மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்துக்கு கேரேஜ் என்று பெயர் – அது தெரியும். ஆனால், அமிகோ கேரேஜ் என்றால் என்ன..?
பிரெஞ்சு மொழியில் அமிகோ என்றால் நண்பர்கள் என்று பொருளாம். நண்பர்கள் கூடும் இடமாக ஒரு கேரேஜ் இருப்பதால் அதற்குப் பொருத்தமான பெயர் என்று வைத்திருக்கிறார்கள்.
ஒரு தலைப்புக்கே இவ்வளவு யோசித்து இருக்கிறாரே… அப்படியானால் கதைக்கு எவ்வளவு யோசித்து இருப்பார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் என்றுதானே நீங்கள் யோசிக்கிறீர்கள்..? அதையும் பார்த்துடுவோம் வாங்க..!
கதையின் நாயகன் மாஸ்டர் மகேந்திரன் பள்ளிச் சிறுவனாக அறிமுகமாகிறார். ஆனால் அப்போதே கரடு முரடான தாடி எல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார். தாடி எடுத்தால் மாணவன், தாடி வைத்துக் கொண்டால் இளைஞன் என்கிற இன்றைய சினிமாவுலக விதியையும் மாற்றி பள்ளியிலிருந்தே தாடி வைத்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன்.
லாஜிக்காக அது இடிக்கப் போகிறது என்று உணர்ந்த இயக்குனர் இப்படி ஒரு உரையாடலைப் போடுகிறார்.
பள்ளிக்குப் போகும் மகேந்திரனுடைய அம்மா அவரிடம், “உன்னைப் பார்த்தால் ஸ்கூல் படிக்கிற பையன் மாதிரியா இருக்கு, இப்படி தாடி வச்சிருக்கியே.?” என்று கேட்க, “நான் என்னம்மா பண்றது, எனக்கு தாடி அப்படி முளைக்குது.?” என்றபடி கடந்து போகிறார் மகேந்திரன்.
அப்படி, தான் உண்டு தன் அம்மா அப்பா உண்டு, தன் தாடி உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரன் கல்லூரிக்குப் போகிறார். இடையில் காதலிக்கிறார். அதன் பிறகு ஏற்படும் ஒரு சின்ன உரசல் அவரை தேவையில்லாமல் வன்முறைப் பாதைக்கு இட்டுச் செல்கிறது.
கொலைகளைச் செய்யும் அளவுக்குப் போகும் அவர் வாழ்க்கை கடைசியில் என்ன ஆனது என்பது முழுப் படத்தின் கதை.
60 வயது ஆனாலும் மகேந்திரன் நமக்கு எப்போதும் ‘மாஸ்டர்’தான் என்று இருக்க, அவர் இன்னமும் பள்ளியில் படிக்கும் மாணவனாகவே நடிப்பதற்கும் பொருத்தமாகவேதான் இருக்கிறார்.
எதையும் இலகுவாக அணுகும் குணாதிசயத்தைக் காட்ட விரும்பி இருக்கும் அவர், கொலைகாரனாக மாறிய பிறகும் அப்படியே நடித்துக் கொண்டிருப்பது குழந்தைத்தனமாகவே இருக்கிறது. நடிப்பில் எப்போது மாஸ்டர் ஆவாரோ மகே..?
முதலில் கல்லூரி மாணவியாக வரும் ரம்யா தான் படத்தின் நாயகியாகவும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆதிரா கதையின் நாயகியாகிறார்.
ஆனால், அவரும் கூட எதுவுமே செய்யாமல் வெறும் காதலுக்கு மட்டும் துணை போய்விட்டு ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொள்கிறார்.
கதைக்களமாக வரும் கேரேஜில் கார்களை ரிப்பேர் பண்ணினார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஏகப்பட்ட வன்முறை வேலைகளுக்கு அதுதான் தலைமையகமாக இருக்கிறது.
அதன் உரிமையாளரான சுந்தர், தனக்கேயுரிய இயல்பான நடிப்பில் ஈர்க்கிறார். மகேந்திரனின் காட்பாதராக வரும் அவர், கிளைமாக்சை நிர்ணயிப்பவராக வருவது திடீர் திருப்பம்.
தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள்.
பிற பாத்திரங்களில் வரும் மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
நல்ல ஒளிப்பதிவாளருக்கு அடையாளம் இரவில் நடக்கும் காட்சிகளைக் கூட துல்லியமாக படமாக்குவது என்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய்குமார் சோலைமுத்து இதில் நல்ல ஒளிப் பதிவாளராகிறார்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவும் படத்துக்குப் பொருத்தமாக சுரம் பிடித்திருக்கிறார். பாடல்களும் கேட்கும் படி இருக்கின்றன..
முக்கால்வாசிப் படம் வன்முறைக் களமாகவே இருந்தாலும் கடைசியில் முடிக்கும் போது “இந்தப் பாதைக்கு வராமல் என்னாலேயே தடுத்திருக்க முடியும்..!” என்று மகேந்திரன் உணர்வதும் அதற்கான காட்சிகளைக் காட்டுவதும் நல்ல சிந்தனை.
இயக்குனர் தன் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளும் இடம் அது.
அமிகோ கேரேஜ் – நம்பிக்கையில் வந்த டேமேஜ்..!