்போதுமே ஜாலியான கேரக்டர் என்பதால் அவரிடம் “மதுரையை சேர்ந்த அன்பு என்பதால் தயாரிப்பாளர் மதுரை அன்பு கதைக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா..?” என்று சிக்க வைக்கும் ஒரு கேள்வியை முன் வைத்தால்…

“அய்யய்யோ அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை…” என்று சிரித்து மறுத்தவர், இயக்குனர் அஸ்வின் ராம் பற்றிச் சொன்னார்.

“அஸ்வின் ராம் ‘நட்பே துணை’ தெலுங்கு ரீமேக்கில் க்ரியேட்டிவ் டைரக்டராக இருந்தவர். அப்போதிருந்தே எனக்கு அறிமுகமான இவரும் என்னைப் போலவே மியூசிக் வீடியோவில் இருந்து வந்த டைரக்டர். எங்க ரெண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது. முறைப்படி இயக்குனர் ஆகாத நான் இவரிடம் வேலை செய்தபோது ஒரு இயக்குனர் குழு எப்படி இயங்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்…”

படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவர் ஷிவானி ராஜசேகர். மற்றொருவர் காஷ்மீரா. 

” இருவரில் யார் பெஸ்ட்..?” என்றால் ” படத்தைப் பார்த்து நீங்களே சொல்லுங்க அண்ணா..!” என்று நழுவுகிறார் ஹிப் ஹாப்.

சொல்லத்தானே போறோம் தம்பி..?