May 6, 2024
  • May 6, 2024
Breaking News
December 17, 2023

அகோரி திரைப்பட விமர்சனம்

By 0 126 Views

சும்மாவே ஆவிகள் தன்னிடம் சிக்குகிறவர்களைப் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டும். அதுவும் அது ஒரு எழுத்தாளருடைய ஆவி என்றால்..? 

அப்படி வித்தியாசமான திகில் கதை எழுத ஆரம்பித்த ஒரு எழுத்தாளர் அது அமையாமல் போக தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய ஆவி அவர் எழுதிய  கதையிலிருந்து ஒவ்வொரு பக்கத்துத் தாளாக எடுத்துப் போட்டு அதில் இருக்கும் விஷயத்தின்படியே அங்கு வருபவர்களை போட்டுப் பார்க்கிறது.

அப்படி படம் இயக்கும் ஆசையில் நாயகன் சித்து சித், தனது தோழர்கள் மற்றும் தோழியுடன் ஒரு காட்டு பங்களாவிற்கு தங்கள் படத்துக்கான கதை உருவாக்கத்துக்கு செல்ல, முன்பு தற்கொலை செய்து கொண்ட இயக்குநர் ‘ கதைச் சுருக்கம் ‘ என்ற தலைப்பில் எழுதிய ஸ்கிரிப்ட் அங்கு இருக்கிறது.

அதிலிருந்து ஒவ்வொரு தாளாக ஒவ்வொருவர் கைக்குக் கிடைக்க, அதன்படி இவர்கள் நடக்கவில்லை என்றால் அந்த பங்களாவை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் உயிர்விட நேரும் என்பது நிபந்தனையாக விதிக்கப் படுகிறது.

இவர்களுடன் சித்துவின் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனும் வந்து சேர்ந்து கொள்ள என்ன ஆகிறது என்பதுதான் மீதிக் கதை.

கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டுக்குள் தங்கி இருப்பவர்களின் டாஸ்க்கள் போன்று இந்த பேய் பங்களாவுக்குள் மாற்றிக் கொள்பவர்களுக்கும் உயிர் பயம் என்ற டாஸ்க் வைத்து படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்.

இப்படி ஒரு அமானுஷ்ய சூழலில் தள்ளப்பட்டு, அதிலிருந்து எப்படியாவது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதாபாத்திரத்தில் நாயகன் சித்து சித் நியாயமாக நடித்திருக்கிறார்.

அவருடைய தோழர்களாக வெற்றி விஜய், மதன் கோபால்,, ‘கலக்கப்போவது யாரு’ சரத், தோழியாக  ரியாமிகா,, மற்றும் காதலியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் சாமியாராக மைம் கோபியும்,  அகோரியாக சாயாஜி ஷிண்டேவும் தங்கள் அனுபவ நடிப்பால் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

அந்த அமானுஷ்ய பங்களாவின் திகில் சூழலை ஒளியுடன் இருளையும் திறம்பட அமைத்து தன் பங்கை நிறைவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமல்ராஜ் விஜயலக்ஷ்மி வசந்தகுமார்

சமீபத்தில் கவனிக்க வைக்கும் ஃபோர் மியூசிக் இந்தப் படத்தின் இசைப் பொறுப்பை ஏற்க, படத்தொகுப்பை ராஜ்குமார் ஏற்றிருக்கிறார்.

கலை இயக்குநர் சந்திரகாந்த்தின் பங்களிப்பும் இந்த திகில் படத்துக்கு தேவையானதைச் செய்திருக்கிறது.

ஒரே பங்களாவிற்குள் கதை நகரும் உணர்வு தெரியாத வகையில் எழுதி இயக்கி இருப்பதுடன் பேயைக் காட்டாமல் பயத்தை உருவாக்கி இருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார். 

ஆனால் படத்தில் வரும் இரண்டு பெண்களின் மீது ரசிக மனங்களின் இச்சையைத் தூண்டாமல் இருந்திருக்கலாம். 

படம் முழுவதும் ஒரு டீ சர்ட், சிக்கென்ற டிராயர் உடனேயே அலைந்து கொண்டிருக்கிறார் ரியாமிகா. ஆண்களுடன் காட்டு பங்களாவுக்கு செல்லும் பெண் இப்படித்தான் உடை அணிவாரா..? ஒரு காட்சியில் சரக்கு அடித்து விட்டு கால்களை அகல விரித்து தரையில் கிடக்கிறார் அவர்.

அதேபோல் கதை சுருக்கம் தரும் டாஸ்க்காக நாயகி சுருதி ராமகிருஷ்ணன் மீது நண்பர்களின் காமப் பார்வை ஏற்படுவதையும், அவரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கும்படி இருக்கும் வக்கிரத்தையும் தவிர்த்து இருக்கலாம்.

அகோரி – ரசிகர்களின் பேய்ப் பசிக்கு மலிவு விலை புகாரி..!’