April 27, 2024
  • April 27, 2024
Breaking News
October 6, 2021

எ கொயட் பிளேஸ் 2 (A Quiet Place – II) ஹாலிவுட் பட விமர்சனம்

By 0 461 Views

நினைத்துப் பாருங்கள்… எந்த சப்தமும் எழுப்பப் படாமல் இந்த உலகம் நிசப்தமாவதை..! இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே படத்தின் முதல் பாகத்தில் யோசித்து ஒரு சைலன்ட் திரில்லரைக் கொடுத்து விட்டார் இயக்குனர் ஜான் கிரசின்ஸ்கி. அவரே முதல் பாகத்தில் நம்ம சசிகுமார் மாதிரி ஹீரோ கம் இயக்குநராக வர, இந்த பாகத்தில் பழைய கதையை நினைவு படுத்த ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.

திரில்லர் மற்றும் ஹாரர் படங்கள் நன்றாகப் போவதால் அதன் காரணமாக கோலிவுட்டில் ஆவிகள் உதவுவதைப் போல ஹாலிவுட்  ஏலியன்களின் பிடியில் இருக்கிறது. ‘ஈடி’யில் அன்பும், அமைதியும் உருவான ஏலியன், ‘இன்டிபென்டன்ஸ் டே’வில் ஆக்டோபஸ் டைப்பில் வானூர்திகளை இயக்கத் தெரிந்த ஏலியன்கள், ‘ஏலியன்’ படத்தில் மனித உடலுக்குள் சென்று பின் வெளியேறி மளமளவென்று ராட்சத சைஸில் வளரும் மிருகம் போன்ற ஏலியன், சமீபத்தில் ‘அரைவல்’ படத்தில் பூமிக்கு நற்செய்தி கொண்டு வந்த கொசகொசப்பான ஏலியன்கள் என்று பலவற்றைப் பார்த்திருக்கிறோம்.

இதில் ஜான் கிரசின்ஸ்கி படைத்திருக்கும் ஏலியனும் கிட்டத்தட்ட ஏலியன் பட வகையறாதான். ஆனால், மேனிமல் போன்ற மனித உருவத்தை ஒத்திருக்கும் இந்த உயிரினத்துக்குக் கண்கள் இல்லை. எனவே பார்வை இல்லை. ஆனால், அதையும் சேர்த்து அபாரமான கேட்கும் திறன் கொண்டவை. ஒலி எழுப்பினால் வந்து தாக்கி அழிக்கும். அதன் காரணமாகவே மக்கள் ஒலி எழுப்பும் போதெல்லாம் இவற்றால் தாக்கப்பட்டு செத்து மடிகிறார்கள். தாக்குதல் என்றால் சாதாரணத் தாக்குதல் அல்ல. அசுர வேக அதிரடித் தாக்குதல். இதனால் பூமியே மௌனக் காடாகப் போக, எஞ்சியவர்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் கதை இது.

முதல் பாகத்தில் அபாட் குடும்பத்தில் நாயகன் ‘லீ அபாட்’ டாக வருவார் ஹீரோ கம் இயக்குநரான ‘ஜான் கிரசின்ஸ்கி’. அவரது மனைவி ‘எவ்லினா’க ‘எமிலி ப்ளன்ட்’,  செவித் திறன் அற்ற மற்றும் பேச இயலாத ‘ரீகன்’ என்ற மகளாக ‘மில்லிசென்ட் சிம்மன்ஸ்’, மகன்கள் ‘மார்கஸ்’ மற்றும் ‘பியூ’வில் மார்கஸாக ‘நோவா ஜூப்’. 

அதில்தான் இந்த வகை வேற்று கிரக உயிரினங்களைப் பற்றி நாம் அறிந்தோம் என்பதால் காட்சிக்குக் காட்சி நமக்கு பதைபதைப்பு பற்றிக்கொள்ளும். அவை எப்படி இருக்கும், எப்படி வந்துத் தாக்கும் என்பதையெல்லாம் படத்தில் வரும் பாத்திரங்களைப் போன்றே நாமும் அறியாத நிலையில் இருந்தோம். ஆனால், இதில் அந்த சஸ்பென்ஸ் இல்லை. அதில் எஞ்சியவர்கள் இதில் எப்படி தப்பிப் பிழைத்தார்கள் என்பதுடன் அந்த உயிரினங்களை வெற்றி கொள்ளச் சாத்தியமும் இந்த இரண்டாம் பாகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

படத் தொடக்கம், முதல் பாகத்தில் சொல்ல மறந்த கதையாக ஏலியன்கள் வான் வழியே தீயைக் கக்கிக் கொண்டு பூமிக்கு வருவதைச் சொல்கிறது. வந்ததுமே தாக்குதல்தான். கார்களில் தப்பும் மனிதர்களை அதன் சப்தத்தை வைத்தே அடித்து நொறுக்குகிறது. பின்னர் முதல் பாதியில் விட்ட இடத்துக்கு வருகிறது கதை. முதல் பாகத்திலேயே லீயும், அவர்களின் மகன் பியூவும் இறந்து விட, எவ்லின், மகள் ரீகன், மகன் மார்கஸ் இவர்களுடன் முதல் பாகத்தில் கடைசியாகப் பிறந்த எவ்லினின் குழந்தையும் இதில் தப்பிப் பிழைக்க, அவர்களைப் போலவே தப்பி ஒரு அன்டர் கிரவுண்ட் ரயில்வே கேரேஜில் வசிக்கும் நண்பரிடம் வந்து சேர்கிறார்கள். அந்த நண்பர் வேடத்தில் ‘சில்லியன் மர்பி’ நடித்திருக்கிறார். 

அந்த கேரேஜில் ஒரு ஸ்டீம் பாய்லர் போன்ற அமைப்பு இருக்க, அதற்குள் சென்று மூடிக்கொண்டால் ஒலி வெளியே கேட்காது என்ற நிலையில் ஏதாவது பேச வேண்டுமானால் அதற்குள் போய் விடலாம். ஆனால், அதற்குள் காற்றும் புகாது என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே அதில் சுவாசித்துக்கொண்டு இருக்க இயலும். அந்த செட்டப்புக்குள் நோவா ஜூப்பும், அந்த கைக்குழந்தையும் மாட்டிக்கொள்ளும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.

அதேபோல் சில்லியன் மர்பியிடம் இவர்கள் வந்து சேரும் காட்சியில் சிறுவன் நோவா ஜூப்பின் கால் ஒரு இரும்புக் கண்ணியில் சிக்கிக்கொள்ள அவன் அலரும் இடமும் பக்.. பக்..! இதேபோல்தான் முதல் பாகத்தில் எமிலி ப்ள்ன்ட்டுக்கு பிரசவ வலி வர, ஒரு குளிக்கும் தொட்டிக்குள் அமர்ந்து பிரசவ வலியில் துடிக்கும் இடம் பதற வைக்கும். அந்தக் காட்சியில் எமிலி அவ்வளவு அருமையாக செய்திருப்பார். அந்த அளவு சென்டிமென்ட் இதில் இல்லை என்றாலும் ஒரே இடத்தில் இருக்கும் இவர்கள் ஒவ்வொரு தேவைக்காக தனித்தனியாகப் பிரிய நேர, ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயிரினத்திடம் மாட்டிக்கொள்ளும் கிளைமாக்ஸின் இருபது நிமிடங்கள் பதைபதைக்க வைக்கிறது.

கைக்குழந்தையின் குரல் வெளியே கேட்கக்கூடாது என்பதால் அதை ஒரு பெட்டிக்குள் வைத்து அந்தப் பெட்டிக்குள் சுவாசத்துக்கு ஆக்சிஜன் சிலின்டரில் இணைத்து வழி செய்வது ரொம்பவே பாவம். அந்த சிலிண்டரும் தீர்ந்து போக நேர… உயிர் வாழ்வது எத்தனை பெரிய போராட்டம் என்று எண்ண வைக்கிறது. 

கடைசியில் மில்லிசென்ட் சிம்மன்ஸின் முயற்சியில் அவளது காது கேட்கும் கருவியின் ஒலி அலைகளை பெரிதுபடுத்தி ஒலிக்க வைத்தால் அந்த உயிரினங்கள் தடுமாறுவது புரிகிறது. ஒரு தீவில் ரேடியோ ஒலிபரப்பு செய்யும் நிலையம் ஆக்டிவ்வாக இருக்க, அங்கே சென்று அந்த ஒலி அலைகளை ஒலி பரப்பினால் அது சென்று சேரும் இடங்களில் தப்பிப் பிழைத்திருப்பவர்கள் அந்த உயிரினத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பெற அதற்கான போராட்டத்தில் ஒரு தீவில் வசிக்கும் ‘ஜிமோன் ஹவுன்சவ்’ உதவியில் அது நிறைவேறுகிறது. ஆனால், அதற்கு உதவும் அவர்தான் உயிரைக் கொடுக்க வேண்டி வருகிறது.

கடந்த பாகத்தை ஒப்பிடும் போது எமிலியின் நடிப்புக்கு அவ்வளவு வேலை இதில் இல்லை. ஆனால். குழந்தைகளைக் காக்கும் தாயின் பொறுப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறார். குழந்தைகளும், அதிலும் மில்லிசென்ட் சிம்மன்ஸின் நடிப்பு அற்புதம். இயல்பிலேயே அந்த சிறுமிக்கு செவித்திறன் இல்லாது இருப்பதில் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த பாகத்தில் குழந்தைகளையும் கவர, இந்த சிறுவன், சிறுமியே கிளைமாக்ஸை முடிக்கிறார்கள்.

கடந்த பாகத்தில் ஒளிப்பதிவில் அழகியல் தூக்கலாக இருந்தது. இதில் ஒளிப்பதிவு செய்திருக்கும் பாலி மார்கன் கொஞ்சம் ‘சீரியஸா’கவே வேலை பார்த்திருக்கிறார். கடந்த பாகத்திலும் இசைத்த ‘மார்கோ பெல்ட்ரானி’யின் பின்னணி இசையை அடித்துக்கொள்ளவே முடியாது. படம் முடிந்தும் அந்த ஆர் ஆர் நம் காதுகளுக்குள் ‘பர்ர்ர்ர் பர்ர்ர்…’ரென்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

படத்தின் பெரும்பகுதி நிசப்தமாக நகர, எந்த வகையிலும் சப்தம் வந்து விடக்கூடாதென்ற பாதிப்பில் தங்கள் கைகளில் இருக்கும் பாப்கார்னில் இட்ட மசாலாத்தூளைக் கூட  குலுக்க நேராமல் பார்வையாளர்கள் படத்தில் ஒன்றி விடுவதுதான் இந்தப்படத்தின் வெற்றி..!

– வேணுஜி