கொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அடுத்த வாரம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது ; அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தில், வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்பு பெட்டகம் ரூ.2,500-க்கு வழங்கப்படும்.
அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்ப நிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர் ஆகிய உபகரணங்கள் இருக்கும்.
அதனுடன் 14 நாட்களுக்குத் தேவையான வைட்டமின் சி, ஜிங்க், வைட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள் , 14 முகக் கவசங்கள் , சோப்பு போன்றவை இடம் பெற்றிருக்கும்.
நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் பெட்டகத்தில் இருக்கும். இவை தவிர முழு உடல் பரிசோதனை மைய அலுவலர்கள் தினமும் நோயாளிகளுடன் விடியோ காலில் பேசுவார்கள்.
மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களும் காணொலி முறையில் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பார்கள்.
இதன்மூலம் வீட்டில் இருந்தாலும் நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும். இந்த திட்டம் முதல் கட்டமாக சென்னையிலும் அடுத்தபடியாக மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.