காலம் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அந்தக் காலம் தந்த நினைவுகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அல்லவா..? அப்படி பாலுமேந்திராவின் படைப்பான ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் நடித்த வினோதினியையும் மறக்க முடியாது.
அந்தப்படம் வந்தபோது வினோதினி மீது கிறுக்கு பிடித்து திரிந்தார்கள் இளைஞர்கள்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து நாயகியாக ஒருசில படங்களில் நடித்து முடித்ததுமே திருமணம் ஆகி குடும்ப வாழ்வில் செட்டிலானார் வினோதினி. கணவன், இரண்டு குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் மீண்டும் டிவி சீரியல்களில் நடிக்க வந்தார். ஆனால், மீண்டும் காணாமல் போனவர் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்.
இடையில் தன் வாழ்வில் நடந்த சோகம் பற்றி அவர் ஒரு முன்னணி மீடியாவுக்கு அளித்த பேட்டியிருந்து…
“என் கணவர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலுக்காக சிலரிடம் நம்பி ஐந்து கோடி ரூபாய் தந்தார். அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தனர். இதனால் மன உளைச்சலுடன் இருந்தவர் கடந்த மே மாதம் சாலை விபத்தில் சிக்கினார். அதில் கோமா நிலைக்குப் போனவர் ஆறு மாத கடும் போராட்டத்துக்குப் பின் இப்போதுதான் உட்காரும் நிலைக்கு வந்திருக்கிறார்.
இந்த ஆறு மாதமும் நான் பட்ட துயர் யாருக்கும் வரக்கூடாது. என் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு கணவருக்கும் சிகிச்சை அளித்து வந்தேன். அதனால்தான் டிவியில் நடிப்பதையும் நிறுத்தினேன். எனக்கு இப்போது வருமானமும் இல்லை.
விபத்துக்கு முன் எங்களிடம் பண மோசடி செய்தவர்கள் பற்றி போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால், அவர்களது செல்வாக்கினால் உயர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிக் கொண்டனர்.
அதனால் நீதி மன்றத்தை அணுகினோம். அங்கே எங்கள் நியாயம் வென்றது. ஆனாலும் அவர்கள் உயர்நீதி மன்றத்துக்கு போனார்கள். அங்கேயும் எங்கள் பக்கம் வெல்ல சாய்பாபா கோவிலுக்கு வரவைத்து ஒரு தொகையைக் கொடுத்தார்கள். மீதி தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
இந்த உளைச்சலில் டூ வீலரில் சென்ற என் கணவர் மீது தவறான பாதையில் வந்த இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளாக்கிவிட்டு அந்த விபத்துக்கான அபராதத்தை செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், அதனால் என் குடும்பம் ஆறு மாதமாக பட்ட துயர் கணக்கில் அடங்காது.
விபத்து நடந்தது துணை முதல்வர் குடியிருக்கும் சாலையில்தான். அதனால், எங்களுக்கு நியாயம் கிடைக்க முதல்வரும், துணை முதல்வரும் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்கள் குடும்பத்தைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும்..1”
ஒரு நடிகைக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களை இந்த மோசடிக்காரர்கள் என்ன பாடு படுத்துவார்கள்..?