April 26, 2024
  • April 26, 2024
Breaking News
October 11, 2018

ஆண் தேவதை சினிமா விமர்சனம்

By 0 1139 Views

ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா.

உலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்களே வெளியில் சொல்ல வெட்கப்படும் சமுதாயச் சூழலில் அதை இலக்கியமாக்கிப் பெருமைப்படுத்தியதற்காக ஆண்களின் சார்பாக தாமிராவுக்கு ஒரு ‘பொக்கே.’

“எனக்கு யாருமே இல்லை…” என்று நாயகி ரம்யாபாண்டியன் சொன்ன நொடியே “இனிமேல் அப்படி இல்லை…” என்று அவரைக் கரம்பற்றிக் கணவனாகும் சமுத்திரக்கனி அங்கே ‘ஆண் தேவதை’யாக ஞானஸ்நானம் பெறுகிறார். இருவரும் ஓடி ஓடி உழைத்தாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற நிலையில் இரட்டைக் குழந்தைக்குப் பெற்றோராகிறார்கள்.

பொறுப்பு கூட, நல்ல எதிர்காலம் கொண்ட மனைவியை வேலைக்குப் போகச் சொல்லிவிட்டு நல்ல ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’டாகச் செட்டில் ஆகிறார் கனி. தேவைகளைத் தாண்டி வசதிகளைப் பெருக்கிக் கொண்டு போகும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் போகப்போக உறவில் விரிசல் விழ… உடன் வரும் மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் கனி.

மீண்டும் ‘இல்லறக் கனி’யைப் பறித்தாரா கனி என்பதே கதை.

சமுத்திரக்கனி ஒரு படத்தில் வந்தாலே சமூகத்துக்கு சேதி வருகிறதென்று பொருள். எந்தப் பெண்ணுக்கு இப்படி வாய்க்கும் என்கிற அளவில், என்ன பிரச்சினை என்றாலும் உட்கார்ந்து பேசித் தீர்வைத் தேடும் அழகில் ஈர்க்கிறார் கனி. சபையில் வைத்து மனைவி அவரை அறைந்தபோதும், வீட்டுக்கு வந்து “திருப்பி அடிக்கிறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்… நீ வேலை செய்யற இடத்துல அவமானம் ஆகிடக் கூடாதுன்னுதான் பேசாம இருந்தேன்…” என்று பொறுமை காக்கும் அவருக்குக் குடும்பப் பெண்கள் கோயில் கட்டலாம்.

அடுத்த வீட்டுப் பெண்களுடன் போழுது போக்கிவிட்டு மனைவி வரும் நேரம் சமர்த்தாக வீட்டுக்குள் வந்துவிடும் அவர் ஏற்ற இந்தக் கேரக்டரை வேறு எந்த ஹீரோவும் ஏற்க மாட்டார்கள்.

அவரைப் போலவே ரம்யா பாண்டியனும். கணவனை கைநீட்டி அடிப்பதில் தொடங்கி, “வெளியில போய் வாழ்ந்து பாருங்க. முடியாட்டி வாங்க சேத்துக்கறேன்..!” என்று கார்ப்பரேட் கர்ஜனை புரியும் ரம்யாவின் தைரியமும் ரசிக்க வைக்கிறது. கடன்காரன் முன்னால் அவமானப்பட்டு நிற்கும் வேளையிலும் கணவனைக் கூப்பிட ஈகோ ஒத்துக் கொள்ளாத அவரது ‘ஈகோ’, ‘இபிகோ’க்களைவிடக் கொடுமையானது.

அதில் இமேஜ் பார்க்காமல் நடித்து நடிகையாகப் பெருமை தேடிக்கொள்கிறார் ரம்யா.

அவர் அப்படி மாற ஒருவிதத்தில் காரணமான ‘சுஜா வாருணீ’யின் பாத்திரமும், அந்தப் பாத்திரம் முடிவுறும் இடமும் இன்றைய கார்ப்பரேட் மோகம் கொண்ட காரிகைகளுக்குப் பாடம்…

ஆனால், பிரச்சினை என்று வந்துவிட்டால் அதைத் தீர்க்க முடிவெடுக்காமல் தற்கொலை முடிவுக்குப் போகும் சுஜாவின் கேரக்டர் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல் ஒரு கம்யூனிட்டியாக வாழும் ஃபிளாட் கலாச்சாரத்தில் ஒரு குழந்தையை வீட்டுக்குள் அடைத்து வைக்குமளவுக்கு நிலைமை போயும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னவென்றே கேட்க மாட்டார்களா..? யாருக்குமே போலீஸுக்குப் போக துணிவிருக்காதா என்ன..?

கலெக்க்ஷன் தாதா ஹரீஷ் பெராடி, அறந்தாங்கி நிஷா வரும் காட்சிகளில் தெரியும் நாடகத்தன்மையைத் தவிர்த்திருக்கலாம்.

ராவுத்தராக வரும் நல்ல மனிதர் ராதாரவியும், கனியின் நண்பனாக வரும் காளி வெங்கட்டும் ரசிக்க வைக்கிறார்கள். கனி – ரம்யாவின் இரட்டைக் குழந்தைகளான பேபி மோனிகாவும், கவின் பூபதியும் திரையில் தொட்டுக் கொஞ்சலாம் போல அவ்வளவு க்யூட். “என்னை மட்டும் ஏம்பா விட்டுட்டுப் போனே… என்னை உனக்குப் பிடிக்கலையா..?” என்று கவின் கேட்கும்போது நமக்கே கண் கலங்குகிறது.

படத்தின் பெரும்பலம் பளிச்சென்ற வசனங்கள். “உன் பொண்டாட்டி கூட பேசிப் பாரு புரிஞ்சுப்பா…” என்று கனிக்கு அட்வைஸ் செய்யும் காளிவெங்கட் அதன் தொடர்ச்சியாக “கிடைச்ச ஒரு நல்ல அடிமையை இழக்க எந்தப் பொண்ணும் விரும்ப மாட்டா…” என்று சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது. இப்படிப் படத்தில் பல இடங்களில் கைத்தட்டல் பெறும் தாமிரா, தான் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதைப் புரிய வைக்கிறார்.

அதேபோல் தம்பதியரின் ஈகோ என்பது அவர்களது வாழ்வுடன் முடிவதில்லை – அதில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது முக்கியம் என்று புரிய வைக்கும் கிளைமாக்ஸும் நன்று.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் கைவண்ணம் கவர்கிறது. கிப்ரானின் இசையில் ‘நிகரா…’ பாடலில் நயாகரா சுகம்..!

வேலைக்குப் போகும் தம்பதியர் கொண்ட எல்லா குடும்பங்களின் கதையானதால் குடும்பத்தோடு பார்த்து மகிழலாம். ‘Will Smith’ நடித்த ஆங்கிலப் படமான ‘The pursuit of happyness ‘ படம் பார்க்காதவர்கள் இன்னும் கூட ரசிக்கலாம்.

ஆண் தேவதை – அதான் சொல்லிட்டீங்களே..!

-வேணுஜி