நெடுஞ்சாலையை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 1,300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
அதன் பின்னணி…
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
ஆனால், மூடப்பட்ட கடைகளில் உள்ள மதுபானங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யவும், உட்புற பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் 1,700 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து அதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வகைமாற்றம் செய்யாமல் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருந்தால் அந்த கடைகளை உடனடியாக மூட வேண்டும். வகைமாற்றம் செய்யாமல் இனி புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் மொத்தம் 5 மண்டலங்களுக்கும் சேர்த்து சுமார் 1,300 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. இந்த 1,300 கடைகளிலும் இருந்த மதுபானங்கள் மற்றும் பொருட்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன.