அமாலாவை மறக்க முடியுமா..? ஒரு துருவ நட்சத்திரமாக தமிழ் வானில் மின்னி அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முடித்தவர் கந்தக மின்னலாக காணாமல் போய் ஆந்திர மருமகளாக செட்டிலானார்.
அதற்குப் பின் தமிழில் நேரடியாக நடிக்காதவர் இப்போது டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அவரிடம் உரையாட நேர்ந்ததில் இருந்து…
‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் என்னை சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். அவர் விளக்கிச் சொன்ன விதமும் சரி, கதையும் சரி, அழகாக இருந்தது. அப்படி ஒரு கதையை நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதனால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வழக்கத்துக்கு மாறான ஒரு படம். மூன்று கதாபாத்திரங்களின் பயணமே இந்தக் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.
ஷர்வானந்த், ஸ்ரீகார்த்திக், சதீஷ், ரமேஷ் திலக் என இன்றைய தலைமுறைக் கலைஞர்களோடு நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அமலா…
“ஷர்வானந்துடன்தான் எனக்கு அதிக காட்சிகள். மிகத் திறமையானவர். கண்ணியமானவர். ஸ்ரீகார்த்திக்கு, சர்வானந்தும் ஒருவரை ஒருவர் முந்தி பணியாற்றினர். என்னையும் கடுமையாக வேலை வாங்கினார். சரியான தருணம் கிடைக்கும் வரை நடிக்க வைத்தார். அது உங்களுக்குப் படம் பார்க்கும் போது தெரியும். டப்பிங் கொடுக்கும்போது படம் பார்த்தேன். மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.
நிறைய நகைச்சுவை நிறைந்திருந்தது. நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அதே சமயம் சில காட்சிகளில் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். ஏனென்றால் அம்மா நினைவுக்கு வரும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். அம்மா கதாபாத்திரம் வந்த பிறகு ஆழமான உணர்வுகள் கதையில் வரும். அதற்கேற்ற ஆழமான இசையும் உள்ளது…” என்றார்.
தொடர்ந்து, “இது ஒரு சாகசப் பயணக் கதை என்று சொல்லலாம். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னர் எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நிறைய சிரிப்பு நிறைந்திருக்கும். ஒரு அதிர்ச்சி இருக்கும். அந்த அதிர்ச்சியின் மூலம் கூட வாழ்க்கையைப் பற்றி புரிய வரும். நமது சிறந்த முயற்சியைத் தர நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்று உணர வைக்கும். அந்த உந்துதலைக் கொடுக்கும். விழுந்தால் எழுந்திரு என்பதைச் சொல்லும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்…!” என்றவர்
“மனித உணர்ச்சிகள் உலகம் முழுக்க பொதுவானதுதான். எனவே கணம் படத்தில் இருக்கும் உணர்ச்சிகள் இளைஞர்களை சென்றடைந்துவிட்டால் கண்டிப்பாகப் படம் தேசிய அளவில், பான் இந்தியா என்று சொல்லும்படி பிரபலமாகும். கண்டிப்பாக திரையில் தமிழ், தெலுங்கு என அத்தனை ரசிகர்களுக்கும் படம் சென்று சேரும் என்று எனக்குத் தெரியும். அம்மா பாசம், இளைஞர்களுக்கான தடைகள், போராட்டங்கள், இதெல்லாம் அனைவருக்கும் பொது. இந்த விஷயங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்..!” என்று நெகிழ்ந்தார்.
“பிரபலமாகி இருக்கும் கணம் படத்தின் அம்மா பாடல் குறித்து, அமலா பேசும்போது,
“கதையில் அது மிக அழகான, அரிய சூழல். அதற்கேற்ற உணர்ச்சிகரமான பாடல். ஆனால் சோகமான பாடல் கிடையாது, ஆறுதலைத் தான் தரும். அந்தச் சூழலுக்கு இந்தப் பாடல் உயிரைக் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்..!” என்றார்.
தமிழில் டப்பிங் செய்ய முடிந்ததா அமலாவால்..?
“வசனமாகக் கொடுத்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவேன். ஆனால் சாதரணமாகப் பேசும்போது நான் சிந்திக்கும் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசத் தாமதமாகிவிடும். இப்போது பேசும் மொழி தெலுங்கு என்பதால் நிறைய வார்த்தைகள் தெலுங்கு வேறு வருகிறது. ஆனால் டப்பிங் செய்யும்போது ஸ்ரீகார்த்திக்கே ஆச்சரியப்பட்டுப் போன அளவுக்குப் பேசினேன்..!” என்று சிலிர்த்தார் அம்மாவாக தமிழுக்குத் திரும்பி வந்திருக்கும் அமலா.
வாங்க அமலா அம்மா, வாங்க..!