ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது பழைய மொழி. ஆனால் இன்றைய நவ யுகத்தில் இதை கொஞ்சம் மாற்றி யோசித்து ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருந்த ஒரு ஆணின் கதையை சொல்லி இருக்கிறார் இதன் இயக்குனர் பவன் சதினேனி.
பெண்ணுக்கு படிப்பெல்லாம் எதற்கு..? உரிய காலத்தில் கட்டிக் கொடுத்து விட்டால் கடமை தீர்ந்தது என்று நினைக்கும் குடும்பத் தலைவனைக் கொண்ட ஒரு கிராமத்துக் குடும்பத்தில் பெண்ணாக பிறந்த நாயகி சாத்விகா வேதவல்லிதான் கதையின் மையப் புள்ளி.
ஆனால் அம்மாவின் ஒத்துழைப்பில் பத்தாவது வரை மட்டுமே அவரால் படிக்க முடிகிறது. உடனே ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
ஆனால் அங்குதான் அவள் வாழ்க்கையில் திருப்பமே ஆரம்பிக்கிறது. அவளை மணம் முடிக்கும் நாயகன் துல்கர் சல்மான், முதல் இரவிலேயே சாத்விகாவின் கனவு விண்வெளிக்குச் செல்வது என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கான பின்புலமாக இருந்து செயல்படுகிறார்.
அதற்காக குஜராத் போய் இரண்டு ஷிப்ட் வேலை எல்லாம் பார்த்து மனைவியைப் படிக்க வைக்கிறார். அவர்கள் இருவரின் கனவு நனவானதா என்பதுதான் படத்தின் கதை.
ஒரு பெண் கதையின் மையப் புள்ளியாக இருக்க, அவளுக்கு ஆதரவாக மட்டும் இருக்கக்கூடிய ஒரு நாயகன் பாத்திரத்தில் துல்கர் சல்மான் தவிர வேறு யாரும் நடிப்பார்களா என்று தெரியவில்லை. ஒரு சண்டை, ஒரு நடனம் இல்லாமல் கூட பெண்களின் மனதை மொத்தமாகக் கவர்ந்து விடுவார் துல்கர்.
அறிமுக நடிகை சாத்விகா வேதவல்லியை நம்பி இத்தனை பெரிய பாத்திரத்தை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.
அதைப் புரிந்து கொண்ட சாத்விகாவும் அனுபவ நடிகை போல் அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி உணர்வுகளை பிரதிபலித்து அற்புதப்படுத்தி நடித்திருக்கிறார். இந்தியாவின் கனவுக் கன்னியாக இவர் மிளிரும் நாள் தூரத்தில் இல்லை.
ஹாலிவுட் வரை சென்று நடிக்கும் தகுதி சாத்விகாவுக்கு இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
நாயகியாக இல்லாவிட்டாலும் அதற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு பெண்ணின் பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட ஸ்ருதி ஹாசனையும் பாராட்டலாம். ஆனால் எந்நேரமும் கையும் வாயும் புகை பிடிப்பதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்திருக்கலாமே..?
இவர்களுடன் ருஹானி ஷர்மா, கெளதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவின், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா உள்ளிட்டு அனைவருமே தங்கள் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலும் முடிவுக் காட்சியிலும் மட்டுமே வந்தாலும் நாசரின் பாத்திரம் நச்சென்று மனதில் பதிகிறது.
பூமி தொடங்கி ஆகாயம் வரை ஒரு பிரம்மாண்ட நர்த்தனமே ஆடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்தின் ஒட்டுமொத்த ஜீவனையும் திரையில் கொண்டு வந்திருக்கிறது. தடுக்கி விழுந்தால் பாடல்கள் என்று சொல்ல வேண்டிய அளவில் இருந்தாலும் அவை படத்தின் உணர்வை மேம்படுத்தவே செய்கின்றன. இன்னொரு தேசிய விருதுக்கு இந்த படத்தின் மூலம் குறி வைக்கிறார் அவர்
பெண் கல்வியின் முக்கியத்துவம் மட்டுமன்றி அதில் ஆணின் பங்களிப்பையும் தொட்டு நவீன சிந்தனையுடன் படத்தை எழுதி இயக்கியிருக்கும் பவன் சதினேனி, கனவு காணும் உரிமையும் தகுதியும் எல்லோருக்கும் இருக்கிறது என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.
பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பார்த்து பயன்பெற வேண்டிய அற்புதமான படைப்பு.
இந்த வருடத்துக்கான தேசிய விருதுப் பட்டியலில் தவிர்க்க முடியாமல் பங்கெடுக்கப் போகும் படம் இது.
ஆகாயத்தில் ஒரு தாரகை – எப்போதோ வரும் நல்ல படம்.!
– வேணுஜி