September 7, 2024
  • September 7, 2024
Breaking News
July 6, 2024

7ஜி திரைப்பட விமர்சனம்

By 0 122 Views

அது என்னவோ சோனியா அகர்வாலுக்கும் 7 ஜி நம்பருக்கும் அப்படி ஒரு ஒற்றுமையோ?. 7 ஜி ரெயின்போ காலனி படம்தான் அவருக்கு நல்லதொரு பெயர் பெற்றுத் தந்தது. 

இத்தனை வருடங்கள் கழித்து 7ஜி என்ற தலைப்பில் இன்னொரு படம்.. இதிலும் சோனியா அகர்வால்தான் முக்கிய பாத்திரம் ஏற்று இருக்கிறார். 

ஆனால் அவர் படத்துக்குள் இருக்கிறார் என்பதைப் பாதி படம் முடிந்த பின்தான் நம்மால் கண்டுகொளள முடிகிறது. அதுவரை ஸ்மிருதி வெங்கட்தான் படத்தின் நாயகியாக இருக்கிறார். 

நாயகன் ரோஷன் பஷீரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்குத் தாயான பின் தங்கள் கனவு இல்லமான புதிய ஃபிளாட்டில் குடியேறுகிறார் ஸ்மிருதி வெங்கட். அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு வந்து சென்ற ரோஷனின் முன்னாள் காதலி சினேகா குப்தா, தன் காதலனை மணமுடித்ததால் ஸ்மிருதி வெங்கட்டின் மேல் பொறாமைப் பட்டு அவரைப் பழிவாங்க நினைக்கிறார். அதற்கு அவர் கைக்கொள்ளும் வழி மாந்திரீகம்.

ஒரு பக்கம் சினேகா குப்தா மாந்திரீகத்தை ஸ்மிருதியின் மேல் ஏவி விட, இன்னொரு பக்கம் அந்த பிளாட்டில் சோனியா அகர்வாலின் ஆவியும் குடி இருக்கிறது. இந்த உயிருள்ள மற்றும் உயிரற்ற பேய்களிடம் மாட்டிக்கொண்ட ஸ்மிருதி வெங்கட்டால் அந்த அமானுஷ்யங்களை எதிர்த்துப் போராடி வாழ முடிந்ததா என்பது மீதிக்கதை.

ஆக கதையின் மையப் புள்ளி ஸ்மிருதி வெங்கட்டின் மேல்தான் இருக்க அவர்தான் படத்தின் ஒட்டுமொத்த நாயகியாகிரார். ஆனாலும் பின் பாதியில் ஒட்டிக் கொள்ளும் சோனியா அகர்வாலைப் படத்தின் இன்னொரு நாயகியாகக் கொள்ளலாம்.

ஸ்மிருதியின் கணவராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், அவ்வப்போது வெளியூர் போய்விட்டு முன்னாள் இன்னால் காதலிகளுடன் ஆளுக்கு ஒரு டூயட் பாடிவிட்டு ஃப்ரீயாக இருக்கிறார்.

ரோஷன் பஷீரின் முன்னாள் காதலி சினேகா குப்தாவின் நோக்கம் நமக்குப் புரியவில்லை அவருக்கு ரோஷனை அடைய நினைப்பதை விட ரோஷனை அடைந்த ஸ்ருதியை பழிவாங்குவதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்பது புரியவில்லை. 

ஆனால் கிளாமர் டிரஸ்ஸில் அவர் அமர்ந்து கொண்டு மாந்திரிகம் செய்யும்போது அமானுஷ்ய சக்திக்கே அவர் மீதே ஆசை வந்து அவர் மீதே பாய்ந்து விடுமோ என்று பயமாக (!) இருக்கிறது.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையோடு நிறுத்திக் கொள்ளாமல் தானும் ஒரு பாத்திரத்தில் வந்து போகிறார். காமெடி வில்லனாக… அதிலும் ஜொள்ளனாக அவரைப் பார்ப்பதற்கு சிரிப்பாக வருகிறது.

சுப்பிரமணிய சிவா, கல்கி என உடன் நடித்திருப்பவர்கள் அட்மாஸ்பியருக்கு பயன்பட்டு இருக்கிறார்கள். அதிலும் ஏழெட்டு காட்சிகளில் வரும் சுப்பிரமணிய சிவா ஒவ்வொரு காட்சியிலும் பேசும் ஒரே வசனம் “என்னம்மா… என்ன ஆச்சு..?” என்பது மட்டும்தான்

ஒரே பிளாட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் அதனை அலுப்புத் தெரியாமல் பல கோணங்களில் படம் பிடித்து இருக்கும் ஒளிப்பதிவாளர் கண்ணாவைப் பாராட்டலாம்.

படத்தின் இயக்குனர் ஹாரூண், இந்தப்படத்தை எழுதியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

நாம் பார்த்துப் பழகிய கதைக் களம் என்றாலும் இந்த களத்தில் பயணிக்காத புதிய முகங்களை வைத்து இயக்கி இருப்பதால் ஃப்ரஷ் ஆன படமாகத் தோன்றுகிறது.

7ஜி – ஓகேதான் ஜி..!